வனம் வளர்ப்போம்
=================
=================
ஹிந்து மதத்தில் எல்லா உயிரினங்களும் கடவுளின் ரூபமாகவும் அனுபூதியாகவும் கருதப்படுகிறது. ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லாமே அவன் குடியிருக்கும் கோயில். எல்லா கோயில் தலங்களிலும் தீர்த்தம், விருட்சம், மூர்த்தி என்பது விசேஷமானது. ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. பட்சிகளும், விலங்குகளும், மரங்களும் தொன்றுதொட்டு நம்மால் துதிக்கப்பட்டுவருகிறது, அதனால் ஜீவகாருண்யத்தை மிகவும் போற்றுகிறோம்.
மனிதனாகப்பட்டவன் தன்னுடைய வாழ்நாளில் மரங்கள் நட்டு வளர்த்து அதை பராமரித்தால், அவனுக்கு புண்ணியம் கிட்டும் என்கிறது புராணங்களும் சாஸ்திரங்களும். சுற்றுச் சூழலுக்கு மாசு விளைவிக்காத ecosystem காப்பாற்றும் வகையில் வனத்தை வளர்க்க மதம் வகை செய்துள்ளது. வனம் என்றால் என்ன மரங்களை நடவேண்டும்? அன்றாடம் வீட்டில் பயிர் செய்யும் உணவு மற்றும் மூலிகை தாவரங்கள் அல்ல. காலத்திற்கும் நன்மை பயக்கும் விருட்சங்களாய் இருக்க வேண்டியது அவசியம்.
வனம் வளர்ப்பது, ‘வன மகோற்சவம்’ கொண்டாடி ஊர் மக்கள் கூடி ‘வன போஜனம்’ உண்ணவேண்டும் என்கிறது கார்த்திகேய புராணம்.
"ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும், ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்களுக்கில்லை நரகம்தானே."
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும், ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்களுக்கில்லை நரகம்தானே."
ஒவ்வோருவரும் கார்த்திகை மாதத்தில் சுக்ல பட்சத்தில் (வளர் பிறை நாட்களில்) ஒரு அரசு, ஒரு ஆல், ஒரு வேம்பு, மூன்று விளாமரம், மூன்று வில்வ மரம், மூன்று நெல்லி, பத்து புளிய மரம், ஐந்து மாமரம், ஐந்து தென்னை ஆகிய ஒன்பதுவகை புண்ணிய மரங்களை நட்டு வளர்க்கவேண்டும். இவற்றில் ஒன்றையேனும் நட்டு வளர்த்தவருக்கு நரகம் இல்லையே என்கிறது இந்த கார்த்திகேய புராணம்.
கார்த்திகை மாதத்தில் 'ஆம்லா' என்னும் நெல்லி மரம் கீழ் திருமாலும் லட்சுமி தேவியும் வாசம் செய்வது ஐதீகம். சாஸ்திர சம்பிரதாயம் மூலமாக பூமியை திடப்படுத்தி, மழையை உண்டாக்க, நிலத்தடி நீர் நிலைகளை பேணும் வகையில், மரங்களை வைத்து ஆராதிக்க வேண்டும் என்ற கருத்தை நம் முன்னோர்கள் வலியுறுத்தியுள்ளனர். அதேபோல் மற்ற மரங்களுக்கும் ஒவ்வொரு இறைதொடர்பு உள்ளது என்பதை நாம் அறிவோம்.
சில இடங்களில் மரத்தை நட்டபின் தண்ணீர் ஊற்றுவதில்லை, வளர்ந்தபின் அதை பராமரிக்காது விட்டால் வெட்டிகொண்டு போவது வழக்கமாகிவிட்டது. இன்று பல இடங்களில், மரம் வைக்கும் இயற்கை அமைப்பு ஆர்வலர்கள் ஓர் அளவுக்கு இதை பாதுகாத்து வருகிறார்கள். நீண்ட நாட்களாய் இந்த கட்டுரையை பதிவிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், இன்றுதான் சந்தர்ப்பம் கிட்டியது.