About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சைவ உணவைப் போற்றுவோம்!

‘முக்காலத்தையும் உணர்ந்து சொல்லும் பகவான்’ என்று தலைப்பிட்டிருந்த ஒரு யுடியூப் காணொளி கண்ணில் பட்டது. அருள்வாக்கு சொல்லும் கல்பாக்கம் பகவான் என்ற இறையருளாளருக்குச் சுமார் நாற்பது வயது இருக்கும். சைவம்/அசைவம் வேற்றுமையைப்பற்றி பேட்டி கண்டவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். வெறும் காய்கறி கீரை வகைகளை உண்டு, அசைவம் சாப்பிடாதவர்களை நீங்கள் எப்படி சைவம் என்று சொல்வீர்கள்? சைவம்/சைவர் என்று எதுவுமில்லை என்றார். காய்/கனி தரும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அதைக் கொன்று உண்பது சைவம் ஆகாது என்று ஜீவகாருண்யம் நோக்கில் மேலோட்டமாகச் சொன்னார்.

இவர் சொன்னது சரியா? அடிப்படை உண்மையைப்பற்றி மாணிக்கவாசகரின் சிவபுராணம் என்ன சொல்கிறது? ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி...’ என்று ஆன்மாவின் பயணம் போய்க்கொண்டிருக்கும். கீரை, காய்கனி, தாவரங்களும் அதன் வகைகள் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பயன் தரும்படி அதன் சிருஷ்டி அமைந்துள்ளது. என்னதான் அதற்கும் ஜீவன் உண்டு என்றாலும் அவை தியாகத்தின் சின்னமாகப் படைப்பாகி அதன் வளரியல் பயன் முழுமையானதும் அடுத்தடுத்து அதன் ஆன்மா உயர்நிலையை எட்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் குடிக்கும் தண்ணீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் ஜீவனுண்டு. உயிரற்ற பஞ்சபூதம் உண்டா?ஒரு தாவரத்தின் உயிர் மூலாதாரமாக இருக்கும் வேரைப் பறிக்க வேண்டுமானால் அதைச் செய்யும் முன் சாப நிவர்த்தி மந்திரம் சொல்லி உயிரூட்டவேண்டும் என்பது சித்தர்கள் விதி. ஆனால் காய்/ கனிகளைக் கொய்வதால் பாவம் வருவதில்லை.
கலியுகத்தில் ஸ்ரீதத்தாத்ரேயரின் முதல் அவதாரமான ஸ்ரீபாதஸ்ரீவல்லபர் விளக்கிய கருத்தை என் நூலிலிருந்து இங்கு பதிக்கிறேன். “ஜீவாத்மா பரமாத்வோடு சங்கமிக்க அது பிரம்மானந்தத்தை உணரும். ஜீவாத்மா வெறும் கல்லாக இருந்தாலும் அது வேதனைகளை உணர முடியும். அதன்பின் அது ஓர் உலோகத்தில் போய் தங்கும். அப்போது அது ஆழ் உரக்க நிலையில்தான் இருக்கும். ஓர் உலோகத்தின்மேல் அமிலத்தை ஊற்றினால் அதற்கு உரக்க நிலையில் வேதனைகள் இருக்கும், அது பிற்பாடு உருக்குலைந்து வேறொரு உலோகத்தினுள் தங்கும். அதன்பின் அது புல்லாகி, மரம் செடி கொடியாகி வேர்விட்டு நிலைத்து உயிர் இருந்தும் உயிரற்றதாக இருக்கும். அதன்பின் அது புழு பூச்சியாக ஏற்றம் பெறும். அடுத்த நிலையில் மீனாக, பறவையாக, விலங்காகப் பரிணாமம் பெறும். அடுத்து பசு என்கிற உன்னத நிலைக்கு வரும். அது தாயாக இருந்து எல்லோருக்கும் பாலமுதை வழங்கித் தியாகம் செய்து, உணவுப் பயிருக்கு உரங்கள் தந்து பிறகு மனிதனாகப் பிறப்பு எடுக்கும். ஒவ்வொரு நிலையிலும் அதனதன் சம்ஸ்காரங்கள் செயல்பாடுகள் ஏற்றபடி அடுத்தடுத்து உயர்நிலையை எட்டுகிறது. கற்கள்/ கனிமங்கள்/ உலோகம் எல்லாமே அப்படியே பிறந்து இறக்கின்றன. பிறகு தாவரங்கள் மரங்கள், என பிறந்து இறந்த பின் மனித பிறப்பை அடைகின்றது. மனிதனாய்ப் பிறந்தபின் அவன் தன்னுளிருக்கும் பரமாத்மாவை உணர்ந்து வீடுபேறு அடையவேண்டும். பாவங்கள் செய்து தாழ்நிலையை அடைதல் கூடாது” என்பதாகும். நம் மறுபிறப்புகள் போக புதிதாய் மனித பிறப்பை எட்டும் இதுபோன்ற ஆன்மாக்களுக்கு அளவே இல்லை. இதை நாம் பெரிதாக சிந்திப்பதில்லை. பிரபஞ்ச தோற்றம் முதல் இன்றுவரை மக்கள் தொகை பெருகித்தான் வருகிறது.
படைப்பான மண்/ பாறைகள்/தாவரங்கள் என எல்லாமேவா நமக்கு உபயோகமாகிறது? உலோகங்கள் அனைத்துமா சமையல் பாத்திரங்களாக, கோயிலில் மணியாக, வேலாக சூலமாக பூஜைப் பாத்திரங்களாக, மடப்பள்ளி அண்டா குண்டாவாக, மின்சாதன உபகரணமாக ஏற்றம் பெறுகின்றன? நமக்குத் தெரிந்து விற்கப்படாமல் பாத்திரக் கடையில் வருடக்கணக்கில் வாங்குவாரற்றுக் கிடக்குப்பவை எவ்வளவோ உண்டு! ஏன்? பயன்பட அந்த ஆன்மாவுக்கு இன்னும் விடிவு வரவில்லை. Nano அளவில் சிந்திக்க வேண்டிய அதி சூட்சுமமான சங்கதி இது.
சைவ உணவுச்சங்கிலி இயற்கையாகவே படைப்பாகியபோது அதை எப்படித் தர்க்கம் செய்ய முடியும்? மலர்கள் இலைகள் கனிகள் என எல்லாமே இறை வழிபாட்டிற்கு/ உணவிற்கு என இருக்கும்போது அதை பறிப்பதால் பாவம் எப்படி வரும்? மனிதனின் சைவ நெறியால் அவை ஆன்ம உயர்வும் படிநிலை ஏற்றமும் பெறுகின்றன என்பதே உண்மை. அதை உயர்த்துவது நமக்குப் புண்ணியமே! உணவுகளில் பிராணிகளைக் கொன்று அசைவம்/புலால் உண்பது மட்டுமே பாவம் என்று கண்டிக்கப்பட்டுள்ளது. பிராணிகள் இவனுக்கு உணவனால் அது ஏற்றம் பெறும் ஆனால் இவன் தாழ்நிலை பிறப்பை அடைகிறான். இதுதான் சூட்சுமம்! ஆக, சைவ நெறி போதிக்கும் உன்னத உணவின் உயர்வை ஆழமாக அறிந்துகொள்ளாமல் இவர் பேசியுள்ளார்.



ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

அன்றே வீச என்ன அவசரமோ?

விநாயக சதுர்த்தியன்று காலையில் களிமண் பிள்ளையாரை வைத்துப் பூஜை செய்தபின் அன்று மாலைக்குள்ளாகவே சாற்றிய மலர் மாலை காயும் முன்பே, வைத்த சந்தனத்தின் ஈரம் காயும் முன்பே அதை நீர் நிலையில் வீச வேண்டும் என்று யார் கிளப்பி விட்டார்களோ தெரியவில்லை. டிவி செய்தியில் காட்டிய படத்தைப் பார்த்தால் அப்படித்தான் உணர்த்தும்!

விநாயகருக்கு அன்று மாலையிலும் விளக்கேற்றி அகவல் படிக்க வேண்டும். மறுநாள் காலை (இன்று) புனர் பூஜை உண்டு. விளக்கேற்றி மலர்கள் தூவி வெற்றிலை பழம் பாக்கு வைத்துத் தூபதீபம் காட்ட வேண்டும். பிறகு அந்த விநாயகரை சற்றே வடக்கு நோக்கி நகர்த்தியதும் பூஜை நிறைவு பெறும்.
அதாவது உங்கள் இல்லத்தில் எழுந்தருளிய விநாயகருக்கு எல்லாம் வைத்துப் படைத்து வழிபட்டபின் அதில் அரூபமாக விழித்த நிலையிலுள்ளவரை முறையாகத் தூங்கவைத்து மறுநாள் கடலில் கரைத்து விசர்ஜனம் செய்யவேண்டும். ஏன் விசர்ஜனம்? தினமும் மண்/ கல்/ உலோக விக்ரஹத்தை வைத்து வழிபட்டால் கோயிலைப்போல் வீட்டிலும் நித்திய நைவேத்தியங்கள் படைத்து உபசரிக்க வேண்டும்.
போகிற போக்கில் மக்களால் ஒரு பொழுதுகூட விளக்கேற்ற முடியாமல் போகுமோ? 😪

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மதமும் சமத்துவமும்!

ஒரு நாட்டின் பிரதமர் ஆகப்பட்டவர் கோயிலுக்குச் சென்றால்அங்கவஸ்திரம் போர்த்திக்கொண்டுநெற்றியில் விபூதி சந்தனம் குங்குமம் தரித்துத் தன் பக்தியை வெளிக்கட்டினால்அதில் தவறென்னகங்கையிலும் அயோத்தியிலும் தீப ஆரத்தி எடுத்தாலோஇமயமலைச் சாரலில் தியானம் செய்தாலோஇதில் குற்றம் காண என்ன இருக்கிறதுஇந்துத்வா சாராத அநேகர்களும் இச்செயலைக் கண்டித்தும் பரிகசித்தும் வருவது வேதனையான விஷயம். அதைப்போன்றேஅரசியல் எதிரணியினர்களும்!

சமத்துவம் போற்றும் இந்தியா போன்ற நாட்டின் பிரதமரோ / குடியரசுத் தலைவரோ இந்துவாக இருந்து, தங்களுடைய சனாதனக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வெளிக்காட்டக் கூடாது என்று இந்திய அரசியல் சட்டம் எங்கேனும் சொல்லியுள்ளதா? அவரவர் மத சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கத் தடை விதிக்கிறதா? இல்லையே! இந்திய அரசியல் சாசனத்தின் முன்னுரையில், 42-வது திருத்தம் கொண்டுவந்த பிறகுதான், பார்க்கும் எல்லாவற்றிலும் தவறு கூறத் தொடங்கினார்கள்.

அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தேவையில்லாமல் அதில் செய்த திருத்தம் என்ன? SOVEREIGN SOCIALIST என்ற சொற்களை அதில் இணைத்தார். இது எப்படி இருக்கிறது என்றால், ஆச்சாரமான ஒருவர், நவநாகரிகமாகவும் இருக்க வேண்டும், சமூகத்துவத்துடன் தர்மநெறியும் காக்க வேண்டும், ஆடு / கோழி வளர்க்க வேண்டும், அதேசமயம் சுத்த சைவமாக இருக்க வேண்டும் என்று சொல்வது போன்றது.

இன்றைக்குப் பிரதமர் மோடியின் யோசனைகளையும் பாவனைகளையும், சீனா / பாகிஸ்தான் தவிர, உலகின் பெரும்பான்மையான நாடுகள் எவ்விதத்திலும் குறை கூறியதில்லை. உலகமே வியந்து போற்றும் ஆளுமைமிக்க நபராகத் திகழ்கிறார். நேபாளம், இந்து ராஜ்ஜியம்தான்! அது சீனாவுக்கு அடிபணிந்துபோவதால், மனு சிருஷ்டித்த நேபாளத்தை அடியோடு மாற்றிவிட முடியுமா என்ன? மதரீதியாக நாம் எவ்விதம் நடத்தை கொள்ள வேண்டும் என்று ஐரோப்பியர்கள் அறிவுரை சொல்ல விதியில்லை. தன்னுடைய வயதான தாயைச் சென்று பார்ப்பதும், அத்தாயானவள் பசுவுக்கு உணவு அளித்துவிட்டுத் தன் மகனுக்கு இனிப்பு ஊட்டியபின், இவர் கையில் நூறு ரூபாயை அன்பளிப்பாகத் தந்ததைப் பலரும் கேலியாகப் பேசினார்கள். தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று கிண்டலடித்தனர். மேற்கத்திய மக்கள், தங்களுக்கு இப்படியொரு பேறு கிடைக்காதா என்று ஏங்கும்போது, நம் நாட்டில் உள்ள சில துர்புத்திப் படைத்தவர்கள், பரிகாசம் செய்வது அழகன்று.

கடந்த ஆண்டு Infinity Foundation என்ற அமைப்பின் தலைவரான அமெரிக்கா வாழ் இந்தியர் ராஜீவ் மல்ஹோத்ரா, இந்தியாவின் மதகோட்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளையும் வகையில் பேசி, சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். மேல் நாட்டில், அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று வருடத்துக்கு ஒரு நாள் வகுத்து, முறைவைத்துக் கொண்டாடுவதோடு சரி. அதன்பின், அவர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்று அறிய முற்படுவதில்லை. ஏனென்றால், அவர்களுடைய கலாசாரமும் வளர்ப்பும் அந்த ரீதியில் உள்ளது. ஆனால், நம் நாட்டில் சிறுவயது முதலே நாம் எல்லோரும் ஒரே வசுதேவ குடும்பமாக இருந்து வளர்ந்தோம். என்னதான் நமக்கு வயதானாலும், பெற்றோர் சொல்லை கேளாது போவோமோ? அறவே இல்லை! இங்கே அப்படிப்பட்ட சிறப்பு தினங்களைக் கொண்டாடும் பழக்கமில்லை. ஏனென்றால், தினமும் அவர்களைச் சுற்றியே நம் வாழ்க்கை நடக்கிறது. நம் பாரம்பரியத்தில்தான், முந்தைய மூன்று சந்ததிகள் வரையாவது மூதாதையர்கள் பற்றித் தெரிந்துவைத்துள்ளோம். ஏனென்றால், வம்சாவளி விவரம் அவர்களுடைய மரபணுவின் அடிச்சுவடாக, நம்முடைய பெயர்களில் தொன்றுதொட்டு வருகிறது. ஆனால், மேற்கத்தியர்கள் தங்களுடைய வம்சாவளியையும், பெயர்களை நினைவுபடுத்தவும் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில் உள்ளனர். எவன் ஒருவன் தன் மூதாதையர்களை மறந்தானோ, அவன் நிச்சயமாகத் தன் குலதெய்வத்தை மறந்திடுவான் என்பது நம் சொல்வழக்கு. உண்மைதான்! ஏனென்றால், குலதெய்வத்தை அறிந்தால், அவ்வூரில் தன் பூர்வீகத்தையும் தன் பரன்-பரை விவரத்தை அறிந்துகொள்வான்.

பிரதமர் மோடி, அண்மையில் அயோத்தியில் பூமி பூஜையில் கலந்துகொண்டதை எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் விமரிசித்தன. இந்திய அரசியல் சட்டப்படி, நாட்டின் பிரதமர் இதுபோன்ற மதரீதியான விழாவில் கலந்துகொள்ளக்கூடாதா என்ன? அயோத்தி வழக்கு வெற்றிபெற்றால், தன்னுடைய பதவிக் காலத்தில் அங்கே கோயில் கட்டுவதாகத் தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி தந்திருந்தால், அதை நிறைவேற்றுவது ஒரு நல்ல தலைவனின் கடமை. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன், சோம்நாத் ஆலய கும்பாபிஷேக வைபவத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத் கலந்துகொள்வதை, பிரதமர் நேரு இது சமத்துவ செக்யூலர் கொள்கைக்கு எதிரானதாகும்என்று கடுமையாகச் சாடினார். அதற்கு இவர், ‘இதில் என்ன இருக்கிறது? ஒரு கிறித்துவ தேவாலயத்திலோ, மசூதியிலோ அவரவர் விழா நடந்து, அதற்கு என்னை அழைத்தால், அங்கும் இப்படித்தான் போவேன்என்று நேருவுக்குப் பதிலளித்தார். இதற்குப்பின், நேரு எல்லா முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். இதுபோன்ற மதரீதியான விழாக்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை. அத்தகையதொரு செயல்பாடு PREAMBLE-க்கு எதிரானது. அதை அனுமதிக்க முடியாதுஎன்று குறிப்பிட்டு எழுதினார்.

அப்படியென்றால், ஒரு பிரதமரோ, குடியரசுத் தலைவரோ, தனிப்பட்ட அளவில் பக்தராக விழாவில் பங்கேற்பதை எப்படிக் குறைகூற முடியும்? பதவியில் இருந்து அவர்கள் இறங்கும்வரை அவ்விழா காத்திருக்குமா என்ன? ஆக, சுதந்திரம் கிடைத்த அந்நாள் முதல் இந்நாள் வரை, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு எதிர்த்து வந்துள்ளனர். SECULARISM என்பதை வேண்டுமென்றே தவறாகச் சித்தரித்தனர்.

அப்படிப் பார்த்தால், 1985-ம் ஆண்டு ராஜராஜ சோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழாவுக்கு, இந்திரா காந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வந்திருக்கவே கூடாது. ஆனால் வந்தாரே! எம்ஜிஆர் இருந்தபோது, கும்பகோணம் மகாமகம் விழாவுக்கு முந்தைய நாள் இரவே ரகசியமாகப் போய் தரிசித்துவிட்டு வந்தாராம். பிற்பாடு, 1992-ல் ஜெயலலிதா தன் தோழியுடன் அசத்தலாகப் போய், அங்கே தீர்த்தவாரியில் பங்குகொண்டு அமர்க்களம் செய்தார். பிற்பாடு முதல்வர்கள், ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்கள் என பலரும் கிறிஸ்துமஸ் திருப்பலி, ரமலான் நோன்பு, சந்தனக்கூடு உர்ஸ், மகாவீர் ஜெயந்தி என அனைத்து விழாக்களிலும் தவறாமல் கலந்துகொண்டு வருவது நமக்குத் தெரிந்ததே. பள்ளிவாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும் கணிசமான அளவில் நிதி மற்றும் உணவுப் பொருள்களை தமிழக அரசு தந்துதவுகிறது. இன்னும் ஒருபடி மேலே போய், அரசியல் எதிரிகளைத் தீர்த்துக்கட்ட ஆக்ரோஷ மிளகாய் யாகம், பரிகாரம், மாந்திரீகக் கழிப்பு என்று சகலத்தையும், பதவியில் இருக்கும்போதே செய்துள்ளார்களே!

பதவியில் இருந்தால், தன்னுடைய மதத்தை வெறுக்க வேண்டும், முக்கியப் பண்டிகைகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று சட்டத்தைக் காட்டிப் பேசுவது அபத்தம். இந்துவாகப்பட்டவனுக்கு, பிறப்பு முதல் இறப்பு வரை தன்னுடைய ஸ்மிருதி மற்றும் சமயக் கோட்பாடுகள் தொடர்ந்து வரும். அதைப் பின்பற்றுவது அவன் கடமை. நாட்டின் தலைவர் அப்படி அனுசரிக்காமல், தனியே சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிக்கச் சொல்வது எளிதல்லஎன்று, 1963-ம் ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதியரசர் கஜேந்திர கட்கர் கருத்து தெரிவித்தார். அதுபோல், அரசியல் கட்சி எந்தவொரு மதத்தின் கோட்பாடுகளிலும் தலையிடக் கூடாது என்று இருக்கும்போது, திமுக ஆட்சிக் காலத்தில், தை முதல் நாளைத் தமிழ் வருடப் பிறப்பாகத் திருத்தம் செய்து உத்தரவு பிறப்பித்த கலைஞரின் செயல் மட்டும் சரியா? ‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்என்று பசும்பொன் தேவர் பெருமானார் கூறியதை நினைவுறுத்துகிறேன்.

தெய்வீகம் போற்றும் இந்தியா போன்ற நாட்டில், எல்லா மதங்களும் சமம் என்று நேரு / இந்திரா சொன்னதால், இந்நாட்டை எல்லோரும் கிறித்துவ / முஸ்லிம் நாடாக ஏற்கமுடியுமா? அது சகிக்க முடியாத அவலட்சணமாக இருக்கும். சாதி / மத கட்சியே அரசியல் கட்சியாக இருக்கக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14-16, 25 சொல்வதாகச் சுட்டுவது, இன்று எள்ளளவும் நடைமுறைக்குப் பொருந்தாது. ஏன்? அடிப்படையில் எல்லாமே ஜாதி-மத வாக்கு வங்கியில் மூழ்கியுள்ளதால், பிரித்துப் பார்க்க இயலாது’.


religious equality