About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 3 ஆகஸ்ட், 2026

மானிடப் பிறவி!

இங்கே பதிவில் இருப்பது உண்மையான தத்துவார்த்தமான நல்ல கருத்துள்ள படம்.


இன்னொரு பிறவியே வேண்டாம் சாமி என்றும், வாழும்வரை நோயற்ற ஆரோக்கியம் இருந்தால் போதும் என்றும், எப்படியாவது உயிர் பிழைத்து மீண்டு வந்தால் போதும் என்றும், இனியும் வாழப்பிடிக்கவில்லை விபரீத முடிவு வேண்டும் என்றும், இதுபோல் ஒவ்வொருவரும் பல வேண்டுதல்களை வைக்கிறார்கள். இதில் சரி/ தவறு என்று எதுவுமில்லை. அவரவர் அனுபவங்கள் தந்த வலியும் வேதனையும், புத்தியின் செயல்படும் அக்கணம் நிலவும் சூழலுமே இதை முடிவு செய்யும். 

நிறைவான வாழ்க்கையை வாழ்ந்தான் என்றும், ஆயுசு கெட்டி போல எப்படியோ பிழைச்சிட்டான் என்றும், வாழ வேண்டிய வயசுல தப்பான முடிவைத் தேடிகிட்டான் என்றும், சமூகத்தில் பல விமர்சனங்கள் வரும். எதுவாயினும் எல்லா முடிவுகளும் முடிவானவையே என்பது கர்மாவின் தத்துவக் கோட்பாடு. புல் பூண்டு மிருகம் மனிதன் என்று நிலைகள் உயர எத்தனை லட்சம் பிறவிகள் எடுத்து ஓர் ஆன்மா முன்னேறுகிறது என்பதைச் சிவபுராணம் நன்கு உணர்த்துகிறது. 

அப்படி இருக்கும்போது இந்த ஆன்மா சிவனுக்குச் சொந்தமானது. நாம் அதன் காப்பாளர்கள் மட்டுமே! பிறவி தோறும் வந்துவிட்டுப்போகும் நமக்கு அதை அவனிடமே துப்புரவாக ஒப்படைப்பது வரை பிறவிப் பணி ஓயாது, அதன் மீது உரிமையைக் கோர முடியாது.

-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 20 ஜூலை, 2026

"குலதெய்வம் காலாவதி ஆகுமா?"

இப்படத்திலுள்ள ஜோதிடர் காணொளி ஒன்றில் "ஒவ்வொரு வம்சத்திலும் அதன் குலதெய்வம் எத்தனை தலைமுறை வரைக்கும் காக்கும்?" என்பதைப் பற்றிப் பேசினார். 

அந்த விளக்கம் எதுவும் எனக்குத் திருப்திகரமாக இருக்கவில்லை.

வம்சத்தில் ஒரு மூதாதையர் இருந்தார் என்றால் அவரிலிருந்து அதிகபட்சமாகப் பதினான்கு தலைமுறைகள் தொடர்ந்து அந்த வம்சக் கிளைகள் வரும். வம்சத்தில் ஒரு குடும்பத்தில் எல்லாருக்கும் உடனே நின்றுவிடாது. அதில் ஒரு மகனுக்கு நிற்கும். அடுத்த தலைமுறையில் அவன் அண்ணன் / தம்பி யாருக்கேனும் நிற்கும். அடுத்த தலைமுறையில் அவன் பங்காளிக்கு நிற்கும். குலதெய்வத்தை ஆராதிக்க இப்படி ஏதோ ஒரு கிளையில் இன்னும் பல தலைமுறைகளுக்கு அக்குலதெய்வம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். தெய்வம் எக்காலத்திலும் விட்டுப்போகாது. 

சங்கிலித் தொடரில் விட்டுப்போவது அதுவல்ல நாம்தான். அதாவது இனி அந்த வம்சத்தில் நாம் பிறப்பு எடுக்க அவசியமில்லாதபோது நின்றுபோகும். ஒரு தந்தைக்கு மூன்று மகன்கள் என்றால் ஒருவனுக்குப் பெண் குழந்தை மட்டும் இருக்கும், இன்னொருவனுக்கு குழந்தை இல்லாமலோ திருமணம் ஆகாமலோ இருக்கும், ஒருவனுக்கு ஆண் வாரிசு இருக்கும். அக்குடும்பம் அடுத்த தலைமுறைக்கு வளராமல் படிப்படியாகக் குறைந்து போய் குலதெய்வ ஆராதனை நின்றுபோகும். அதுவே பெரியப்பன்/ சிற்றப்பன் மகன்களுக்கு ஆண் வாரிசுகள் இருக்கலாம். அவர்களது அடுத்த தலைமுறையில் தொடர்ந்து ஒரு கட்டத்தில் ஒவ்வொன்றாய் நிற்கலாம். 

ஆக இப்படியாக வம்சாவளியில் தன் மகன்/பங்காளி வயிற்றுப் பேரன்கள் கொள்ளுப்பேரன்கள் ஒவ்வொன்றாய் விடுபடும். அதற்கேற்ப அவரவர் ஜாதகத்தில் 12 ஆம் வீட்டில் குருவின் நிலை அமையும். குலதெய்வம் அதுவரை காலாவதி ஆகாது. தக்க காலத்தில் வம்சத்தில் ஒவ்வொருக்கும் விடுதலை தந்து அனுப்புகிறாள். அந்த வம்சத்தில் ஏதோவொரு கிளை தொடராமல் முற்று பெறும் மற்றவை கொஞ்சம் தொடரும். இது சூட்சுமம் நிறைந்த விஷயம். 

-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 13 ஜூலை, 2026

தேவர்களுக்கு ஏன் வியர்வை வராது?

 நிழல் விழாது ஏன்?  ஆன்மீகமும் அறிவியலும் காட்டும் ரகசியம்! 

நம் புராணங்களில் தேவர்களைப் பற்றிப் படிக்கும்போது, அவர்களுக்குப் பூமியில் நடக்கும்போது நிழல் விழாது என்றும், அவர்களுக்கு வியர்வை வராது என்றும் சொல்லப்பட்டிருக்கும். சாதாரண மனித உடலுக்கு முற்றிலும் மாறுபட்ட இந்தத் தன்மைகளுக்குப் பின்னால் இருக்கும் ஆச்சரியமான காரணங்களைப் பார்ப்போம்:


தேவர்களின் உடல் நம்மைப் போன்ற பஞ்ச பூதங்களின் பௌதிகக் கூறுகளால் (நாடி, நரம்புகள், சதை, இரத்தம்) ஆனது அல்ல. அவர்களின் உடல் முற்றிலும் தூய்மையான ஒளியால் ஆனது.

சதை உடம்பு இல்லாததால், உடலில் இருந்து அசுத்தங்கள் வெளியேற வேண்டிய அவசியம் அவர்களுக்கு ஏற்படுவதில்லை. இதனால் வியர்வை வராது. அவர்களின் உடல் ஒளிரும் தன்மையுடையதாக இருப்பதால், புற ஒளி அவர்களின் உடலை ஊடுருவிச் சென்றுவிடுகிறது. ஒளி தடுக்கப்படாததால், அவர்களின் உருவத்திற்குப் பூமியில் நிழல் விழுவதில்லை.

நவீன அறிவியல் மற்றும் இயற்பியல் ரீதியாக இதை நாம் உற்று நோக்கினால்:

மனித உடலில் தசை இயக்கங்கள் மற்றும் செரிமானம் நடக்கும்போது அதிக வெப்பம் உருவாகிறது. இந்த உடல் வெப்பநிலையைச் சீராக வைத்திருக்கவே வியர்வைச் சுரப்பிகள் மூலம் வியர்வை வெளியேறுகிறது. ஆனால், முற்றிலும் ஆற்றல் வடிவமாக இருக்கும் ஒரு தேவர் உடலுக்குள் ரசாயன மாற்றங்களோ, பௌதிக வெப்பமோ உருவாவதில்லை. அதனால் வியர்வை சுரப்பதில்லை.

அறிவியல் விதிகளின்படி, ஒரு தடிமனான பொருள் ஒளியை வழிமறிக்கும் போதுதான் அதன் பின்புறம் நிழல் உருவாகிறது. ஆனால், தேவர்களின் உடல் ஒளியின் துகள்களான "போட்டான்களால்" ஆன உயர் அதிர்வு நிலையில் இருந்தால், வெளிச்சம் அவர்களைத் தடையின்றி ஊடுருவிச் செல்லும். ஒரு கண்ணாடி அல்லது தூய ஒளியின் மீது மற்றொரு ஒளி விழும்போது நிழல் உருவாகாதது போன்ற தொழில்நுட்பம் இது!

சித்தர்கள் தங்களின் ஆன்மீகப் பயிற்சிகளால் உடலின் அணுக்களை மாற்றி, அழியாத "பிரணவ தேகம்" அல்லது "ஒளி உடல்" பெற்றார்கள் என்று சித்தர் பாடல்கள் கூறுகின்றன. அந்த நிலையை அடையும்போது மனித உடலும் பௌதிக விதிகளுக்குக் கட்டுப்படாமல், இது போன்ற தெய்வீகத் தன்மைகளைப் பெற்றுவிடுகிறது!

ஞாயிறு, 12 ஜூலை, 2026

பலி படையல்!

இப்படியொரு செய்திப்படத்தை முகநூலில் பார்த்தேன். 


ஆடி மாதம் கிடா வெட்டிப் பலி படையல் போட்டுவிட்டால் குலதெய்வம் ஏமாந்து விடுமா என்ன? அதன் பிறகு அவன் பாவங்கள் செய்யாமல் தரும நெறியைப் பின்பற்றி சத்தியமாய் வாழ்கிறானா? வண்டி வண்டியாய்க் கர்ம பாரம் சுமந்து வந்துவிட்டு ஆண்டுக்கு ஒரு பலி தந்தால் ஊழ்வினை/சாபம்/பாவம் குறைந்து போய் தீர்ந்துவிடும் என்றால் கடன் வாங்கியாவது ஆடு/சேவல் பலியிட்டுப் பழைய கர்மா லோன் எல்லாவற்றையும் அடைத்து விடலாமே! 

கிராம தேவதைகள், காவல் தெய்வங்கள், முனீஸ்வரன், மதுரைவீரன், கருப்புசாமி போன்றவைகளைக் குலதெய்வமாக வழிபடும் குடும்பங்களில் ஆடு/கோழி பலியிடும் வழக்கம் தொன்றுதொட்டு உள்ளது. இது அல்லாத மற்றவர்களுக்கு இல்லை. உங்கள் குல வம்சத்தில் பலி படையல் பழக்கம் இல்லாதோர் புதிதாய் இப்படத்திலுள்ள அறிவுரையைப் பின்பற்றக்கூடாது. உஷார்! உங்கள் முன்னோர்கள் செய்து வந்து நடுவில் விட்டுப்போனது என்றால் தொடரலாம். நமக்குத் தெரிந்து பெரும்பாலும் பூசை செய்து பொங்கல் படைத்து வழிபடுவது வழக்கம்.

எனக்குத் தெரிந்து இதுபோல் பலியிடும் குடும்பங்களிலும் வினைப் பயனுக்கு ஏற்ப குலதெய்வம் எவ்வித பாரபட்சம் இல்லாமல் தண்டிக்கிறது.  அவர்களுக்கும் இன்னல்கள் ஏமாற்றங்கள் வரத்தான் செய்கிறது. இவ்விதம் பலியிடுவதால் கர்மா முற்றிலும் அழிந்து அக்குடும்பத்து இன்றைய ஆன்மாவினர் சுபிட்சமாய் வாழ்ந்து இன்னொரு பிறவி எதையும் எடுப்பதில்லை என்பதற்கு என்ன சாட்சி? மரபு வழிபாடு வேறாக உள்ளது, புரிதலும் பரப்புரையும் வேறாக உள்ளது. 🥺

-எஸ்.சந்திரசேகர்

வெள்ளி, 13 மார்ச், 2026

தென்னை மரத்தில் தேள் கொட்டினால்...!

இன்னும் சிறிது காலம் போர் நீடித்தால் உலகெங்கும் அதன் தாக்கம் பெருமளவில் பாதிப்பைத் தரும். இறக்குமதியாகும் கச்சா எண்ணெய், எரிபொருள், எரிவாயு சார்ந்தே இத்தனைக் காலமும் ஓட்டியாகிவிட்டது. இனி மாற்று உபாயம் வரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இனிமேல் தற்சார்பு வழியே உதவும்.

சூரியசக்தி, தாவர எரிபொருள், பயோகேஸ், மற்றும் புதுப்பிக்கவல்ல எல்லா வழிகளும் கையாள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது கண்கூடு. குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்ற பந்தா மேல்தட்டு கலாச்சாரம் தீவிர எரிபொருள் பற்றாக்குறையை விளைவிக்கும்.

கேஸ் சிலிண்டர் பற்றாக்குறை பீதியால் induction stove, electric rice cooker இன்னும் அதிகமாக விற்பனையாகிறதாம். அது சரி. ஆனால் இதன் அதிகரித்த தேவை மின்சாரப் பற்றாக்குறைக்கு வழி வகுக்கும். நான் கணக்கெடுத்தவரை மும்முனை இணைப்பு உள்ள வீடுகளில் கோடையில் இனி AC, Fridge, Washing machine, Induction stove, Electric rice cooker, RO, Inverter, Fan, Light, kettle எல்லாம் ஒரே நேரத்தில் ஓடினால் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு வீட்டுக்கும் அனுமதிக்கப்பட்ட 5 kw அளவைவிட மொத்த பயன்பாட்டு அளவு தாண்டிவிடும். கூடுதல் ASD விதிக்கப்படும்.

இன்னும் சிலர் வீடுகளில் முன் எப்போதோ மின்வெட்டு ஆனபோது எல்லா phase selector switch ஒரே முனையில் திருகி வைத்து அதை அப்படியே மறந்து போனவர்களும் உண்டு. மின் பளு அதிகமாகி கம்பத்தில் இருந்து வீட்டு மீட்டர் பாக்ஸ் மெயின் போர்டுக்கு வரும் கேபிள் உருகும் அபாயமும் எழும். அப்படியானால் ஒரு/ இரு முனை சப்ளை மட்டும் வரும். இதனால் மின் பளு Load demand அதிகமாகும். வரும் வாரங்களில் அடிக்கடி டிரான்ஸ்பார்மர் ட்ரிப் ஆவதும் நடக்கும். 

ஆக அவரவர் வீடுகளில் மின் பயன்பாட்டை விழிப்புடன் sanctioned load அளவுக்குள் பயன்படுத்த வேண்டும்.

-எஸ்.சந்திரசேகர்



செவ்வாய், 3 மார்ச், 2026

விருந்து!

 சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எல்லா ஊர்களிலும் இது போன்ற திருமண விழா விருந்து நடந்தது என்றால் இக்காலத் தலைமுறையினர் இதை அதிசயமாகப் பார்ப்பார்கள். முட்டுச்சந்து என்றால் நீளமாகப் பந்தல் போட்டு வழியை அடைத்து விடுவது வழக்கம். என்னதான் மேஜைகள் நாற்காலிகள் போட்டு விருந்து பரிமாறப்பட்டாலும், இன்னொருபுறம் பந்தலுக்குக் கீழே தரையில் உணவுப் பந்தி களைகட்டும். விசேஷத்திற்கு வரமுடியாத முதியவர்களுக்கு தூக்கு சம்படங்களில் எடுப்புச்சாப்பாடு வீட்டுக்கே போகும். நானும் food delivery எடுபுடி செய்துள்ளேன்.

"டேய் இதுல எல்லாம் வெச்சு அனுப்பினானா பாத்தியா?" என்று உள்ளிருந்து ஒரு குரல். "இருக்கு பாட்டி... திறந்து பாரு... பெரிய மைசூர்பா இருக்கு, தாத்தாவாலதான் அதை கடிக்கமுடியாதே நான் எடுத்துக்கவா?" என்று அடாவடியாகக் கேட்டு வாங்கிய காலம். 😀

உறவுகள் சில நாட்களுக்கு முன்னதாகவே வந்து ஒன்றாக மகிழ்ந்த தருணங்கள்... நடுநடுவே சண்டையும் வரும் சமாதானம் செய்ததும் சரியாகிவிடும். அவர்களே தன்னார்வமாக வீட்டு வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு, காய்கறி அரிந்து தந்து, அப்பளம் வத்தல் வைத்து இட, அரிசி புடைக்க என பலவிதமான பணிகளைச் செய்தார்கள். ஆனால் தற்போது சில மணித்துளிகள்தான் உறவினர்கள் வந்திருந்து தலைகாட்டிவிட்டுப் போகின்றனர்.

பின்கட்டில் கோட்டை அடுப்பில் தடபுடலாக விருந்து சமையல் எல்லாமே தயாராகும். பெரியவர்களுக்குத்தான் மேஜையில் உணவு போடுவார்கள், சிறுவர்களுக்கு எட்டாது என்று நம்பிய ஒரு காலம். நானும் என் சிறுவயதில் இப்படிச் சாப்பிட்டுள்ளேன். 'இலை போட்டாச்சு' என்ற சங்கேத அறிவிப்பு நம் காதில் விழுந்த மாத்திரத்தில் அங்கே நீளமாக விரிக்கப்பட்ட பாயில் போய் இடம் பிடித்துக்கொள்வது இருக்கே அது ஓட்டப் பந்தயத்தில் வென்ற மகிழ்ச்சியைத் தரும். யாரும் உணவை வீணடித்ததில்லை. அது மிக அரிது!

ஆனால் இக்காலத்தில் மேஜையில் சுருள் காகிதம் உருட்டிக் கொண்டுபோக அதன் மேலே இலைகளைப் பரப்பி வைத்து அதில் திருமண மண்டபத்தில் சமைக்கப்படாமல் வெளியிலிருந்து தருவித்த 'பேக்கேஜ் மெனு' ஐட்டங்கள் பரிமாறப்படுகின்றது. அவை நமக்கு மனநிறைவைத் தருவதில்லை, பெரும்பாலும் குப்பைக்கே போகும்!

-எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 1 மார்ச், 2026

நெடுங்கால அரசாட்சி!

எகிப்தின் Ra என்கிற ரகுகுல வம்சப் பரம்பரை புகழ்பெற்றது. எகிப்தின் அறியப்பட்ட பேரரசான சீதை-ராமேசர் பார்வோன் பரம்பரை பதினெட்டாம் வம்ச ஆட்சி கிமு1580-1350வரை நீடித்தது என்றும், மன்னர் ஆக்கநாதன், சாகரன் வழியே வந்தபின், ஆக்கநாதனின் மகன் தட்டான் கமணன் பதிமூன்றாம் பார்வேந்தனாக Pharaoh அரசாட்சி செய்தார். ஆக்க நாதனின் நெருங்கிய நண்பரும் பார்வோனுமான மன்னர் தஷ்ரட்டா மிட்டானியின் மன்னராக கிமு 1358-1335 வரை ஆட்சியில் இருந்தார்.

சிறிய வயதினனான கமணன் ஒன்பதாண்டுகள் மட்டுமே அரசாட்சி செய்தார். தன் மாற்றாந்தாய் மகளான அங்கசேனாபதி (எ) அங்கசேனாமணியை மணந்தார் என்று குறிப்பு உள்ளது. அக்காலகட்டத்திலேயே சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமை வாய்ந்த மன்னராட்சியாக அப்பரம்பரை விளங்கியது என்றும், அப்போதே கெய்ரோவில் pyramid என்கிற ஆச்சரியமான பெரியமேடு அமைக்கப்பட்டிருந்தன என்று வரலாற்று ஆசிரியர்கள் எழுதியுள்ளனர். 

கமணனுக்குத் தொடை எலும்பு முறிவும் பிறகு நோய் தொற்றும் ஏற்பட்டு பத்தொன்பதாம் வயதில் வாரிசுகள் இல்லாமல் இறந்ததாகத் தெரிகிறது. அதன்பின் அரசவை ஆலோசகர் ஆய், இந்த அரசி அங்கசேனாவை மணந்துகொண்டு நான்காண்டுகள் ஆட்சி நடத்தினார். இங்குள்ள படத்தில் மன்னர் கமணன், அரசி அங்கசேனாமணி, ராஜமாதா நாகபிராட்டி ஆகியோர் இருப்பதாக அங்குள்ள கல்லறை சுவரோவியம் காட்டுகிறது.

அங்கு பாதாள கல்லறைகளில் பதப்படுத்தி வைத்திருந்த மன்னர்களின் உடலில் என்ன நோய் வந்து இறந்தனர் என்பதைத் தொல்லியல் ஆய்வாளர்கள்/ விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். தங்கப்பேழையில் நவதானியங்கள் இருந்ததையும் கண்டுள்ளனர். அப்போதே புதுமையாக விவசாயப் பயிர்களைப் புகுத்திவிட்டனர் என்று உறுதி செய்துள்ளனர். 

இன்றும் உத்தர எகிப்தில் நீல நதிக்கரையின் கிழக்கே நாகா-எட்-தீர் என்ற மடாலய கிராமம் உள்ளது. அங்கே ஆயிரக்கணக்கான கல்லறைகள் கிமு3500-650 வரை ஆட்சி செய்த பரம்பரையாளர்களின் உடல்கள் உள்ளன. கடைசியாக முப்பதாம் பரம்பரை ஆட்சி நடக்கும்போது மாவீரன் அலெக்சாண்டர் போரிட்டு கைப்பற்றினான். அந்த எகிப்திய வம்சாவளி சாம்ராஜ்யம் முடிவுக்கு வந்தது.

-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 12 பிப்ரவரி, 2026

அபச்சாரம்! 😂

திரு.சாலமன் பாப்பையா, திரு. சிம்சன் ராஜா (எ) பட்டிமன்றம் ராஜா, ஆகியோர் எதைப் பேசினாலும் இனி அது வம்பாகத் திரித்து விடப்படும். 



விருந்தோம்பலில் செட்டிநாட்டு ஸ்பெஷல் சமைத்துப்போட்டு ருசியாகவே இருந்தாலும் "செட்டிநாடா?" என்று இவர்கள் வாய் திறந்து கேட்கக்கூடாது. செட்டியார் என்று புரிந்து கொள்ளப்படும்.

உங்களில் "முதலில் யார் வந்தது?" என்று தப்பித் தவறியும் கேட்கக்கூடாது. முதலியார் என்று காதில் விழும்.

வெளிநாட்டில் செட்டில் ஆகியும்கூட உங்க "பிள்ளை சைவம்" என்பது நல்ல விஷயம் என்று பாராட்டினால் அது குற்றம். ஓஹோ.. சைவப்பிள்ளைனு சூசகமாக சொல்கிறார்.

இத்தனை காலம் பட்டாளத்துல இருந்ததுக்கு 'நாயக்'ரா ஆனதே பெரிய விஷயம் என்று பேசக்கூடாது. ஐய்யோ... கிண்டல் செய்கிற அளவுக்கு நாயக்கர் சாதி கேவலமா?

காலம் போகிற போக்கில் எல்லாமே தப்பும் தவறுமாகத்தான் பார்க்கப்படும். வேண்டாத பொண்டாட்டி கை பட்டால் குற்றம் கால் பட்டால் குற்றம் என்றால் என்ன சொல்ல?

அப்படியே 'என்ன சாதி' என்று கேட்டால்தான் என்ன? ஒரு தவறுமில்லை! ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தொல் பாரம்பரியம் உண்டு. அவர்களிடம் நாம் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டிய சிறப்பம்சம் இருக்கும். சாதியைப் பார்த்துத்தான் இவங்கெல்லாம் பழகுவாங்க போலிருக்கு என்று நம்முடைய சமுதாயத்தில் எப்போதுமே ஒரு பொதுவான கருத்து உண்டு. அவரவர் தனிப்பட்ட கடந்தகால அனுபவத்தைப் பொறுத்தே கேள்விகளின் நோக்கமும் புரிந்து கொள்வதும்  நிலைக்கும். கேட்டாலே குற்றம் என்றால் அது காணும் விகல்பமான பார்வையில்தான் உள்ளது..

-எஸ்.சந்திரசேகர்

புதன், 11 பிப்ரவரி, 2026

வினையில் பங்கு கொள்வோம்!

 திருத்தப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இந்த மாதம் வெளிவருகிறது. வரவுள்ள தேர்தலில் எந்தெந்த கட்சிகள் கூட்டணியில் உள்ளன என்பதைத் தேடிப் பார்த்தேன். அதில் பல கட்சிகளின் பெயர்களை இதுவரை நான் எங்கும் கேள்விப்பட்டதே இல்லை. 🥺 ஓ... இப்படியெல்லாம்கூட கட்சி இருக்கா என்று நினைத்துக்கொண்டேன்.

வேட்பாளர்களாக நிற்பது சுலபம். ஆனால் வாக்காளர்களுக்குத்தான் பொறுப்பு அதிகம். நமக்கு விருப்பமான ஒரு கட்சியில் நிற்கும் யாரோ ஒரு புதுமுக வேட்பாளர் யோக்கிய சிகாமணியா இல்லையா என எதுவுமே தெரியாது. அதே சமயம் நாமறிந்த சுமாரான நேர்மை நடத்தையை உடைய வேட்பாளர் விதி வசத்தால் திருட்டுக் கூட்டணி கட்சியில் நின்றால் என்ன செய்ய? நமக்குத்தான் திண்டாட்டம்! இந்த லட்சணத்தில் ஒரு குடும்பத்தில் இத்தனை பேர் வாக்குகளுக்கு இவ்வளவு பணம் என்று கொடுத்தால், அவன் கர்மாவைத் துணிந்து வாங்கிக்கொள்வது போலாகும்.

அயோக்கியக் கட்சித்தலைமை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றால் அவனுடைய ஆட்சிக்காலத்தில் நடக்கும் எல்லா கொலை/ கொள்ளை/அதர்மச்செயல்களில் நமக்கும் பங்குண்டு. வென்று அதர்மங்கள் புரிந்திட முழு ஆதரவு தந்தால் அந்தக் குற்றங்களில் 0.1% அளவேனும் நம்முடைய ஊழ்வினைக் கணக்கில் வந்து சேரும். ஆம், இதைப்பற்றி ஆழமாக யாரும் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் சத்தியமான உண்மை!சித்தர் பிரான் உரைக்கும் பாவப்பட்டியலில் இதுவும் உண்டு. 

வாக்குரிமை நம்முடைய ஜனநாயகக் கடமை என்பது உண்மைதான். ஆனால் அது தீட்டிய கத்தியாக உள்ளதே! அட ஆண்டவா, இது என்ன சோதனை?

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 9 பிப்ரவரி, 2026

Generation Z

 முந்தைய தலைமுறையினர் பெற்றிருந்த மதி நுட்பமும் மூளைத்திறனும் இக்காலத் தலைமுறையினர்க்கு இல்லை என்பது நாம் ஏற்கனவே அறிந்ததுதான். ஆனால் இந்த நிலை உலகெங்கும் உள்ளது என்பதுதான் கவலைக்குரிய செய்தி.


நவீனகால முன்னேற்றமும் பாரம்பரியமான குணாதிசயங்கள் மறைந்து போவதும் இதன் காரணிகளாக விளைவுகளாக உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளாக வாழ்க்கை முறை மாறிப்போனது, புதிய நோய்கள் மருந்துகள் உலா வரத்தொடங்கியது, பல நூறு ஆண்டுகளாக இருந்த அந்தந்த வம்ச பாரம்பரியம் கற்பிக்கப்படாமலே போனது, வெவ்வேறு மதங்களில் சாதிகளில் கலப்பு மணங்கள் சர்வசாதாரணமாகப் போனது, வேற்று மரபணுக்கள் வம்சத்தில் நுழைந்து தொல் அறிவுத்திறனை மந்தமாக்கியது,  மனக்கணக்கு என்ற சூத்திரம் தொலைந்தது, தொட்டதற்கெல்லாம் கணினி மொபைல் AI எப்போது வந்ததோ, எல்லா பழக்கங்களும் பாழாய்ப் போனது. 

முன்பெல்லாம் கல்லூரி முடிக்கும்போதுதான் நாங்கள் கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டோம். விநாடி வினா, குறுக்கெழுத்து, கட்டுரைப்போட்டி, ஒப்பித்தல் இருந்தன. இயற்பியல் சூத்திரங்களைப் போட்டுப் பார்க்க Logarithm table மட்டும்தான் முதுகலைவரை பயன்படுத்த எங்கள் ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினர். அதை வைத்துத்தான் நாங்கள் கால்குலேஷன் போட்டோம் என்பதை நிரூபிப்பதற்காக விடைத்தாளின் ஓரத்தில் கோடு போட்டு கணக்கு வழிகளை எழுதியிருக்க வேண்டும்.

நாம் கற்றுத்தேர்ந்த அறிவுப்புலம் வெறும் 20% என்றால் Gen Z தலைமுறையினர் திறன் இன்னும் தேய்ந்து போயிருக்கும். எங்கோ விதிவிலக்காகச் சிலர் மட்டும் பிரகாசமாய் வருகின்றனர். "அடடே, இந்தக்காலத்து குழந்தைகள் எல்லாம் என்ன சூட்டிகையா இருக்கு!" என்று எதையோ பார்த்து மெச்சி ஏமாந்து போகின்றனர்.

ஒரு முறை, ஐன்ஸ்டீனைச் சந்தித்த நடிகை மர்லின் மன்றோ, "நாம் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என் அழகோடும் உங்கள் அறிவோடும் பிறக்கும்" என்றாராம். அதற்கு விஞ்ஞானி ஐன்ஸ்டீன், " உங்கள் அறிவோடும் என் அழகோடும் பிறந்துவிட்டால் என்ன செய்வது?" என்று நையாண்டி செய்தாராம்.

-எஸ்.சந்திரசேகர்