About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வெள்ளி, 31 மார்ச், 2017

ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் - நூல் அறிமுகம்

கல்கியின் வருகைக்கு முன்னோட்டம்
----------------------------------------------------------------------

சில மாதங்களுக்கு முன் முகநூலில் கல்கியின் வருகைப் பற்றி பதிவு போட்டிருந்தேன். அதில் ஸ்ரீ வீரப்பிரம்மேந்திரர் இயற்றிய 'காலக்ஞானம்' நூலைப் பற்றியும், அவரே சுமார் 1000 வருடங்கள் கழித்து ஸ்ரீ வீரபோக வசந்தராய என்ற பெயரோடு பிறந்து விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான 'கல்கி'யாக வருவதைப்பற்றி சொல்லியிருந்தேன். உங்களில் சிலருக்கு அது நினைவிருக்கலாம். அதுபற்றிய முழு நூல் விரைவில் வெளியாகவுள்ளது. முன்பு தெலுங்கில் வந்த மூலநூலை ஆதாரமாகக்கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பானதை தமிழில் என் பாணியில் எழுதினேன். கல்கி எப்போது வருவார், எப்போது அதர்மத்தை எதிர்த்துப்போரிட்டு உலகைக்காப்பார்? எதிர்கால நிகழ்வுகள் என்ன, அதை எதற்கு முன்னமே சொன்னார்? மற்ற மதங்களின் பார்வையில் இது எப்படி ஒத்துப்போகிறது? பிரபஞ்சம் தோன்றியது எப்படி? பிரபஞ்சம், பரசிவன்-பரசக்தி, பஞ்சபூதங்கள், மற்ற தெய்வங்கள் தோன்றியதும், அவர்களுக்குள் உறவுகள் வந்தது எப்படி? இதுபோன்ற இன்னும் பல தத்துவ, உபநிடத, வேதாந்த, சமயம், யோகம், சுயமறிதல் சார்ந்த ஆய்வுபூர்வமான எண்ணற்ற கேள்விகளுக்கு அதில் விடையுள்ளது. மொத்தத்தில், சித்தர்களின் பார்வையில் என்ன கருத்துகள் வெளிப்படுமோ அவையெல்லாம் இவர்மூலம் வெளிப்பட்டுள்ளது. திருமாலின் அவதாரம் என்றாலும் முருகனும் அதில் பங்கு கொள்கிறார். இதுபற்றி போகர் தன் ஜெனனசாகரம் நூலில் ஒரு பாடலில் விளக்கியதை மேற்கோள் காட்டியுள்ளேன்.

சித்தர்கள் சமாதியில் இருந்துகொண்டு விரும்பிய பல பிறவிகளை எடுப்பார்கள் என்பதை அறிவோம். மகாசித்தர் போகர்தான் வருகின்ற கல்கி அவதாரம். சித்தர் போகரே, ஸ்ரீ வீரபிரம்மமாக இருந்தபிறகு வீரபோக வசந்தராயராக பிறந்துவிட்டார். இவர்கள் எல்லோருமே விஸ்வகர்மா குலத்தைச் சேர்ந்தவர்கள் (பொற்கொல்லர்). அவருக்கு தற்போது வயது 50. அவர் 'தேவதத்தா' வெள்ளைக் குதிரைமேல் அமர்ந்து கையில் 'ரத்னசாரு' வாளோடு, கோடிசூரிய ஒளியோடு வந்து, இடர்களை உண்டாக்கி, கலிபுருஷனை (அதர்மங்களை) கலியுகத்தில் அழித்து, எஞ்சிய 426000 சொச்ச வருடங்கள் நன்மக்கள் வாழத்தகுதியான பூமியாக மாற்றுவார். மேற்சொன்ன சிறப்புசக்திகளை அவர் பெற்றுக்கொண்டபின், முதன் முதலாக சுனாமி எத்தனை பயங்கரமானது என்பதைப் பார்த்தோம், அதன்பிறகு தொடர்ந்து பேரிடர்களையும் கண்டுவருகிறோம். அடுத்த 195 ஆண்டுகள் இவர் ஆட்சி செய்வார். கல்கியின் குதிரைப்படைகளையும், சிறகுகள் கொண்ட கங்காரூக்களையும் என் சொப்பனத்தில் கண்டு வியந்தேன். இதைப்பற்றி சில முகநூல் நண்பர்களுடன் உரையாடலிலும் பகிர்ந்தேன். இனி இவர் கைவண்ணத்தில் உலகெங்கும் பிரளயங்கள் தொடர்ந்து நிகழும், ஆனால் உலகம் அழியாது. அவ்வப்போது பூமிக்கு பாரமாகவுள்ள பாவமூட்டைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி வருவார். அவருடைய இறுதித்தீர்ப்பில் அகப்படாமல் இதயசுத்தியோடு இறைவனை அகத்தில் வைத்து தர்ம நெறிகளை கடைபிடிக்கவேண்டும்! தரணியில் தர்மத்தைக்காக்க மகான்களையும் மக்களையும் களமிறக்குகிறார். ஸ்ரீவீரபோகர் இன்னும் வெளியுலகிற்குப் புலப்படாமல் தேவ ரகசியமாகவே இருந்து பணிசெய்கிறார்.

இப்படியொரு நூல் எழுத எண்ணமும், நுட்பமான சங்கதிகளை விளங்க வைத்தும், எழுதும்போது அவ்வப்போது அடியெடுத்துக் கொடுத்தும், பல தருணங்களில் அவர் வழிநடத்தினார். இந்நூல் எல்லாம்வல்ல சித்தர் போகருக்கும், 'கல்கி' வீரபோகருக்கும் சமர்ப்பணம். வரும் சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டிற்கு வெளிவருகிறது.

நூல் வெளியீடு: விஜயா பதிப்பகம்
20 ராஜ வீதி, கோயம்புத்தூர் 641001. 
பேசி: 0422-2382614.  
பக்கங்கள்: 328,   விலை: ரூ.225 
மின்னஞ்சல்: vijayapathippagam2007@gmail.com

(பதிப்பாளரிடம் பதிவு செய்தால், நூலை தபாலில் அனுப்புவார்கள். நூலை வெளிநாடு -உள்நாடு வாசகர்கள் Marinabooks.com தளத்தில் ஆன்லைனிலும் வாங்கிக்கொள்ளலாம்.)



புதன், 29 மார்ச், 2017

தமிழிலக்கியம் போற்றும் முருகன்

தமிழை நினைத்தால் முருகன் வருவான், முருகனை நினைத்தால் பாடல்கள் பொழியும், பாடல் என்றால் திருப்புகழ் நினைவிற்கு வரும், திருப்புகழ் என்றால் அருணகிரியார் வருவார். 

தொல்காப்பியத்தில் முருகனைப் பற்றிய குறிப்புள்ளது... குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் நிலத்து கடவுள்களான முருகன், திருமால், இந்திரன்,வருணன் பற்றிய பாடல்: 

“மாயோன் (திருமால்) மேயக் காடுறை (முல்லை) உலகமும்   
சேயோன் (முருகன்) மேய (குறிஞ்சி) மைவரை உலகமும்
வேந்தன் (இந்திரன்) மேயத் (மருதம்) தீம்புனல் உலகமும்
வருணன் மேயப் பெருமணல் (நெய்தல்) உலகமும்“.  
(தொல்காப்பியம்: பொருளதிகாரம்-5)


Image may contain: 1 person, text

சனி, 25 மார்ச், 2017

படமாக்கப்படுகிறார் சாவித்திரி

சினிமாவில், 1950-60 களில் உச்ச நட்சத்திரமாக விளங்கிய கதாநாயகி சாவித்திரியின் வாழ்க்கை வரலாறை “நடிகையர் திலகம்” என்ற பெயரில் படமாக்கவுள்ளனர். 31 வருடங்கள் திரைத்துறையில் இருந்த நடிகை சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் மொத்தம் 263 படங்களில் நடித்துள்ளார். படத்தில் நடிகையர் திலகமாக கீர்த்தி சுரேஷ் என்பவர் நடிக்கிறார். பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் இந்தப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமானது. அப்படத்தின் விளம்பர போஸ்டர் முன்பே வெளியானது. This is a biopic on actress Savithri.
Image may contain: 3 people, people smiling, text

'மஹாநடி சாவித்திரி' Mahanati Savithri என்று தெலுங்கிலும், 'நடிகையர் திலகம்' என்று தமிழிலும் கொண்டாடப்பட்டவர். அவர் 1979ம் ஆண்டு விஜயவாடா வானொலியில் பேசிய ஒலிநாடாவை நான் அண்மையில் கேட்க நேர்ந்தது. அதில் தெளிவாகப் பல விஷயங்களை அருமையாகப் பேசிய அவரா குடி பழக்கத்தில் போய் விழுந்து வாழ்க்கையைத் தொலைத்தார் என்று நினைத்தால் வேதனைதான். அவருடைய குடும்ப வாழ்க்கையில் வந்து போனவர்கள், சினிமா எடுக்கிறேன் என்று விரல் சுட்டுக்கொண்ட அனுபவம், இருப்பதையெல்லாம் தேசத்திற்கும் சமூக தொண்டிற்கும் வழங்கினார் என்று இவையெல்லாம் ஒருபக்கம் பேசப்பட்டாலும், விதி அவர் மதியை அலைக்கழித்து முடித்து விட்டது என்பதுதான் கொடுமை. அண்ணாநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார் என்றும், அங்கு ரிக்ஷாகாரருக்கே ஐம்பது/ நூறு என்று கடன் பாக்கி வைத்திருந்தார் என்றால் என்னத்தைச் சொல்வது? அவர் 1981 ல் தன் 46 வது வயதில் காலமானார்.
கீழே அவருடைய இறுதிக்கால படத்தைப் பார்த்தால் அவர்தான் என்பதை உங்களால் நம்பமுடியாது. இவரைப்போல் பல முன்னாள் நடிகர்கள் குடி-போதை பழக்கத்திலிருந்து மீள முடியாமல், சொத்துகள் இழந்து போய் சேர்ந்தனர். இவருடைய வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு படிப்பினை!
Image may contain: 4 people, people sitting and closeup

புதன், 22 மார்ச், 2017

திருவொற்றியூர் தியாகேசா போற்றி

ஓம் நமசிவாய! ஓம் நமசிவாய!
"ஸ்ரீ தியாகராஜர் - வடிவுடை அம்மன், திருவொற்றியூர், சென்னை."
திருவொற்றியூர் ஒரு சிவ க்ஷேத்திரம். சமயக் குரவர்களால் பாடல் பெற்ற ஸ்தலம், ஆதிசங்கரர், பட்டினத்தார், வள்ளலார், தோபா சுவாமிகள், பாம்பன் ஸ்வாமிகள், ஆகியோர் வழிபட்ட இறைவன்-இறைவி... கவிச்சக்ரவர்த்தி கம்பன் தன்னுடைய இராமாயணத்தை இங்கு வட்டப்பாறை அம்மனின் சன்னதியில் அமர்ந்து காவியத்தின் இறுதிப் பகுதியை எழுதி முடித்ததாக தலவரலாறு சொல்கிறது. உக்ர காளியை சாந்த சுவரூபியாக்கியது ஆதிசங்கரர். அந்த பாறையில் ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்தார்.


No automatic alt text available.

பட்டினத்தார் சமாதி கோயில் 
 




இன்று ஈசனின் பேரருளால் அவன் தாள் பணியும் பேறு கிட்டியது. ஊழிக் காலத்தில் கடல் புகாமல் ஒற்றிப்போகச் சொன்ன ஆதிபுரியின் தியாகேசர் மண்ணை மனமாரத் தொழுதேன்.. வேதங்களைக் மீட்டெடுத்த நாயகனின் இடபாகத்தாள் அன்னை வடிவாம்பிகையை, ஞான சக்தியை வணங்கி, ஏவிளம்பியின் பிரளயகாலத்தில் ரட்சிக்க வேண்டி இன்று புனைந்த என் பாடலை சமர்ப்பிக்கின்றேன்.
ஆரூரில் நான் பிறக்கவில்லைக் காண்
அஃதொன்றை குறையென நோக்கா - என்
அகமும் புறமும் நீரே நின்று ஆட்கொண்டு
அருமருந்திட்ட சித்த னானீர்.

அசையா நினைவாக ஆட்கொள்ள நினைத்தீர்
இசையால் உம்மை போற்றினேன் - மன
வாசையால் ஒற்றியூர் பேகரும்பு நாதனே
ஓசையின்றி பாடினேன் காணீர்.

ஆதிபுரியில் இந்நாளில் மகிழம்பூ நாதனை
ஆனந்தமாய் கிடந்து சேவித்து - நல்
லாழிசூழ் நெய்தலில் ஞான சக்தி
வெளிப்பட தொழுதே னடியை.

அகிலாண்டம் அதிர நிலமும் ஆட பேராழி
எழுந்து தண்டிக்கும் கணநேரம் - உம்
மடிதொழ இவனை நீர் காத்திடுவீரே
குடிகாக்க நமச்சிவாயமே வாரீர்.

பாபங்கள் துடைப்பீர் மறுபிறவி வேண்டா  
புண்ணியங்கள் ஈட்ட முயல்கிறேன்– யான்
கடந்திட்ட பிறவிகள் அறியேனே நின்டி
கிடந்து போற்றுகிறேன் உனையே.

அந்தோ இதுவரை சோதித்தது போதும்   
இந்தப் பிறவியோடு அறுப்பீர் – அருள்
கனிந்து வீடுபேற்றை நல்கு பிறையோனே
இனிமேலும் பிறவிகள் வேண்டா.

- எஸ்.சந்திரசேகர்  

சனி, 18 மார்ச், 2017

முருகனை நினைத்தாலே கவி பொழியும்

        வீடுபேறு தரும் வீட்டினன்                            
                          Image result for முருகா

படைவீடு கொண்ட எம்பெருமான்
 பதமலர் பணிவோம் தினம்தினமும்;
கடைவீடு கொண்ட முதிர் பழமாய்
 கருத்துள்ள கந்தர் அநுபூதி வழங்கி;
மடைவீடு திறந்த வெள்ளமென மனம்
 மகிழத் திருப்புகழ் தந்த அருணகிரியார்;
இடைவீடு மருந்தென எழுந்தருளி
 ஈய்ந்த போகரின் உள்ளக்களிப்பென;
நடைவீடு அமர்ந்த வேலாயுதம் தலம்
 நன்குடி போற்றும் சித்தன் வாழ்வென;
தடைவீடு ஒன்று வருமோ பக்தனுக்கு
 தயை கூர்ந்து அருள்புரி பெருமானே!

சனி, 11 மார்ச், 2017

பிறவியை அறுக்கவேண்டும்

என்னுடைய கடந்த பதிவில் போகரின் ஜெனனங்கள் பற்றி சொல்லி இருந்தேன். ஒரு நண்பர் “அப்படியெல்லாம் மறுபிறப்பு என்ற கான்சப்ட் இல்லவே இல்லை” என்று சிவவாக்கியரை மேற்கோள் காட்டியிருந்தார்... பதினெண் சித்தர்களில் போகர் சிவவாக்கியர் போன்றவர்கள் சற்று முற்போக்கு சிந்தனைகள் கொண்டவர்கள் என்பதை ஏற்கனவே நம் பதிவில் பார்த்துள்ளோம். ஆனால் சிவவாக்கியர் மட்டும் மறு பிறவி கூற்றை மறுத்துள்ளார். இன்று அதைப்பற்றிய ஒரு பதிவுதான் இது.
“கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா
விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே”. சிவவாக்கியருக்கு மறுபிறவியில் நம்பிக்கை இல்லை என்பதை சிவவாக்கியத்தில் சொல்லிவிட்டார். அதற்கு தம்முடைய நோக்கில் பல உதாரணங்களையும் முன் வைக்கிறார்.  

'இறந்தவர் உயிர்ப்பதில்லை' என்று சொல்லாமல் 'இறந்தவர் பிறப்பதில்லை' என்று பொதுவாக சொல்லியுள்ளார். அதனால் மறுபிறப்பு பற்றிதான் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எப்படிப்பட்டவர் இறந்தால் மீண்டும் பிறப்பதில்லை என்பதை பாடலில் ஆய்ந்துதான் விளங்கிக் கொள்ள வேண்டும். அதாவது,  உயர்  நிலையை அடைந்த பால், முழுமை பெற்ற  வெண் சங்கு, பூத்திட்ட பூ, முற்றிய காய் போன்ற முதிர் நிலையை எட்டிய எதுவும் மறு பிறப்பு அடைவதில்லை என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். ஆனால் மேம்போக்காக இதில் பொருள் விளங்காது. ஆக, இவர் சொன்னது முற்றுபெற்ற ஞானிகளை குறிக்கலாம்.
“இப்பிறப்பி னோடிங் கெழுபிறப்பும் அன்றியெனை” “இனிப்பிறவா நெறி எனக்களித்து அருளிய தனிப்பெருந் தலைமைத் தந்தையே தந்தையே' என்று வள்ளலார் திரு அருட்பாவில் தீர்க்கமாய் சொல்கிறார். சாதல்-பிறத்தல் என்னும் சுழற்சியில் பிறந்த உயிர்களாகிய நாம் இருக்கிறோமே என்பதே வள்ளலாரின் வேதனையும் வாதமும்.
“உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு.” அதாவது சாக்காடும் பிறப்பும், உறங்குவதும் விழித்தலும் போல இயல்பாய் மாறிமாறி வரும் என்பதும்;
 “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின்“.. பழி இல்லாத நல்ல பண்புள்ள மக்களை ஒருவர் பெற்றால அவரை ஏழு பிறப்பிலும் தீவினைப் பயன் தீண்டாது என்கிறார் வள்ளுவர். பிறவிப் பெருங்கடலை நீந்தி இறைவன் அடியை சேர வேண்டும் என்று ஒரு குறளில் உணர்த்தியுள்ளார்.
குருநாதர் போகர் தன் சப்தகாண்டத்தில் மறுபிறவி பற்றி:
“தானான கோபத்தால் வந்தமுறையாலே தாக்கான ஜெனனமும் பலவுமாகும், மானென்ற ஜெனனமாய் ஜெனிப்பதெல்லாம் முன்செய்த பலாபலத்தின் குறையால்..” என்று சொல்லியுள்ளார்.
மானிடர்கள் தங்கள் கோபத்தில் கண்மூடித்தனமாக பல பாவங்களை செய்துவிடுகிறார்கள். அவர்கள் மீண்டும் மீண்டும் ஜெனிப்பதேல்லாம் கோபத்தாலும் கொடும் பாவத்தாலும் மானிடனாக ஜெனித்து விட்டால் வீடுபெற சொர்கத்திற்கு செல்லும் வழியை கண்டறியவேண்டும் அதற்காக உழைக்கவேண்டும். முற்பிறவியில் செய்த பலா பலத்தினாலே இந்தப் பிறவி வாய்த்துள்ளது என்ற சூட்சுமத்தை அறிந்து பண்புடன் நடந்துகொண்டால், இந்த பூமி சொர்க்கம்தான் என்று சொல்கிறார்... ஈசனின் ஆக்ஞைபடி போகர் பல ஜெனன அவதாரங்கள் எடுத்தார். உடல் அழியக்கூடியது தான், ஆனால் பிறவிப்பணி இப்பூமியில் முடியும் வரை இவ்வுடலை கற்பம் உண்டு கல்ப காலத்திற்கும் நிலைக்கச் செய்யமுடியும். அதன்பின் ஈசனுடன் இரண்டறக் கலந்திட வேண்டும் என்று போகர் உணர்த்தியுள்ளார்.
“புல்லாய் விலங்காய் புழுவாய் நரவடிவாய் எல்லாப் பிறப்பின் இருள் அகல்வது எக்காலம்”? என்று பத்திரகிரியார் தன் மெய்ஞ்ஞானப்புலம்பலில் கூறுகிறார்.
நால்வரில் ஒருவரான மாணிக்கவாசகர் தன்னுடைய உருக்கமான திருவாசகம் நூலில் சிவபுராணம் பாடலில்,
“கறந்த பால் கன்னலொடு நெய் கலந்தாற்போலச்
சிறந்து அடியார் சிந்தனையுள் தேன் ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்” என்கிறார் மாணிக்கவாசகர். அதாவது, கறந்த பாலோடு கரும்புச்சாறு, நெய்யைக் கலந்ததுபோல, தேன்போல அடியவர்களின் சிந்தனைக்குள் ஊறி நிற்கிறவனே, நாங்கள் எடுத்த பிறப்பைக் கெடுத்து மோட்சம் பெறச்செய்யும் எங்கள் பெருமானே என்கிறார்.
“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகம் ஆகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம் பெருமான்
மெய்யே உன் பொன்னடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்!”
ஆக இப்படி எல்லாவிதமான பிறப்புகளையும் எடுத்து நான் மிகவும் இளைத்துவிட்டேன், மெய்யான உன்னுடைய பொன்னடிகளைக் கண்டு, இன்று நான் வீடுபேறு அடைந்தேன்! (இனி இப்படிப்பட்ட பல பிறவிகள் எனக்கு இல்லை!" என்று மாணிக்கவாசகர் பாடியுள்ளார்.
மணிவாசகர் பிரசங்கம் செய்ய அவ்விறைவனே படி எடுத்து நூல் வடித்தார் என்றும் தெரிகிறது.. மறுபிறவி கூற்று தவறு எனும் பட்சத்தில் ஈசனே இவ்வரியை திருத்தி எழுதியிருப்பாரே.. ஆனால் திருத்தம் செய்யவில்லை.
மறுபிறவி, ஊழ்வினை, பாவபுண்ணியம் என்று எதுவும் இல்லையென்றால் ஆன்மா என்ற அழுக்குபடிந்த வஸ்திரம் துவைக்கப்படாது. ஈசன் என்னும் வண்ணான் அழுக்கு போக துவைத்து வெளுத்திடுவார். அதுவரை துவைப்பவனுக்கும் துணிக்கும் உள்ள பிடிமானம் விட்டுப் போவதில்லையே! மறுபிறவி மூலம் சலவை செய்து ஆன்மாவை சுத்தம் செய்து இறுதியில் தன்னுள் இணைத்துக் கொள்கிறான் ஈசன். அதற்கு சுழற்சியில் இன்னல்கள் தந்து பாடம்புகட்டி தக்க தண்டனை தந்து அந்த ஆன்மா அனுபவித்த பலாபலன் ஏற்ப அதற்கு முக்தி (அ) வீடுபேறு கிட்டும்.
சிவவாக்கியர் ஒருவர் மறுத்துள்ளதால் ஒட்டுமொத்த சித்தர்களும் மறுபிறவியே இல்லை என மறுக்கவில்லை. சிவவாக்கியரைப் புரிந்துகொள்ள நாம் அவர் கண்ணோட்ட நிலைக்கு உயரவேண்டும்.. மெய்யாகவே முற்போக்காகத்தான் சொன்னாரா என்று அப்போது தான் விளங்கும்.. அது அவர் மறைப்பு வார்த்தை ஜாலங்களை காட்டுகிறது.. மறுபிறவி தத்துவம் பொய் என்றால் திதி, தர்ப்பணம், திவசம், போன்ற தென்புலத்தார் சடங்குகள் அறவே வேண்டாமே!

வியாழன், 9 மார்ச், 2017

சுழற்சியில் வரும் அதே ஜெனன உறவுகள்

என்னுடைய ஆய்வில் சித்தர் போகரின் இன்னபிற ஜெனன அவதாரங்களை கண்டுகொண்டேன். சித்தர்கள் எல்லோருமே நினைத்த மாத்திரத்தில் சமாதியில் இருந்துகொண்டே மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்தோ, ஒரே நேரத்தில் பலராகவும் ஜனித்துள்ளனர் என்பதற்கு மூலர், காலங்கி, போகர், அசுவனி போன்றோர் உதாரணம். போகர் கூட தன் ஆத்மார்த்த சீடனோடு அநேகமாக எல்லா பிறவிகளிலுமே 'குரு-சீஷ்யன்' உறவு முறையிலேயே வந்துள்ளார்.
முஹம்மது-அபுபக்கர், போகர்-புலிப்பாணி, லாவோட்சு -யின்ஸி, ஹாங்வு (மிங்)-ஜியான்வென், வீரப்பிரம்மேந்திரர் -சித்தையா, என்று போகருடைய ஜெனன சாகரங்கள் முடிவின்றி போய்க்கொண்டே இருக்கிறது. இவைகளை அவர் ஜெனன சாகரம் நூலில் சொன்னதில்லை. சித்தர் போகரைப்பற்றி முதல் முறையாக இங்கே படிப்பவர்களுக்கு இதெல்லாம் சற்றும் நம்பமுடியாத கட்டுகதையாகவே இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமில்லை.
ஆதியில் நந்தியாக, பிரம்மா, திருமால், முருகன், இந்திரன், ராமன் கிருஷ்ணன், என்று அவதாரங்கள் எடுத்த பிறகு மேற்கண்ட இன்னபிற ஜெனனங்களை எடுத்தார். உங்களுக்கு மேலே குறிப்பிட்ட பெயர்களில் சீனாவில் மிங் பேரரசின் மன்னர் ஹாங்வு பற்றி தெரிந்திருக்க ஞாயமில்லை. ஆனால் இதை கோரக்கர் தன்னுடைய சந்திரரேகை நூலில் ஒரு இழையாக முக்கிய குறிப்பு தந்துள்ளார். 'தன் நாட்டு பிரஜைகளை எதிரிகளிடமிருந்து காப்பதற்காக சீனாவில் போய் சில காலங்கள் சமாதி கொண்டு தக்க சமயத்தில் அங்கு மன்னராகப் பிறந்து அரசாளப் போகிறார்' என்ற செய்தி தான் அது.
மங்கோலியர் குப்லைகான் சீனா மீது படையெடுத்து தாக்கி கைப்பற்றி 'யுவான் பேரரசை' நிலைநாட்டினான். அதை தோற்கடித்து மீண்டும் தாவோ கொள்கைகளை நிலைநாட்டிய பெருமை 'மிங் பேரரசின்' மன்னர் ஹாங்வு வையே சேரும். பிரஜைகள் மகிழ்ச்சியோடு இருந்தனர் என்று சீன வரலாறு சொல்கிறது. அவருடைய உன்னத அடிசுவாட்டில் வந்த ஆத்மார்த்த சீடர் (மன்னர்) தான் ஜியான்வென். 
எல்லா பிறவிகளிலும் மூத்த பதவியை தலைமையேற்று அலங்கரித்தார் போகர். ஆனால் அவர் வழி பின்பற்றி வந்த சீடர் எல்லா பிறவிகளிலும் ராஜாங்க / குருவம்ச எதிர்ப்புக்கும், பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடியாமலும், உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டிய நிர்பந்தங்களுமே ஏற்பட்ட வந்துள்ளது... இது அபுபகர், புலிப்பாணி, யின்ஸி, ஜியானவேன், சித்தையா வரை பொருந்தி நடந்துள்ளது என்பது எனது ஆய்வில் அறியச்செய்தார். தற்போது, வீரபோகராக பிறந்து தர்ம பரிபாலனம் செய்யும் போகருக்கு, சீடராக யார் உள்ளார் என்பது வெளியுலகிற்கு இன்னும் அவர் காட்டவில்லை.
இப்படித்தான் அவ்வப்போது சித்தர் போகர் பல ஆய்வு செய்திகளை எனக்கு சிரமம் இல்லாமல் திடீரென என் கண்ணில் காட்டுவார். அதை குறிப்பெடுத்து என் நூலில் விளக்கியும், உங்களுக்கு இங்கே பதிவாகவும் இடுகிறேன். எல்லாம் அவர் சித்தம்!
-எஸ்.சந்திரசேகர்

வியாழன், 2 மார்ச், 2017

தோபா சுவாமி வழிபட்ட கோயில்

ராமலிங்கம் என்ற மகான் ஸ்ரீ தோபா சுவாமிகள் நிர்வாண அவதார சித்த புருஷர். தோபா சுவாமிகள் என்ற சிறப்புத் திருநாமம் பெற்ற இவர் திருவொற்றியூரில் தெரு ஓரமாக அமர்ந்து, அவ்வழியே செல்பவர்களின் குணத்தைக் குறிப்பது போல நாய் போகிறது, நரி வருகிறது, கழுதை கத்துகிறது, பேய் திரிகிறது என்றெல்லாம் சொல்லுவாராம்.
அந்த 19ம் நூற்றாண்டில், வடலூர் ராமலிங்க அடிகளார், இவர் இருந்த அந்தத்தெரு வழியே வர முதல் முறையாக மனிதர் வருகிறார் என்றாராம். இவரை நோக்கிய வடலூர் ராமலிங்க அடிகள், தன்னைப் போல் இவரும் மகான் என்பதை உணர்ந்து அதனை அங்குள்ளோரிடமும் தெரிவித்தார். எப்போதும் 'தோ.. தோ' என்று உரக்க சொல்லுவாராம். அதனால்தான் அப்பெயர் பெற்றார். 'தோடுடைய செவியன்' பாடிய திருஞானசம்பதர்தான் இவருடைய மானசீக குரு. No automatic alt text available.
தோபா சுவாமிகள் ஒரு நாள் இல்லத்தின் வாயிலில் நின்று பிச்சை கேட்டார். அப்பெண்மணியோ மிகுந்த பக்தியுடன் பாதி வெந்துகொண்டிருந்த சாதத்தை அவசரமாக அளித்துவிட்டார். உடனே உள்ளே சென்று பானை சாதத்தைக் கிளற முயல, சாதம் கணநேரத்தில் முழுமையாக வெந்திருந்ததாம். இது மகான் செய்த அற்புதம். இவருடைய ஜீவ சமாதி மடம் வேலூர் (CMC அருகில்) சைதாபேட்டையில் உள்ளது.
Image may contain: sky and outdoor  No automatic alt text available.
சென்னை அசோக்பில்லர் ரயில் நிலையம் பின்னேயுள்ள சிவன் கோயிலில் பூஜை செய்து சில நாட்கள் தங்கியதால் ஸ்ரீ தோபா சுவாமி @ ஸ்ரீ மல்லிகேஸ்வரர் ஆலயம் என்று பெயர் பெற்றது.  சற்றுமுன், ஸ்ரீ மகேஸ்வரி சமேத ஸ்ரீ மல்லிகேஸ்வரரை தரிசிக்கும் பேறு கிட்டியது... ஓம் நமசிவாய!