About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 18 பிப்ரவரி, 2023

சிவராத்திரி!

மஹாசிவராத்திரிக்கு உங்களுடைய சிறப்புப் பதிவு ஏதேனும் உண்டா என்று நம் நண்பர் கேட்டார். 

அவனை நினைக்காத தருணம் உண்டா என்ன? சீவனில் கலந்து வாசியில் நகர்ந்து சிந்தையில் அமர்ந்து எப்போதும் நம்மை ஆட்கொள்பவன் நம் தேகத்தில் பஞ்சபூதமாய் இருப்பவன். இந்த ஆன்மா அவனுடையது. அதனால் நினைத்தபோது இங்கே பாடல் புனைவது, சித்த நூலிலிருந்து சிலவற்றைப் பதித்து விளக்கம் தருவது, என எப்போதும் அவன் நினைவாகவே இருப்பதால், நமக்குத் தினமும் சிவராத்திரி, ஏகாதசி, கந்தசஷ்டிதான்.

மாலையில் திருநீறு பூசி சிவபுராணம், சிவாஷ்டகம் என எது முடியுமோ அதைப் பாராயணம் செய்வேன். ஜெபமாலை அணிந்து மந்திரம் உருவேற்றுவேன். பிறகு இரவு சாப்பாடு முடித்தபின் நெடுநேரம் கண் விழித்து இருக்காமல் நேரத்தோடு தூங்கப்போவதுதான் என் பாணி! 😂

ஊரே அமர்க்களப்படுகிறது. கோயிலில் விடியவிடிய நான்கு கால பூஜை நடக்கும். ஆனால் இந்த ஆள் என்ன இப்படிச் சொல்கிறார் என்று நினைக்கிறீர்களோ? 🤔

என்னைப் பொறுத்தவரையில் ...

"தினமும் சந்தியில் பிரதோஷ காலம்

தினமும் இடையாமம் சிவராத்தி ஓரை

தினமும் வைகறையில் நாரணன் நேரம்

தினமும் முப்பொழுதும் நாடலாம் முக்தி"

இங்கே படத்தில் உள்ள ஸ்படிக லிங்கமும் சாளக்கிராமங்களும் என் மூதாதையர் விபூதி சித்தர் தாத்தா 1561-ஆம் ஆண்டு சமாதியில் போய் அமரும்வரை நித்தம் பூசித்தது. 🕉️

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 12 பிப்ரவரி, 2023

காம பாணம்!

சமூகவலையில் படத்திலுள்ளபடி ஓர் ஆங்கில வாசகத்தைப் பார்த்தேன். 

இக்காலக் காதலர்கள் பண்டைய காலத்தில் பாரம்பரிய காமன் பண்டிகையைக் கொண்டாடியதுபோல் மாசியில் கொண்டாடுவதுதான் Valentine's Day என்று நினைத்துவிட்டனர். 

இங்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்களே மிக தாராளமாக மனமுவந்து அனுமதி கொடுக்கின்றபோது மற்றவர்களின் கண்டனக் குரல் எடுபடாது. எல்லா வீடுகளிலும் இளசுகள் கையில் ரோஜா எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவதில்லை. வீட்டிற்கு அடங்காத பிள்ளைகளை காதலிக்க ஊக்குவித்தது சமத்துவம் போற்றும் சமூகமா? கையாலாகாத பெற்றோரா? 🤔

காதல் பூங்கொத்தைக் கையில் கொடுத்து, அவசரகதியில் மணமாலை மாற்றி, ஓராண்டு புரிதலின்றி வாழ்க்கையை ஓட்டி, பிறகு வக்கீலை நாடி, வாய்தாக்கள் வாங்கி, பிறகு பரஸ்பர விவாகரத்தை ஏற்பதுதான் டிரென்ட்.💐 Miss ஆக இருந்து Mrs ஆகி மீண்டும் Miss ஆவது ஓர் அரிய கலை! 

சாஸ்திரப்படி அக்னி சாட்சியாக மணம் முடித்தபின், சட்டப்படி விவாகரத்தான கணவன் இறந்தால் அவள் கைம்பெண்ணாகக் கருதப்படுவாளா? சாஸ்திரப்படி ஆவாள் ஆனால் சட்டப்படி அவள் நித்திய செல்வியாகவோ மறு சுமங்'கிலி'யாகவோ விருப்பத்தகுதியுடன் வாழலாம்! 😂

-எஸ்.சந்திரசேகர்



புதன், 8 பிப்ரவரி, 2023

இது கண்டனத்திற்குரியது!

அர்ச்சகரின் தட்டில் இனி தட்சணை காசு போடக்கூடாதாம். கோயில் உண்டியலில் மட்டும் போடவேண்டும் என்று இந்து அறநிலையத்துறை வலியுறுத்துகிறதாம்.  கோயில் ஆபீசில் கட்டணம் செலுத்தி அங்கு பக்தர் யாருக்கேனும் கட்டளை சேவையோ, ஹோமமோ, பரிகாரப் பூஜையோ, திருமணமோ நடத்தி வைத்தால் அதை நடத்தி வைப்பவர்க்கு இனி சம்பாவனை கொடுப்பது எப்படி? நான் அறிந்தவரை அர்ச்சகர்களின் மாத வருமானமே ₹750 முதல் ₹3000 வரை தான்‌. இதை வைத்து இக்காலத்தில் என்ன ஜீவனம் செய்ய முடியும்? 

சோறுடைத்த சோழ தேசத்தில் மாதம் மும்மாரி பொழிந்ததற்கு அந்தணர்கள் பெரும்பங்கு வகித்தனர். 

"வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை

நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை

மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை

மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!"

பெண்கள் தம் கற்பில் தவறலாம், மன்னன் சரியாக ஆட்சி செய்யத் தவறலாம். ஆனால் மறையோதும் வேதியர் கடமைகளிலிருந்து ஒருபோதும் தவறிடக்கூடாது என்ற பொது நோக்கத்தில் அவர்களை ஆதரித்து வறுமை வராமல் காத்திடவே சதுர்வேதிமங்கலம் கிராமங்களை இராஜராஜ சோழன் நிறுவினான். தான் கட்டுவித்த கோயில்களில் எல்லாமே கிரமமாக நடக்க ஏற்பாடுகள் செய்தான். ஆனால் இக்கால முற்போக்கு வரலாற்று ஆசிரியர்கள் சோழனின் இச்செயலை சமூக அநீதி என விமர்சித்து உமிழ்ந்தனர்.

இன்றைக்கு நடப்பது எதுவும் நல்லதல்ல. மாதம் மும்மாரி என்ற நிலை மாறி வடகிழக்கு/ தென்மேற்கு என்ற அளவில் உள்ளது. சமயத்தில் அதுவும் பொய்த்துப் போகும். கடும் புயல் வீசி உள்ள பயிர்கள் அழிந்து நாசமாகும். அப்படியே அறுவடை ஆனாலும் நேரடி அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் பயிா் முளைத்து வீணாகும்.

ஆக அரசு உத்தரவு என்ற பெயரில் இனி சம்பிரதாய நெறிமுறைகளை மாற்றி விடுவார்கள். பெரிய கோயில்களில் அபிஷேகம் அலங்காரம் ஒருமுறை போதும், சஷ்டி/ பிரதோஷ கால அபிஷேகத்திற்கு தேன் பால் பன்னீர் யாவும் அரை லிட்டர் மட்டும் உபயோகிக்க வேண்டும், வேதகோஷ மந்திரங்கள் கருவறைக்கு வெளியே கேட்கக்கூடாது, மடப்பள்ளியில் திருவமுது சமைப்பது கூடாது போன்ற புதிய விதிகள் அமலுக்கு வந்தாலும் ஆச்சரியமில்லை! 😀

"சுழலும் பூமி உயிர்களை வளர்க்கும்

  நடுங்கும் பூமி அதர்மத்தைக் காட்டும்

  உழலும் ஆன்மா வினைப்பயன் ஏற்கும்

  கழலும் ஊன்றக் காலச்சுவடு வலிக்கும்"


-எஸ்.சந்திரசேகர்



வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

உடல்நலம் பேணல் எட்டாக்கனியா?

"நோய் தொற்று வராமல் காத்துக்கொள்ள சிவப்பு கவுனி, மூங்கில் அரிசி மற்றும் கருங்குறுவை அரிசியை மட்டுமே சமைத்துச் சாப்பிடுங்கள்" என்று ஒரு பதிவில் சொல்லியிருந்ததைப் பார்த்தேன்.

இன்றைய சந்தை நிலவரப்படி, உத்தேச விலையாக இந்த ரகங்கள் ₹100 முதல் ₹200 வரை விற்கப்படுகிறது. பொன்னி பச்சரிசி கிலோ ₹53 முதல் ₹56 வரை விற்கிறது. இதில் மேற்படி பாரம்பரிய அரிசி ரகங்களை நடுத்தர குடும்பத்தால் ஒரு மூட்டை வாங்கிட முடியுமா? அரை கிலோ மட்டும் வாங்கி என்ன செய்ய? முழு அரிசி மணிகளை எண்ணி எண்ணித்தான் உலையில் போட வேண்டும். வழித்தால் சட்டியிலிருந்து அகப்பைக்காவது வருமா? 😀

அப்படியே சாப்பிட்டாலும் உடல் உடனே வலுப்பெற்று எதிர்ப்பு சக்தியைக் காட்டுமா? சித்த /ஆயுர்வேத மருந்துகளே நாள்பட்ட பிரச்சனைக்குக் குறுகிய காலத்தில் தீர்வு தருவதில்லை. அது ஒரு மண்டலம் தாண்டி மெள்ள வீரியத்தைக் காட்டும்வரை நோயாளிக்குப் பொறுமையும் நம்பிக்கையும் இருப்பதில்லை. ஏன்?

சிகிச்சை முறை பற்றி வைத்திய குண சிந்தாமணி சொல்வதென்ன? மருத்துவ பிரயோகத்தை உடல் ஏற்றுக்கொண்டு உடனே செயல்படும் அளவில் அந்த மருத்துவ முறையில் உடலைப் பழக்கி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் நோயாளியைப் பரீட்சித்துப் பார்த்தபின் உடலில் தங்கிய கசடுகளை வெளியேற்ற ஒவ்வொரு முறையும் உள்ளுக்கு பேதி மருந்து தந்து சுத்தி செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. சித்த குருமருந்து கிரகிக்கப்பட காலப்பிரமாணம் அந்தி/ சந்தியோ, வாரமோ, பட்சமோ,  குணமாகப் போதுமானது. பாதிப்பின் தீவிரம் பொறுத்து மண்டலம்/ அயனம் வரை கால அளவு நீடிக்கும். வைத்திய குண சிந்தாமணி அளவுகோல் கிரமப்படி பார்த்தால் நம் இன்றைய வாழ்க்கை முறைக்குச் சித்த வைத்தியம் எடுபடாது. சித்த நூல் எழுத்தாளரே இப்படிச் சொல்கிறாரே என்று நீங்கள் நினைக்கலாம்.

திடீரென சித்தாவுக்கு மாறுங்கள் என்றால் நம் வாழ்க்கை முறைகளை நம் பூட்டன் காலத்துப் பழைய நிலைக்குக் கொண்டுபோக முடியுமா? முடியாது! 🤔 மலைவாழ் மக்கள் போல் இயற்கையுடன் ஒன்றி பூரண நலத்துடன் வாழ்ந்தால் அவர்களைப் பின்தங்கிய மக்கள் என்கிறோம். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை! ஆழமாகப் பார்த்தால், உணவும் ஆங்கில மருந்து மட்டும் எதிரி அல்ல, நம்மைச் சுற்றியுள்ள பல நாகரிக அம்சங்களும் வாழ்க்கை முறையும் சித்த மருத்துவ செயல்பாட்டுக்கு எதிரிதான்! பத்தியம் என்பது உணவுக்கு மட்டுமல்ல வாழ்வியல் முறைக்கும்தான். நாம் ஒரு நூற்றாண்டுக்கு முந்தி இருந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றவேண்டும். இதை எந்த சித்த வைத்தியராவது அடித்துச் சொல்லியுள்ளாரா? மீண்டும் மீண்டும் அவரிடம் கப்பம் கட்டும்படி ஆகிறதே!

உணவே மருந்து என்ற அளவில் அன்றாட சமையலைச் செய்து உண்டு ஓரளவுக்குக் காத்துக்கொள்கிறோம். இதில் கற்பங்கள் செய்து உண்டால் என்ன தவறு என்று நினைப்போர் உண்டு. காய்கனி தானியம் எல்லாமே மருந்தடித்து விளைவித்து எங்கெங்கிருந்தோ சந்தைக்கு வருகிறது. இதுவே உடலுக்குப் பழகிவிடுவதால் சித்த மருந்துகள் அவசரத்திற்கு எடுபடாமல் போகும். ஆர்கானிக் பண்ணைக் காய்கறிகள் என்று விற்றாலும் அதன் உண்மைத்தன்மையை ஆராய முடியாது.

நியாயமாகப் பார்த்தால் பாரம்பரிய அரிசி ரகங்களை அரசு ஊக்குவித்து அதை ரேஷன் கடையில் கிடைக்கச் செய்ய வேண்டும். கலப்படமற்ற பால் தேன் பனைவெல்லம் பதநீருக்கே வழியைக் காணோம்! இதில் அரிசியா? சித்த மருந்தோடு நாம் குடிக்கும் அநுபானம் சுத்தமாகக் கிடைக்க வேண்டாமா? 

மக்களே, அதை வாங்காதீர்கள் இதை உண்ணாதீர்கள் என்று சமூக வலையில் உசுப்பேற்றி அதற்குத் தாளம் போடும் கூட்டம் ஒரு பக்கம். தனிமனித மாற்றம் வேண்டும் என்பார்கள். ஆனால் சராசரி மக்களின் பொருளாதாரத்தை நினைத்து எந்தப் பதிவும் வருவதில்லை. வசதி படைத்தவன்தான் தனி மனித மாற்றம் கொண்டு வர வேண்டும். இல்லாதவன் வெறும் கோஷம் போட்டுவிட்டு ஒதுங்க வேண்டும். ஏன்? அதை ஆதரித்து வாங்கி ஊக்கப்படுத்தும் நிலையில் அவனுக்கு வசதி இல்லையே! உற்பத்தி அதிகமானால் விலை குறையும். வாங்கும் திறன் கூடும். இதுவே யதார்த்தம்.

தன் நிலத்தில் விளைந்த அரிசியை விவசாயி உண்டாலும் இதர உணவுப் பொருளைச் சந்தையில் வாங்கத்தானே வேண்டும்? உடல் நலம் கெட்டுப்போக வேறு வழிகளா இல்லை? பொது சந்தையைச் சாராமல் ஒவ்வொருவரும் தன் குடும்பத்திற்கான தனிமனித சுயசார்பை அடைய முடியுமா? ஏற்றம் பற்றி வலைத்தள கட்டுரைப் பதிவில் வக்கணையாக எழுதவும் படிக்கவும் நன்றாக இருக்கும். ஆனால் நிஜத்தில் ...?

-எஸ்.சந்திரசேகர்