About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

புதன், 18 ஆகஸ்ட், 2021

மேருகிரி!

வாசகர் ஒருவர் கேள்வி கேட்டிருந்தார். மேருமலை என்பது வடக்கே கேதார்நாத் -திபெத் அருகே இருப்பதாகவும், கிழக்கே ஓடிஷா கடல் பகுதியில் இருப்பதாகவும், தெற்கே குமரிக்கண்டத்தில் இருப்பதாகவும் ஏதேதோ சொல்லப்படுகிறது, இதில் எது உண்மை? 

மேரு என்பது கயிலாய பர்வதம் அமைந்த இமயமலைப் பகுதிதான் என்பது இரண்டாம் காண்டம் பாடல்களில் ஆங்காங்கே வெளிப்படுகிறது. போகர் சீனதேசத்தைக் கடந்து தக்ஷிணம் வரும்போது மேருவைத் தரிசித்தார்.

'பார்த்திருந்து துவாபரமாய் யுகத்தில் யானும் பர்வதாமேருகிரி தன்னில்வந்தேன் வந்திட்டேன் சீனபதியான் கடந்து வாகுடனே மேருகிரி காணவந்தேன்

இப்படத்தில் நாம் பார்க்கும் பழுத்த நிறத்தில் தகிக்கும் சொர்ண மேருதான் கயிலாயம் என்பது போகர் பாடலில் தெரிகிறது. இந்த நிறம் எங்கிருந்து வந்தது?  பனி அடர்த்தியாய் இருந்தால் உதயத்தில் சூரிய ஒளிச்சிதறல் காரணமாக இந்நிகழ்வு ஏற்படும் என விஞ்ஞானிகள் சொல்கின்றனர். பிரம்ம முஹூர்த்த 3.45 - 5 மணிக்கு சூரிய உதயம் இல்லை. சரி! சூரியன் உள்ளது என பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும் அந்நேரம் பனி இல்லாத வெறும் பாறையிலும் செந்நிறம் வரக் காரணம் யாது? அதுவே பனி படர்ந்த வெளிச்சுற்றுப் பகுதியில் செந்நிறம் ஏன் இல்லை? முற்போக்கு அறிவியலாளர்களால் பதில் சொல்ல முடியாது. அங்கே அக்கணம் ரசவாதம் நிகழ்கிறது என்று போகர் சாட்சி சொல்கிறார். 

'மூட்டினார் சித்தகிரி பர்வதத்தை முனையான மூலிகைகள் முழுதும்பூசிமாட்டினார் துருத்திக்கொண்டு வூதிக்காட்டி மகாமேரு சாரலைப் பழுக்கச் செய்தார்

ஆக அரூபமாய் அங்கே தவத்தில் இருக்கும் எண்ணற்ற ரிஷிகளும் சித்தர்களும் ஒருங்கே கயிலாய மலையைப் பொன்னம்பலமாக மாற்றும் நிகழ்வே அது. அதற்கு நம் அறிவியலாளர்கள் ஏதேதோ காரணம் சொல்கிறார்கள். அறிவியல்படி பனி படர்ந்த 2500 கிமீ நீள இமயமலைத் தொடர் முழுவதுமே தங்கமயமாய் ஒளிர வேண்டும். ஆனால் இம்மலை மட்டும் ஏன்? அதைத்தான் போகர் பாடல் சொல்கிறது.

இங்கே படத்தில் கயிலாயமலை பெருவுடையாரைச் சுற்றி அகழிபோல் உள்ளது. பனி பொழிந்து நிரம்பினால் இந்தச்சுற்றுப் பள்ளத்தின் ஆழம் நம் கண்களுக்குப் புலப்படாது. பனி இல்லாதபோது எடுத்த இப்படம் மிகத் துல்லியமாய் உள்ளது. ஓம் நமசிவாய. 🙏🙏

இதேபோல் தென்காசியில் மலைக்கு மூலிகைப்பூசி, துருத்தி கொண்டு ஊதி அதைத் தங்கமயமாக மாற்றத் துடித்த தேரையர் செயலால் கலக்கமுற்ற ரிஷிகள் நேரே அகத்தியரிடம் முறையிட அதனால் அகத்தியர்க்குக் கோபம் வந்து தேரையரைத் தண்டித்த கதைதான் நினைவுக்கு வந்தது. 

-எஸ்.சந்திரசேகர்



ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2021

உருமாறித் திரியும் கருத்து!

மூத்த சித்தர்களைப்பற்றி நாம் கேளிவிப்படாத தகவல்களைச் சொல்வதாகத் தலபுராணங்களை மேற்கோள் காட்டி நிறைய கட்டுரைகள் இணையத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றன. ‘போகர் மகாகர்வம் கொண்டவராக இருந்தார், திருமூலரின் மற்ற சீடர்களை இம்மியும் மதிக்கவில்லை’, ‘யோகம் கற்காமல் காம இச்சை போகத்திலேயே கிடந்தார்’, அதைக் குடித்தார், இதைப் புகைத்தார்’, தன் இலக்கைக் கோட்டைவிட்டார், அவர் அப்படியாக்கும் இப்படியாக்கும் என்று பலவித குற்றச்சாட்டுகளை அக்கட்டுரைகள் சொல்லும்.

ஆனால் எதிலுமே சம்பந்தப்பட்ட மூலநூல்/பாடல் எண் எதுவும் ஆதார மேற்கோள் இருக்காது. எல்லாம் சொல்லிவிட்டு, ‘இவ்வாறு எல்லாம் இருந்ததாக நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது, செவிவழியாகப் பரவிவரும் கருத்து என்று சதுரகிரி தல புராணம் சொல்கிறது, சதகம் பேசுகிறது, கலம்பகம் உரைக்கிறது’ என்ற ரீதியில் நிறைய காணக்கிடைகின்றன.
தன்னுடைய பெருநூல் காவியங்களில் எங்குமே போகர் பொய்யுரைக்கவில்லை என்கிறபோது தன்னைப்பற்றிய எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகவே சொல்லியுள்ளது தெரிகிறது. ஏதேனுமொரு தல புராணம் நூலில் சுவடிப் பிரதியின் மூலப்பாடல்களும் உரையும் இருந்தால் மட்டுமே நாம் அந்தச் சித்தரைப்பற்றிய வேறுபட்ட கருத்தை வெளிப்படுத்தலாம். மூலப் பாடல்கள் இயற்றியது யார், பதவுரை எழுதியது யார், புராணம் மேற்கோள் காட்டும் வரிகள் எது என்று எதுவுமே இல்லாமல் கிளுகிளு கதைகள்போல் அதைப் பகிரவும் செய்கிறார்கள். ஊடகத்தில் சொற்பொழிவு நிகழ்த்துவோர்கூட நம்பகத்தன்மை இல்லாததை அப்படியே குறிப்பெடுத்துச் சொல்கிறார்கள்.
நல்ல வேளையாக, இதுபோன்ற எதையும் நூல் ஆதாரங்களாக எடுத்துக்கொண்டு என் கட்டுரைகளில் நான் சொல்வதில்லை. நானே மூலப்பாடலைப் படித்து அப்போது எழும் சந்தேகத்தைப் போகரே எனக்கு விளக்கி அறியப்படுத்தினாலோ, அல்லது தேர்ச்சிபெற்ற மூத்த பண்டிதர்கள் வாயிலாகக் கேட்டறிந்தாலோ மட்டும்தான் அதைப்பற்றி மேற்கோள் காட்டுவேன். இல்லாவிட்டால் அதுபோன்ற சங்கதிகளை ஓரங்கட்டுவேன்.
முகநூலில்/ பிளாக்களில் இதுபோல் கட்டுரைகள் சுற்றி வரும்போது, முற்போக்கு ஆசாமிகள் இதுதான் தருணம் என தம் சொந்த சாகித்தியங்களையும் சேர்த்து ஏற்றி விடுவது உண்டு. நாம் படிக்கும் எதுவாகினும் அதில் மெய்ப்பொருள் காண்பதே அறிவு! கலியுகத்தில் இவ்வாறு எல்லாம் செயல்கள் பெருகிவந்தால் அதுகாறும் பொதுச்சுற்றில் இருந்த சில நூல்களைச் சித்தர்கள் அடியோடு முடக்கி/ மறைத்து விடுவார்கள்.
-எஸ்.சந்திரசேகர்



ஊறும் களிம்பு!

முகநூல் நண்பர் ஒருவர் கடந்த மாதம் ஒரு பாடலை அனுப்பினார். அதன் உட்பொருள் விளக்கத்தை அவருடைய குருநாதர் கோரியதாகச் சொன்னார். எனக்குத் தெரிந்தவரை அதற்கு விளக்கம் கொடுத்தேன்.
















'
'சார், சித்தர் பரிபாஷை அறிய முன் + பின் பாடல்களை கோர்வையாய் வாசித்தால்தான் ஓரளவுக்கு விளங்கும். இங்கே நாலு வரியில் உள்ள சங்கதிகளை நான் புரிந்து கொண்டதுவரை சொல்கிறேன். மேலோட்டமாகப் படித்தால் இது வைத்தியம்போல் தெரியும் ஆனால் யோக சக்கரத்தில் நம் உடம்பில் அகத்தே நடக்கும் ரசவாதம் போல் விளங்குகிறது. ரசவாதம் புறத்தே உலோகத்தில் மட்டும் நடப்பதல்ல, அது நம் உள்ளேயும் நடக்கும்.
கால் முன்னெலும்பு நஞ்சேறியது. மூலாதாரம் முதல் பாதம்வரை நாகலோகம். நாகம் என்றால் குன்டலினி பாம்பு அதன் நீர்மம் நஞ்சு. அது மேலே ஏறி திடமாகிய பின் ரத்தத்தில் ஊறும் அதன் அதிர்வை காட்டும். (Cells get activated when kundalini rises through àràdhàra chakras). இதன் விளைவு நாவில் உணரலாம் என்று மறைப்புடன் சொல்கிறது. (சித்த வைத்தியத்தில் விஷக்கடி முறிவுக்கான மருந்தின் சுவை நாவில் இனிப்பாக இல்லாமல் கசப்புச் சுவை தெரியும்வரை சிகிச்சை தொடரும்.)
மூலாதாரம் தூண்டப்பட்டால் அது உடலில் எல்லா நீர் திரவங்களையும் வேதிக்கச் செய்து அது விசுத்திக்கும் ஆக்ஞாவுக்கும் இடையே வெளிப்படும். வாயில் இரும்பை/ செம்பை வைத்துக்கொண்டு துப்பினால் தங்கமாவதும், உள்ளங்கையில் பாதரசம் வைக்க அது ரசமணியாகக் கட்டுவதும் வாதவேதை வித்தையே. வள்ளலார், சேஷாத்ரி சுவாமிகள், மானூர் சுவாமிகள் ஆகியோர் 19ஆம் நூற்றாண்டில் செய்து காட்டியவை.
சார், இவ்வரிகள் எந்த நூல்/ பாடலில் இருக்குதுங்க? என் சிற்றறிவுக்குத் தெரிந்ததை விளக்கினேன். உங்கள் குருநாதர் தரும் முழு விளக்கத்தை எனக்கு அனுப்பினால் நானும் தெரிந்து கொள்வேன்!'
இன்னும் பதிலுக்குக் காத்திருக்கிறேன். 🌺
- எஸ்.சந்திரசேகர்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2021

ஆடிக் கிருத்திகை!

ஆறுபடை வீடிருந்தும்  உன்னை எங்கும் தேடுகின்றேன்

ஆகமம் போற்றும் உன்னை வேள்வியில் தேடுகின்றேன் 


வீரன்படை திரண்டிருந்தும் ஓங்கும் வினையோ ஓயவில்லை

வேலன்படை காத்துமென்ன பிறவி அறுக்க முடியவில்லை

என் சிந்தையுள் புகுந்தவா குருகுகா ஷண்முகா

உன் விந்தையுள் விந்தையா சொல்லையா முருகையா ... 


சீலன்படை வென்றுமென்ன குத்தும் இன்னல் தீரவில்லை

ஆற்றுப்படை பெற்ற நீயோ அறிந்தும் ஏதும் செய்வதில்லை   

என் மனதினுள் நிலைத்தவா கொற்றவா சித்தையா

என் சீவனுள் கலந்தவா காத்தருள் கந்தையா  

- எஸ்.சந்திரசேகர்