About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 25 மார்ச், 2024

ஒலியா கிலியா?

என் பதிவினையொட்டி ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருக்கிறார்.

“நாம் சிறுவயதிலிருந்தே கஙசஞ உச்சரிக்கும் முறை சரிதானா? நாம் பேசும்போது உச்சரிக்கும் சொற்களும் தவறாக உள்ளதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதுபற்றி ஒரு பதிவு போடவும்.”

நீங்கள் கேட்பது சரிதான். கஙசஞ என்பதை ka nga cha gnya என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலேயே தவறாகத்தான் பயிற்றுவிக்கின்றனர். அதாவது கஙசஞ உயிர்மெய் எழுத்துகளைச் சொல்லும்போது ச என்பதை cha என்றும், வல்லினங்கள் சொல்லும்போது மட்டும் அதை sa என்றும் சொல்லித்தருகின்றனர். கஸடதபற என்பதில் sa என்பதும் பிழைதான்! 

இதன் காரணமாகவே எந்தச்சொல்லை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதில் அநேகருக்கும் குழப்பம் உண்டு. பிழையோடே நாமும் கல்வி கற்று ஒப்பேற்றிவிட்டோம். 

எங்கள் ஊரில் மூக்குறிஞ்சி வாத்தியார் என்று இருந்தார். ஏன் இந்தப் பெயர்? சளி மூக்கடைப்பு ஒழுகலுடன் வரும் சிறுவர்களை “உறியாதே, உயிர்மெய்யைப் பழகு!” என்பாராம். அதன்படி நாம் சொல்லிப்பார்த்தால், வல்லினம் என்பது நாக்கின் பின்புறத்திலிருந்து ஒலி எழுந்து ஒவ்வொரு எழுத்துக்கும் மேல்தட்டில் நாக்கு தொடும் நிலை சிறிது சிறிதாக முன்னேறி வந்து உதடுகளில் வந்து முடிகிறது. ஆக ka cha என்பதே சரி, ka sa என்பது தவறு. இதைப்பொறுத்தே சொற்களை நாம் உச்சரிக்கும் விதம் அமைகிறது. இக்காலத்தில் அதை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்வதில்லை.  

திருப்புகழ் ஓதுதல் நாக்கு சுழற்சிக்கும் மூச்சுப்பயிற்சிக்கும் உகந்தது. "முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலில் உச்சரிப்பு ஒலிகள் உதடுகளுக்கும் முன்வரிசைப் பற்களுக்கும் ஒட்டியே அமையும். பிற்பாடு அது மெல்ல மத்திம நிலைக்கு வந்து, அதன்பின் நாக்கு பின்புறம் தொடுமாறு சொற்களை அருணகிரியார் அமைத்திருப்பார். மென்மையில் தொடங்கி அதன்பின் கரடுமுரடாகி, பிறகு இரண்டுமே கலந்து வரும். இதுதான் tongue twister என்பது. வாசியும் நரம்பு மண்டலம் சீர்பெறும்.

தமிழின் பெருமையை முழங்குவது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தத் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பைத் தமிழாசிரியர்கள் சிரத்தையுடன் ஆரம்பப்பள்ளியில் சொல்லித்தராவிட்டால் தமிழுக்குத்தான் இழுக்கு! வயதானபின்பு பற்கள் கொட்டிவிட்டால் எதுவும் செய்யமுடியாது, பல்லு போனால் சொல்லு போச்சு! பல்செட் போட்டால் உச்சரிப்பு ஏறக்குறைய அருகில் வந்தாலும் அது செயற்கையாக ஒலிக்கும். அதனால்தான் பல் விழுந்த பொக்கை வாயர்களை வேதமந்திரம் ஓத, பதிகம் பாசுரம் பாட அமர்த்த மாட்டார்கள். அவர்கள் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளலாம். 

அதனால்தான் வேத மந்திரங்களை ஓதச் சிறுவயதிலையே பயிற்சி தருவார்கள். வேத பாடசாலையில் சிறுவர்கள் ஸ்லோகம் சொல்லும்போது விரல் கணு அடையாளம் வைத்துக்கொண்டு கையை ஏற்றி இறக்கி ஒலி அழுத்தம் உணர்ந்து உரக்க உச்சரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வர்ணம் மாத்திரை பலம் சாமம் ஸ்வரம் என உச்சரிப்பை எங்கெங்கு எப்படி எவ்விதம் சொல்வது என்று அத்தியயனம் செய்யும்போது பிழையின்றிக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் நம் தமிழில் எது சரியான ஒலி என்று உணர்ந்து திருத்திக் கொள்ளும்போது வயதாகிவிடுகிறது. 😀

ஆக இப்படியாக மருத்துவமும் பக்தியும் சேர்ந்ததுதான் நம் மொழி. ஆய்த எழுத்தான ஃ சொல்லும்போது இரு காதுகளும் அடைத்து, அழுத்தம் மேற்புறம் எழுந்து ஆக்ஞா சக்கரம் பகுதியில் குவியும். அந்தப் பகுதிதான் மூன்றாவது கண் ஃ இருக்கும் இடம். உள்ளே ஊசித்துவாரப் பிரம்மரந்திர வாயில் அமைந்துள்ள இடம், ஆகாய சிதம்பரத்தின் வாயில்.   

-எஸ்.சந்திரசேகர் 





உழவாரம்!

கோயில் புனரமைப்பு, உழவாரம், நித்திய கட்டளைகள் சேவைகள், தன்னார்வத் தொண்டு செய்ய இதுபோன்ற தனியார் அறக்கட்டளை இயக்கங்கள் /மன்றங்கள் ஏகப்பட்டது உள்ளன. அதன் நிர்வாகக் கட்டமைப்பு மற்றும் வரவுசெலவு பற்றி யாம் எதுவும் அறியோம்.

கோயில் உண்டியலில் காசு போட்டால் அறநிலையத்துறை எடுத்துக்கொள்ளும். சிறிய கோயிலுக்கு நிதியுதவி செய்யாது அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி. தட்டில் போட்டால் அர்ச்சகர் எந்த உழைப்புமின்றி ஆரத்தி காட்டிப்பிச்சை எடுக்கிறான் அதனால் போடாதே என்கிறது ஒரு கோஷ்டி.

கோயில் சிதிலமடைந்தால் அப்படியே இருந்து விட்டுப்போகட்டும். யார் மூலம் எப்படிப் புனரமைக்க வேண்டும் என்பதை அவன் பார்த்துக்கொள்வான். இத்தனை நூற்றாண்டுகளில் சுவடு தெரியாமல் அழிந்துபோன சிவாலயங்கள் பல. அதை எல்லாம் மீட்க வேண்டும் என்றால் மனிதனால் ஆகாது.

வறுமையில் இருந்தாலும் தேசத்தின் சுபிட்சத்திற்காக வேதியர் தம் பணியைத் தொடரவேண்டும் என்கிறது சாத்திரம். பிறகு அவன் ஏன் பிச்சை எடுக்கவேண்டும்? 🤔

'அருள்மிகு' பெயர் தாங்கிய அரசுக்குச் சொந்தமான வசதியான கோயில்களில் அர்ச்சகர்களுக்குச் சொற்ப ஊதியம் நிர்ணயிப்பார்கள். நித்திய பூஜை அபிஷேகம் அலங்காரம் நிவேதனம் மற்றும் மந்திரங்கள் சொல்லி அர்ச்சனை செய்யவேண்டும். சிவராத்திரி/ பிரதோஷ காலத்தில் அவர்கள் செய்யும் தொடர் பணிக்கு இடுப்பு உடையும். ஆனால் இதில் உடலுழைப்பு எதுவும் இல்லையே என்று பலர் விமர்சிக்கின்றனர்.

"தமிழகத்தில், 26 ஆயிரம் கோவில்களில் வசதியோ, வருமானமோ கிடையாது. அர்ச்சகருக்கு மாதம், 60 ரூபாய் ஊதியம். அதுவும் மூன்றாண்டுகளாக பாக்கியுள்ளது. ஆனால், கோவில் கணக்காளருக்கு 40 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம். அர்ச்சகர்களின் வாரிசுகள் யாரும், அப்பணிக்கு வருவதில்லை" என்று திரு. பொன்மாணிக்கவேல் தன் ஆய்வறிக்கையில் சொன்னார்.

விலைவாசி மிகக்குறைவாக உள்ள இக்காலத்தில் அர்ச்சகர் தாராளமாகவே ஜீவனம் செய்யலாம் என்பது பலருடைய கருத்து. 🤔 திருவள்ளுவர் குறிப்பிட்ட அறுதொழிலோரில் பலரும் கேலி பேசும் இந்த 'பிச்சை எடுக்கும்' வேதியரும் உண்டு.

த₄ர்மஏவ ஹதோ ஹந்தி த₄ர்மோ ரக்ஷதி ரக்ஷித: ||

தர்மத்தை எவன் அழிக்கிறானோ அவனை தர்மம் அழிக்கிறது. தர்மத்தை எவன் காக்கிறானோ அவனை தர்மம் காப்பாற்றுகிறது.

-எஸ்.சந்திரசேகர்



மஹா சிவராத்திரி

 ஓம் நமசிவாய 🕉️🌿

அண்டபகிரண்ட அணுவும் அசைந்தாடும்

அத்தன் கூத்தாட அகிலம் சுழன்றாடும்

உண்ட விடம் யாவும் இறுகி திண்டாடும் ஊழித்தாண்டவம் ஆடும் கணந்தோறும் கண்டம் சதிராட கடலும் எழும் பொங்கும்

காரிருள் சூழந்து எங்கும் புயல் ஓங்கும்

பிண்டம் இயங்கவும் ஒளியும் திரும்பவும்

பஞ்ச பூதனவன் தாளைப் பற்றுவோம்! 🙏

-எஸ்.சந்திரசேகர்



பங்குனி உத்திரம்!

 ஓம் சரவணபவ 🕉️🐓🦚🙏

ஆனைமுகன் தம்பிக்கு அநுபூதிகளுண்டு

ஆறுமுகம் கந்தனுக்கு வேதமுகம் உண்டு 

ஆனந்த முருகனுக்கு போரூர்கள் உண்டு

அனந்தன் மருகனுக்கு பதிகள் பலவுண்டு

ஆற்றுப்படை நாதனுக்கு காவடிகளுண்டு

அக்கினி வீரனுக்கு தமிழ்ச்சங்கம் உண்டு

அகரவுகரமகரப்பொருளில் குகனுமுண்டு

அமரா பதிக்கு சேனை அஸ்திரம் உண்டு

ஆண்டிக்கு உண்டியில் செல்வம் உண்டு

அவன் ஒரு கோமணமே உடுத்துவதுண்டு

ஆற்றல் மிகும் பங்குனி உத்திரம் உண்டு

அழகு வள்ளி தெய்வானை வாசியருண்டு

ஆதிசிவன் பெற்றதால் சிறப்புகளுண்டு

அன்னை சிவகாமியின் ஆசிகள் உண்டு!


-எஸ்.சந்திரசேகர்

திங்கள், 4 மார்ச், 2024

குன்றின்மேல் அணையா விளக்கு!

 


வாலையைப்பற்றியும் அவளைக் கண்டுணர்ந்து தரிசிக்கும் வழியையும், ஆறாதாரசக்கர தளத்தின் குணாம்சங்களையும் “வாலைக்கும்மி” நூலில் கொங்கணர் எளிதாகத் தந்துள்ளார். 

ஆறாதார சக்கரங்கள் வழியாக வாசி ஊர்ந்து சென்று ஆக்ஞா சக்கரத்தில் சுழுமுனையுடன் சங்கமிக்கும் இடமே திரிகூட பர்வதம். அது உண்ணாக்குக்கு மேலாக புரூ மத்தியில் உள்ளது. இடகலை பிங்கலை சுழுமுனையுடன் சங்கமிக்க அங்கே சுயம்பிரகாசம் ஒளிரும். (கபம் சளி இங்கே வாசியின் வழியை அடைத்துக்கொண்டு பிரச்சனை தரும். அதனால் வழலையை அகற்றவேண்டும் என்கிறார் சித்தர்.)  எண்கோண வடிவ நட்சத்திரம்போல் ஆடாமல் சுடர்விட்டுச் சுழலும். அங்கே அகத்தீ நிலையாக எறிந்துகொண்டு இருந்தாலும் தலை வெந்துவிடுவதில்லை! 

ஹம்-ஸம் ஓடும் ஆறாதாரங்களின் உச்சியில் அங்கே எண்ணெயில்லை, சுடரை அணைக்கத் தண்ணீர் இல்லை. வாசிக்கால் அந்தப்பாதையிலேயே பிசகின்றிப் போய்க்கொண்டிருந்தால் பாதைப் புலப்படும். எங்கே போவதற்கு? குன்றின் மேலே ஏறி ஆகாயக் கடுவெளியில் தீபஜோதியில் வாலைக்குமரியைத் தரிசிக்க!

மேலே ஏறிப்போகும் வழிதோறும் ஒவ்வொரு சக்கர தளத்திலும் தசநாத சப்தங்கள் கேட்கும். மேலே அவளுடைய சான்னித்தியம் வெளிப்பட சிலம்புச்சத்தம் கேட்கும். சிக்கலான பாதையைப்போல் தெரிந்தாலும் அகவிளக்கொளி மார்க்கத்தைக் காட்டும். அங்கே ஓங்காரம் ஒலிக்க வாலையவள் வீற்றிருப்பாள்!

-எஸ்.சந்திரசேகர்