About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 27 மே, 2019

மாற்றம் நல்லதல்ல!

குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்பது மூத்தமொழி. மனிதன் தோன்றி பல காலங்கள் ஆகிவிட்டபடியால் இன்னும் ஏன் குரங்கினம் இருக்கிறது? இப்படி சில கேள்விகள் எழும். ஒரு இனம் மொத்தமாக வேறொரு இனமாக மாறுவது இல்லை என்கிறது பரிணாமத் தத்துவம். அதில் சில அம்சங்கள் அப்படியே தொடர்ந்து நிலவ சிலது மட்டும் ஏற்றம் பெறுகிறது. நமக்குத் தெரிந்து ஆதிமனிதன் இலை தழை கிழங்குகளைத் தின்றுதான் உயிர் வாழ்ந்தான். குமரி நிலத்தில் முருகனும் குமரா (எ) வள்ளிக் கிழங்குகளையே பயிர் செய்து கொடுத்தான். மனிதன் ஒரு கட்டத்தில் வேட்டையாடி மாமிசம் உண்ணும் நிலைக்கு வந்தான். காட்டு மிருகங்கள் நீங்கலாக ஏனையவை எல்லாமே தாவர உண்ணிகள்தான்.
சிம்பன்ஸி எனப்படும் வாலில்லா மனிதக் குரங்குகள் பெரும்பாலும் பழங்கள், வித்துகள், இலைகள், கரையான்கள், சிறு பூச்சிகள் என உண்டு வந்தது. ஆனால் அதனுடைய உணவு முறையும் அண்மைக் காலத்தில் மாறிவிட்டது என்பதை ஜெர்மானிய விலங்கியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். அதுவும் மனிதனைப் போலவே எல்லா வகையான மாமிசத்தையும் உண்கிறது என்பதை கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனித்துள்ளனர். பெரிய ஆமையை இவை புரட்டிபோட்டு, அதன் ஓட்டை பாறையில்/மரத்தில் ஓங்கி அடித்து உடைத்து, உள்ளிருக்கும் மாமிசத்தை உண்ணத் துவங்கியுள்ளது. அதில் புரதம், தாது, கொழுப்பு உள்ளது என்றாலும் இந்த போக்கு புதிதாய் உள்ளதாம். எஞ்சிய மாமிசத்தை மரப் பொந்தில் சேமித்து வைக்கிறதும் ஆச்சரியமே என்கிறார்கள். புவி வெப்ப மாற்றத்தால் இவை நடக்கிறதா அல்லது மரபணு குணங்களே மாறுகிறதா என்பது ஆய்வில் தெரியவில்லை.
மனித பழக்கங்களில் ஏற்படும் மாற்றங்கள் எல்லாமே பல காலங்களுக்குப்பின் அவனுடைய மூதாதையர்களிடம் இப்போது மெள்ள வெளிப்படத் துவங்கியுள்ளது. ஆமை, மான், பன்றி இறைச்சி உண்ணும் இப்போக்கு நல்லதல்ல என்று அக்கட்டுரைத் தெரிவிக்கிறது. பெப்சி, கோக், அருந்தி சுருட்டு, சிகரட் புகைக்கும்போது இவையும் சாத்தியம்தான். அடுத்த நிலையில் இவை நர மாமிசம் உண்டாலும் ஆச்சரியமில்லை.


வியாழன், 23 மே, 2019

நேர்மைக்குக் கிடைத்த வெற்றி

'நரி சின்னத்தை அழுத்தினால் நாய் சின்னம் விழுகிறது' என்று சென்ற வாரம் வரை புகார் சொல்லி வந்தது திமுக. அதனால் எப்படி இருந்தாலும் மத்திய-மாநில அரசுகளின் கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்று எல்லோரும் பேசி வந்தனர். ஆனால் நேற்றைய முடிவுகள் அதைப் பொய்யாக்கியது. ஊழலில் சிக்கித் தவிக்கும் ராஜா, கனிமொழி, தயாநிதி, கார்த்தி சிதம்பரம், அனைவருமே அப்பழுக்கற்ற நேர்மையாளர்கள் என்று வாக்காளப் பெருமக்களே தீர்ப்பளித்தபின் உச்சநீதி மன்றம் நீதி விசாரணை நடத்தி அதில் தண்டனை வந்தாலும் மக்கள் நீதிமன்றத்தில் இவர்கள் பாஸாகி விட்டனரே!

மின்னணு வாக்கு எந்திரம் பற்றி இவர்கள் புகார் எழுப்பியது பொய்யா? அல்லது மேற்படி கனவான்கள் மீது ஊழல் குற்றம் சுமத்தியது பொய்யா? இதுவரை மெகா ஊழல் என்று எது நினைக்கப் பட்டதோ அது ஊழலல்ல, வெறும் மாயை என்று தமிழக மக்கள் சித்தம் தெளிவடைந்து விட்டனர் என்பதை தேர்தல் முடிவு காட்டுகிறது.

ஈழம் பிரச்சனை, மீத்தேன், கச்சத்தீவு, காவேரி பிரச்சனை, நியூட்ரினோ, ஜல்லிக்கட்டு, கெயில் குழாய் வாயு ஆகியவற்றுக்கு திமுக தான் முழுமுதற் காரணம் என்று இனி யாரும் திட்ட முடியாது.


செவ்வாய், 21 மே, 2019

அ-சைவம்

மனதின் உந்துதலால் நாவின் தேவைக்கேற்ப வளைத்துக் கொண்டு எதையும் உண்ணலாம். உடல் எதைச் செய்தாலும் ஆன்
பமா கெடுவதில்லையாம். பின் ஏன் கொலை தற்கொலை கற்பழிப்பு செயல்களைப் பெரிதுபடுத்த வேண்டும்? உடல் தீண்டப்பட்டும் ஆன்மா நல்லபடியே உள்ளதால் அது குற்றமாகாது என்றால் சட்டம் தண்டிக்கக் கூடாதே?

ஒரு மாசடைந்த ஆன்மா தானிருக்கும் தேகத்தை ஆட்டிப் படைத்திட, அது புத்திக்கெட்டு வேறொரு ஆன்மா குடியிருக்கும் தேகத்தைத் துன்புறுத்துகிறது. ஆக, இது இரு ஆன்மாக்களின் பழி தீர்க்கும் படலமா? அல்லது, இரு உடல்கள் மோதிக்கொள்ளும் களமா? அடிப்படையில் உணவுதான் மனதின் இயல்பைத் தீர்மானிக்கிறது. மனம் ஆசைப்பட உடல் உணவை உண்ண, உணவின் தன்மைக்கேற்ப உடலை தவறாக இயக்கி அது இறுதியில் அவ்வுடல் குடியுள்ள ஆன்மாவுக்குப் பழியைத் தேடித் தருகிறது. உடல்தான் தின்றது ஆனால் உணர்ச்சியின் செயலால் வந்த ஊழ்வினை தண்டனை ஆன்மாவுக்கு. கர்மவினைக் கேற்பத்தான் ஒருவன் சைவம்-அசைவம் உணவை உண்ண நேர்கிறது. கோபத்தால் வந்த பாவத்தால்தான் பிறவிகள் எடுக்கிறான். சைவ உணவே உண்டாலும்கூட அதிக உப்பு காரம் மசாலா பொருட்கள் மனதைக் கெடுக்கும். அதற்கு அடுத்த நிலையில் காரசாரமான புலால் உணவு.

சுட்ட புலால் வேண்டுமா? சுடாத புலால் வேண்டுமா? தொல்லுலகில் முன்னேறிய மூத்தகுடியே புலால் உண்டு கள் குடித்தபோது நாம் மட்டும் உண்ணாமல் இருந்தால் எப்படி? குறிஞ்சிநில முருகனே புலால் உண்டான் என்று ஒரு போடு போட்டால் எவராவது வாயைத் திறப்பாரோ?

புலால் உண்ணக்கூடாது என்பதைச் சித்தர்கள் திருவள்ளுவரும் வள்ளலாரும் உணர்த்தி விட்டனர். உடனே நம் மக்கள், 'குகன் இராமனுக்கு மீன் தந்தான், காளத்திவேடன் சிவனுக்கு மாமிசம் தந்தான்' என்று வாதம் செய்வார்கள். அந்த இரு வேடர்களும் இறைவன்பால் மூடபக்தி கொண்டதால் எது சரி/தவறு என்பதை அறியாமல் தாங்கள் உண்பதையே தந்தனர். ஆனால் அ-சைவம் என்றாலே சீவனற்ற என்ற பொருள் நிலவும். இதை அசைவர்களுக்கு யார் புரிய வைப்பது?

முகநூலில் அவரவர் மனதுக்குப் பட்ட புரட்சிகரமான சொந்தக் கருத்துக்களைப் பரப்புரை செய்து நியாயப்படுத்தி வருகிறார்கள். சைவம்-அசைவம் பேதமில்லை. இறைவனுக்கு நாம் விருப்பமுடன் எதையும் படைக்கலாம். சமய நூல்கள் சொல்லும் எந்த வரம்புகளும் தேவையில்லை. அனைவரும் இனி கருவறையில் மூலவரைத் தீண்டலாம், வங்கியில் பெட்டக அறையில் நிபந்தனையின்றி எல்லோரும் நுழையலாம். கோயிலில் பக்தி செலுத்துகிறோம், வங்கியில் பணம் செலுத்துகிறோம் ஆகவே அனைவரும் சமம்.   தனிமனித சுதந்திரத்தை இனி சமுதாய கோட்பாடு/ பக்தி/நிர்வாக சட்டதிட்டம் என்று சொல்லி யாரும் தடுக்கக் கூடாது என்று சொல்வார்கள்.







புதன், 8 மே, 2019

விந்தையான சமுதாயம்!

முகநூலில் பலர் பதிவேற்றும் படங்கள் எனக்கு ஆச்சரியத்தைத் தரும். மிகவும் பெருமையுடன் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட செயல்கள் என்று தலைப்பிட்டு குமரன்கள் முதல் கிழடுகள் வரை அலாதியான படங்களைப் போடுவார்கள். அவை:
௧. புறநகர் பகுதியில் வேப்பம் கொட்டைகளை விதைத்தோம், மரக்கன்றுகள் நட்டோம், காய்ந்த செடிகளுக்கு நீர் பாய்ச்சினோம் என்பதை பல கோணங்களில் காட்டும் ஒரு செல்ஃபி.
௨. உள்ளூர் கோயிலில் உழவாரப் பணி செய்தோம் என்று விபூதி பூசிக்கொண்டு புதர்மேடு, கிணற்றடியில் வேலை செய்யும் ஒரு போஸ்.
௩. கோடைக் காலத்தில் பந்தல் வைத்து தண்ணீர்-மோர் வழங்கினோம் என்று கேமிராவை நோக்கியபடி குடிக்க வருவோர்க்கு ஊற்றிக் கொடுப்பதாக ஒரு படம்.
௪. சாலையோரம் பிச்சைகார முதியவருக்கு உணவுப் பொட்டலம் தந்து பசியாற்றியதாக ஒரு குணசித்திரப் படம்.
௫. என்றோ ஒருமுறை முதியோர் இல்லத்தில் ஒருவேளை சோறு போட்டதற்கு அக்குடும்பமே கரண்டியுடன் களத்தில் பரிமாற நிற்கும் படம்.
௬. தன்னுடைய மனைவிக்கு-மகளுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, அவர்களுடைய வண்ணப் படத்தை பதிவிட்டு, முகம் தெரியாத எல்லோரையும் வாழ்த்தச் சொல்லச் சொல்லும் பரிதாபம்.
தகிக்கும் வெயிலில் வந்து குடிக்கப்போகிறவனுக்கு நிற்க இடமின்றி உபயதாரர் அத்தனைப்பேரும் நீர்மோர் பந்தலில் ஆக்கிரமிப்பார்கள். சிறிய மரக்கன்று ஒன்று நட ஆறு பேர் சூழ்ந்து நிற்பார்கள். இதுபோல் எத்தைனையோ நகைச்சுவையான படங்கள் உண்டு.
ஒவ்வொருவரும் அன்றாடம் சர்வ சாதாரணமாகச் செய்யவேண்டிய ஒரு சிறு சேவையை படம் பிடித்துப்போட்டு அதை அதிசயமான நிகழ்வாகக் காட்டிக்கொள்ளும் காலத்தில்தான் வாழ்கிறோம் என்பதை இவை நினைவூட்டுகிறது. மாம்பூ பூத்தாலும், காட்டுத்தீ எரிந்தாலும், கடும் வெயில் சுட்டெரித்தாலும், கால்நடை சாணம் போட்டாலும், உடனே தமிழ்/தமிழர் உணர்வை/ திருவள்ளுவரை அங்கே வலிய இழுத்து எப்படியேனும் இணைத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்போர் அதிகம்.. விந்தை!

வியாழன், 2 மே, 2019

உகந்த கல் எது?

நட்டகல்லும் ‘ஓம்’ என்று பேசி அதிர்வை வெளிப்படுத்தும் என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். அப்படி ஒலிக்கும் கல்லுக்குள் இறைவன் இருக்கிறான் என்பதை சிவவாக்கியர் சொன்னார். ஸ்தபதிகள் சிலை வடிக்க ஒவ்வொரு கல்லையும் தட்டிப்பார்த்து வெளிப்படும் ஓசையை வைத்துத்தான் தேர்வு செய்வார்கள். இல்லாத பட்சத்தில் அது சிலை வடிக்கப் பயன்படாமல் கால் மிதிக்கும் படிக்கல்லாகப் போய்விடுகிறது. ஸ்பதிகள் அந்தக் கல்லை நீர், ரத்தினம், தான்யம், தனம், வஸ்திரம், சயனம், என ஒவ்வொன்றிலும் ஒரு மண்டலம் வைத்து சோதனை செய்தபிறகுதான் தோஷமில்லாத அந்தக் கல்லுக்கு ஸ்பரிச பூஜை போட்டு பூக்களைச் சாற்றி, மந்திரம் ஓதி கடவுள் உருவத்தைக் குறிப்பார்கள். சிலையை வடித்த பிறகு இறுதியாக அந்தச் சிலையின் வலது/இடது கண்களை ஸ்தபதி திறப்பார்.

பாருங்கள்! ஒரு கல் மிதிபடுவதும் மதிக்கப்படுவதும் எப்படி என்ற ஆகம விதியை மிக இயல்பாக அவர் தன் பாடலில் (424) விளக்கிவிட்டார். ஓங்காரம் ஜெபிக்காமல் நாம் இருந்தால் நம்முள் நாதன் வந்து குடியிருக்க மாட்டான். ஆக, சிலை வடிக்க எவ்விதமான கல் உகந்தது என்பதை தெளிவாக்கி விட்டார். முன்பு என் நூலில் பக்கங்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு நான் எடிட் செய்து நீக்கிய சில பகுதிகளை இங்கே பதிவிட்டேன்.