நந்தி, பிரம்மன், திருமால், முருகன், இந்திரன், இடும்பன், சூரபத்மன், வீரபாகு; தசரதன், இராமன், இராவணன், அனுமன்; கிருஷ்ணன், பீமன்,... இவர்கள் யார்? தன் ஜனன வழித்தடத்தை போகர் விளக்கிக் காட்டுகிறார். போகரே பல அவதாரங்களை எடுத்து அவை அப்படியே நிலைத்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது. இதெல்லாம் சாத்தியமா? அஷ்ட சித்தியால் ஒருவரே பல ரூபங்கள் எடுக்கலாம்.
இராமாயணத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் என்ன செய்ய வேண்டும் என்பது ராமாவதாரம் சிருஷ்டி ஆகும்போதே முடிவானது.ஈசன் பணித்தபடி இந்திரன் தசரதனாக வருகிறார். அவருக்கு மகனாக போகர் 'இராமன்' என்ற பெயருடன் பிறக்கிறார். 'நீதான் பிறந்து விட்டாயே இனி எனக்கு என்ன வேலை? நான் என் இந்திர பதிக்கு போகட்டுமா?" என்று தசரதன் கேட்க, அதற்கு இராமன் (போகர்) 'உன் பதிக்கு போவது நல்ல விஷயம்தான், ஆனால் நான் வனவாசம் போன பின் நீ போ' என்றார். இராமன் பிறக்கும் போதே ஆரண்ய காண்டம் கதையும் சொல்லி விடுகிறார் போகர். நந்தியம் பெருமான் ஒவ்வொரு அவதாரத்திலும் தீயவராக வேடம் ஏற்று வதைப்படுகிறார். இதில் இராவணன் கதாபத்திரம் அவரே.
இராமாயணம் என்றொன்று உண்மையில் நடந்ததா? கைகேயியின் பேச்சைக் கேட்டு தசரதன் ஏன் இராமனை காட்டிற்கு அனுப்ப வேண்டும்? ராமன் சீதையை சந்தேகித்தது சரியா? ராவணன் நடந்து கொண்ட விதம் தகுமா? வாலியை மறைந்திருந்து இராமன் கொன்றது ஷத்ரியனுக்கு அழகா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு பட்டிமன்றங்களில் பேசுவதில் அர்த்தமில்லை என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் திரைகதை, வசனம், இயக்கம், எல்லாமே திட்டமிட்டப்படி நடந்துள்ளது. நாம் அதைப்பற்றி தணிக்கை செய்யவோ விவாதிக்கவோ ஒன்றுமில்லை.
ஆக, அவதாரங்களின் கதாபாத்திரமும் நடக்கவுள்ள கதையும் முன்பே ஈசனால் தீர்மானிக்கபட்டது என்று தெரிகிறதா? போகர் ஜெனன சாகரம் நூலிலிருந்து ஒரு பக்கத்தை இங்கே படத்தில் காண்கிறோம்.