பழநி மலையில் முருகனை தண்டாயுதபாணியாக நவபாஷாணத்தில் வடித்தபோது போகருடைய கோஷ்டியில் சீடர்கள் பலர் இருந்தனர். அவர்களில் புலிப்பாணி சித்தர்களும், கோரக்கரும் குறிப்பிட்டுச் சொல்லலாம். மூத்த சீடர் சிவலிங்க தேவ உடையார் 'புலிப்பாணி பத்திர குருசுவாமி' என்ற பட்டம் ஏற்றபின், சில காலங்கள் கழித்தே இளையவர் நைனாத்தே தேவ உடையாரை போகருக்கு அறிமுகம் செய்கிறார். 'இவன் பக்திமான், லோக சிந்தனையும், பூசை நெறிகளையும் வைத்திய முறைகளையும் தங்களிடம் இருந்து கற்க ஆவலோடு வந்துள்ளான். இவனையும் தாங்கள் ஏற்கவேண்டும்' என்று சிபாரிசு செய்கிறார்.
சீனம் போய்வந்தபிறகு தன்னுடைய சப்தகாண்டமாம் போகர் ஏழாயிரம் நூலை யாருக்காக இயற்றினார்? அது இளைய புலிப்பாணி சுவாமிகளுக்கு. பழனியில் குகை சுரங்கத்தின் உள்ளே சென்ற போகரை, புலிப்பாணியும் கோரக்கரும் சமாதி வைத்தபின், வெளியே வந்து சமாதி குகையின் நுழைவாயிலை அடைக்கிறார். சிறிது நேரத்திலெல்லாம் கோரக்கர் நாகையில் பொய்கைநல்லூர் தலத்தில் போய் சமாதி கொள்கிறார். அங்கே வந்து அவருக்கு சமாதிக் கிரியைகளை செய்ததும் போகர்தான். பிறகு அவர் சீனதேசதிற்குப் பறந்து விடுகிறார். அங்கே ஜெனித்தபின் தன் நாட்டு பிரஜைகளை எதிரிகளிடமிருந்து காக்க மன்னனாக பரிபாலனம் செய்யப்போவதை கோரக்கரிடம் சொல்லியுள்ளார். இதை சந்திர ரேகையில் வெளிப்படுத்தியுள்ளார். இன்றுவரை அந்த கடைசிக் கட்டத்தில் நிகழ்ந்தது என்ன என்பதை கோரக்கர் சொல்லாதவரை யாரும் அறியார்.
'நான் சமாதி கொண்டபின் சில காலங்கள் பூமியில் இருந்துவிட்டு நீயும் உடனே சமாதியில் அமர்ந்திடு. கலிகாலம் கேடுகெட்டது. அது உன்னையே பாழ் செய்யும்' என்று போகர் தன் இளைய சீடர் புலிப்பாணியிடம் உரைக்கிறார். அதன்படி புலிப்பாணியும் அடுத்து பிரவேசம் செய்ததாக அறியப்படுகிறது.
அதன்பின் இடைப்பட்ட சுமார் 13 நூற்றாண்டுகளில் குரு போகரும் சித்தர் புலிப்பாணியும் எண்ணற்ற ஜெனனங்களை எடுத்து கெடு கலியின் கடுமையைக் குறைத்து சித்தர்களின் ராஜ்ஜியத்தை நிலைநாட்ட தேசம் முழுதும் எங்கோ இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதில் சில ஜெனங்கள் மட்டுமே நமக்குப் புலப்படும். கலியுகத்தில் ஆன்மாவின் ஊழ்வினைப் பயனாக துன்பங்கள் மிகுந்து விடுவதால், அதை மட்டுப்படுத்த வருகிறார்கள்.
கலியில் பாவமூட்டைகள் சுமந்த ஆன்மாக்களே உலகெங்கும் நிரம்பி உள்ளதால் பேராசை கோபம் பொறாமை பகை என்ற வட்டத்திற்குள் சிக்கி வருகிறது. அவன் தாள் பணிந்து சிந்திக்க ஆன்மாக்களுக்கு அவகாசம் கிடைக்காமல் போகின்றது. அப்படியே கோயிலுக்குப் போனாலும், சிவபுராணம் படித்துகொண்டு, கன்னத்தில் போட்டுக் கொண்டு எல்லா அட்டகாசங்களும் அரங்கேறும் காலமிது. 'நிற்க அதற்குத் தக' என்பதை உணர்வதில்லை.
ஈசனின் தயை இருந்தால் மட்டுமே பிறவிப் பாவங்கள் முற்றிலும் தள்ளுபடியாகும். நமக்கு விட்டகுறை இருந்தால்தான் சித்தர்களின் ஸ்பரிசம் நம்மீது பட்டு பாவங்கள் நிவர்த்தியாகும். சித்த புருஷர்களும் எண்ணற்ற மகான்களும் நமக்கு மந்திர உபதேசமும் தீட்சையும் வழங்குவார்கள். அவர்கள் ஆசியுடன் அவர்கள் இட்ட கட்டளைப் பணிகளை முடித்ததும் நாம் வந்த வேலை முடியும். நாம் அவனிடம் ஒடுங்கும் தருணத்தை அவர்களே அறிவார்கள்.
'சட்டுபுட்டுன்னு சமாதிவிட்டு வெளியே வந்து அராஜகம் செய்யிற ஆசாமிங்களை துவம்சம் செய்து தர்மத்தை நிலை நாட்டணும். நம் கண்ணுக்கு எப்போது தெரிவாங்களோ? அதுவரை இருப்போமா?' என்று உங்கள் மனம் இக்கணம் நினைப்பதை உணர்கிறேன். கோரக்கர் சமாதியில் சிவலிங்கம் பளபளக்க வெளிப்படும் நேரம் கனிகிறது.