About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 20 ஜூன், 2021

வே.ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர்

அக்காலத்தில் மூன்று பெண்கள் சேர்ந்து அம்மானை விளையாடும் பழக்கம் தென்னகத்தில் இருந்தது. மூன்று / ஐந்து எண்ணிக்கையில் கல்லை மேலே தூக்கிப்போட்டுப் பிடித்து ஆடும்போது இடையிடையே இலக்கிய நயத்துடன் பாடல்களைப் பாடி கேள்வி/ பதில் கேட்டு விளையாடுவார்களாம்.






















இதுபோன்ற அம்மானை வகையைச் சேர்ந்த கதைப்பாடல்களை இளங்கோ அடிகள், மாணிக்கவாசகர், என் பலரும் இயற்றினார்கள். எங்கள் ஊரில் வித்துவான் வேலம்பாளையம் ரா.தெய்வசிகாமணிக் கவுண்டர் அவர்கள் இயற்றிய ஒரு சிறிய நூல் திரட்டு 'திருக்கண்ணப்பரம்மானை' என் கண்ணில் பட்டது. இவர் திருவையாறு அரசர் கல்லூரியில் படித்ததால் தமிழிலும் வடமொழியிலும் புலமை மிக்கவராக இருந்தார். படத்திலுள்ள நூலை இயற்றி அச்சிட்டபோது அவருக்கு வயது 24.

பஞ்ச மரபு, சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை, உதயணன் கதை, சிவகிரி வேலாயுதசாமி ஊஞ்சல், சித்தர் மடல், மேழி விளக்கம், பரத சங்கிருகம், என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை ஏட்டுச்சுவடியிலிருந்தும், கல்வெட்டு/ செப்பேடு ஆவணங்களிலிருந்தும் பிரதி எடுத்து நல்ல முறையில் பதிப்பித்தார்‌. உ.வே.சா அவர்களுக்குக் கிடைக்காத சில சுவடிகள் இவரிடம் வந்ததாம்.

"கொங்குவேளிரின் 'பெருங்கதை'யைத் தேடி உ.வே.சா. ஈரோடு வந்தார். வித்துவான் வே.ரா. தெய்வசிகாமணிக் கவுண்டரைச் சந்தித்து, "உம்மை யான் நினைத்தபடியே உம் தோற்றம் இருக்கிறது. சங்க நூற்கள் பலவற்றைப் பதிப்பித்த மகிழ்ச்சியினும் கொங்குவேள்மாக்கதை பதிப்பித்ததினால் உண்டான மகிழ்ச்சி பெரியதாயிற்று. அதன் பகுதிகள் சில கிடைக்கவில்லை. அவை உம்மிடம் இருப்பதாகச் சொன்னார்கள். இருந்தால் கொடும். இல்லாவிட்டாலும் அப்பகுதி உமக்குக் கிடைக்கும். கிடைத்தபொழுது என்னிடம் கொடும். அல்லது நீரே பதிப்பித்துவிடும். அது உம்மவர் செய்த நூல், உம் கொங்கு நாட்டு நூல்" என்று கூற, உள்ளம் மிக மகிழ்ந்ததாகத் தம் பஞ்சமரபு (இரண்டாம் பகுதி, முன்னுரை) நூலில் குறிப்பிடுகிறார் தெய்வசிகாமணிக் கவுண்டர்."

பஞ்சமரபு என்ற இசைநூலைத் தொகுத்தளித்ததால் 1975ல் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் இலக்கிய விருதைப் பெற்றார்.

பிற்பாடு ஓய்வு பெறும்வரை எங்கள் ஊர் SSV சங்கர வித்யாசாலா பள்ளியில் தமிழ்ப் பண்டிதராகப் பணியாற்றினார். திருப்பாண்டிக் கொடுமுடி தலபுராணம் தொகுத்தளித்தார். கவுண்டர்வாள் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர். நேரம் கிடைக்கும்போது அவருடைய நூல்களைத் தேடிப்பிடித்து வாசித்து வருகிறேன். An author lives for generations through his works என்பது உண்மையே!