பள்ளியில் தமிழாசிரியர் நாத்திகப் பகுத்தறிவாதியாக இருந்துவிட்டால் மாணவர்களின் பாடு திண்டாட்டம்தான். திருக்குறள், தேவாரம், கம்பராமாயணம், திருவருட்பா, பாடல்களை விளக்கி உண்மையான பொருள்தான் சொல்வாரா என்று அறிய முடியாது. அதனால் கோனார் தமிழ் உரையைத்தான் மாணவர்கள் நம்பியிருந்தனர்.
எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பிற்குத் தமிழ்ப்பாடம் நடத்த முதுகலை பட்டதாரி அசிரியர் திரு. இரா.தேன்மொழியான் என்பவர் நியமிக்கப்பட்டார். அவர் திராவிடக் கழக அபிமானி. கம்பராமாயணம் பகுதிகளை நடத்தும்போது இரட்டைப் பொருள் கொண்ட ஆபாசமான வர்ணனை கலந்துதான் விளக்கம் தருவார். இராமன்/ லட்சுமணன்/ சீதை இவர் வாயில் புனிதத்தை இழப்பார்கள். சில்க் சுமிதாவுடன் சீதையை ஒப்பிடுவார். பாடம் நடத்தும்போது பெரியாரின் கொள்கைகள் தீப்பொறி என வந்து விழும்.
“இராமன் என்ற ஓர் ஆரிய பார்ப்பனன் நம் கலாசாரத்தைக் கெடுத்தான். ஏண்டா வைத்தீஸ்வரன் நீ எப்படி?’ என்று ஒரு மாணவனைச் சீண்டுவார். வைதீஸ்வரன் என்ற மாணவன் தஞ்சாவூரிலிருந்து மாற்றலாகி வந்தவன் துடுக்குத்தனமானவன். அவன் பிராமணன் என்றாலும் கிராமத்துக் கெத்து/ சவடால் என எல்லா பண்புகளுமே அவனிடம் இருந்தது.
உடனே இந்த மாணவன் “சார், இராமன் பிராமணன் இல்ல ஷத்ரியன். நீங்க ஜாதியை மாத்திடீங்க. நாங்க எல்லாம் கலாச்சாரத்தை மாத்த மாட்டோம். உங்களைப்போல் பெரியவாதான் செய்வாங்க. நீங்க என்ன ஜாதி சார்?” என்றான் தடாலடியாக. இக்கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர், “ஏன்? நான் xxxx குலம்” என்றார்.
“சார், உங்க ஜாதியைவிட நாங்க உசத்திதான். இராமன்-சீதை புகழை நீங்க கெடுப்பீங்க. நாங்க செய்ய மாட்டோம். நல்ல வேளை நீங்க எங்க ஊர் பள்ளிக்கூடத்துல வேலைக்கு வரலை. தமிழ் வாத்தியாரே இப்படிப் பேசினா எங்க ஊர் மிராசுதார் தாத்தா பள்ளிக் கூடத்துக்கே வந்து நாக்கை இழுத்து வெச்சு சூடு போடுவார்” என்றான். மொத்த வகுப்பும் சிரிப்பொலியில் வெடித்தது. சீறாப்புராணம் நடத்தும்போது கதீஜாவுக்கும் சீதையின் கதிதான்!
அதன்பிறகு திரு.தேன்மொழியான் என்னதான் தேனொழுகப் பேசிப் பாடம் நடத்தினாலும் அவர் கடவுளைப் பழித்துப் பேசும் ஈனன் என்ற அளவில்தான் வைத்தீஸ்வரனின் எண்ணத்தில் நிலைத்தார். தன் மேலுள்ள குறைந்தபட்ச மரியாதையையும் சிதைத்துக் கொள்ளும் இப்படிப்பட்ட ஆசிரியர்களையும் ஆசிரியர் தினத்தில் நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த ஆசிரியரை அண்மையில் 'பூட்டும் சாவியும்' என்ற சிறுகதையில் ஒரு கதாபாத்திரமாக அமைத்தேன்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக