கீழ்வரும் இப்பாடலில் பரிசில் பெற வரும் ஓர் ஏழைப் புலவனின் வறுமை நிலையை ஆழமாக விவரிக்கிறார் 'சென்னிமலை முருகன் புலவராற்றுப்படை' நூலாசிரியர் வித்துவான் தெய்வசிகாமணிக் கவுண்டர். இவர் என் தாத்தாவின் நண்பர், என் தந்தையின் தமிழாசிரியர்.
“மானம் குலம் கல்வி வன்மை அறிவு தானம் தவம் முயற்சி பொறுமை மொழிக்காதல் என்ற பத்தும் பசிவந்தால் பறந்துபோகும் என்று ஔவை பிராட்டி சொல்லியுள்ளார். வறுமைப் பிணியில் வாடும் புலவனானவன் ஒட்டிய வயிறுடன், இருபுறமும் துருத்திக்கொண்டு நிற்கும் விலா எலும்புடனும், பொந்தில் இரையைப் பற்றிக்கொண்டுள்ள உடும்பைப்போல், சதை எல்லாம் வற்றிப்போய் உரித்தெடுத்த உடம்போடும், கந்தல் ஆடையை அணிந்தும், கையில் ஒரு கிழிந்த நூலேடுடன் வருகிறான்.
முத்தமிழில் கரைகண்ட புலவன் மும்மதயானைக்கு இணையான வீரியத்துடன் இருக்கவேண்டியவன் பூனையைப்போல் உள்ளான். வெயிலில் வதங்கிய மென்மையான மலர்போல் வாடியுள்ளான். வருத்தும் அந்த வறுமை மிகக்கொடியது” என்று அப்புலவனின் மெய்நிலையைப் பொருள்படப் பாடியுள்ளார்.
அதன் பின்வரும் பாடலில், “கடுங்காற்று மழை வெயில் என ஒன்றன்பின் ஒன்றாய் வந்து துயர் தருவதோடு இல்லாமல், ஓட்டைகள் நிறைந்த இல்லத்துக் கூரையோலை கீழே வறுமை என்னும் பேய் ஆட்சி செய்யும் அடையாளமாக, அந்தப்புலவனின் மனைவி தன் தலையில் எண்ணெய் வைக்காமல், முகத்தில் மஞ்சள் பூசாமல், நெற்றியில் திலகமிடாமல், கழுத்தில் மங்கிய கயிறு தெரிய, ஒட்டிய வயிறும், மெலிந்த இடையில் கந்தல் ஆடையுடன் துயர் நிறைந்தவளாக, கணவனுக்கு உப்புநீர் கஞ்சியேனும் தரவேண்டுமே என்ற கவலையில் தோய்ந்தபடி காணப்படுகிறாள்” என்று பாடுகிறார்.
-எஸ்.சந்திரசேகர்