"கிறிஸ்தவர்களின் நம்பிக்கையான இயேசு கிறிஸ்து உயிர்தெழுதல் பற்றி முட்டாள் தனமாக பேசிவிட்டு ரமண மஹரிஷி ஒருவர் தான் உண்மையில் உயிர்தெழுந்தார் என்று இசைஞானி கூறினார். அவர் அப்படி பேசுவதற்கு அவர் என்ன வரலாற்று ஆசிரியரா? அல்லது பெரிய ஆராய்ச்சியாளரா? இயேசு கிறிஸ்து நம்பிக்கை கொண்டவர்களுக்கு அவர் கூறுவது காயப்படுத்துவதாக இருக்காதா?" இது இணையத்தில் வந்த செய்தி. ஜேம்ஸ் வசந்தன் பேசிய இச்செய்தி மீண்டும் நேற்று உயிர்த்தெழுந்துள்ளது.
சித்தர்கள் பலர் சமாதியில் மூச்சடங்கி இருந்தபின் சில காலம் கழித்து வெளியே வந்தது பற்றி நாம் நிறைய அறிவோம். ஏசுவும் அப்படித்தான்! கை வெட்டப்பட்டாலும், முழு உடலும் மண்ணுக்குள் வெகுநாள் மூழ்கி இருந்தாலும் மகான் நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திரர் திடீரென இயல்பு நிலைக்கு வந்து தன் போக்கில் நடந்து போனதும் இவ்விதம்தான்.
ஆணிகள் அடித்தும், ஈட்டியால் குத்தியும் வெளிப்போக்காக இறந்ததுபோல் தெரிந்தாலும் சிலுவையில் ஏசு இறக்காமல் உயர்நிலை சமாதி யோகத்தில் தன்னிலை மறந்து அப்படியே இருந்திருக்கலாம். எல்லா சூட்சும ரகசியங்களும் பைபிளில் வெளிப்பட அவசியமில்லை. சிலுவையிலிருந்து இறக்கிய பின் ஏசுவின் உடல் வைக்கப்பட்ட குகைப்பாறை வெடித்தது, ஒளி ரூபமாய் உடல் மறைந்து போனது. அவர் உயிர்த்தெழுந்ததை அறிவிக்கச் சீடர்கள் முன் தோன்றினார். இதெல்லாம் சித்தர்களின் இயல்பு. 12 முதல் 30 வயது வரை பதினெட்டு ஆண்டுகளில் இங்கே போகரிடம் அவர் என்னென்ன சித்திகள் கற்றார்? அகத்தியரிடம் ஏசு விருது பெற்றாரா? இதெல்லாம் நம்மைப்போன்ற சாமானியர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை. அது பரம ரகசியம்!
உள்ளதை உள்ளபடி ஏற்பதுவே நன்று. புகழின் உச்சியில் உள்ளவர்கள் தங்களுக்குத் தெரியாத விஷயத்தைக் கையில் எடுத்தும் சர்ச்சைகள் பேசியும் எதற்கு இந்தத் தேவையற்ற கசப்பு? சிவசிவா!
-எஸ்.சந்திரசேகர்