தென்னிந்தியாவின் கணிதமேதை என்றதும் எஸ். ராமானுஜன் பெயர்தான் நம் நினைவுக்கு வரும். அவர் கும்பகோணத்தில் பிறந்து அங்கே Town High School பள்ளிக்குச் சென்றார். ஆனால் குடும்பச் சூழல் காரணத்தால் மேற்கொண்டு தன் படிப்பைத் தொடரமுடியாமல் சிபாரிசு மூலம் மெட்ராஸ் போர்ட் டிரஸ்ட்டில் குமாஸ்தா பணிக்குச் சேர்ந்தார். ஆயினும் கணிதம் மீதிருந்த தீராத காதலால் அவருடைய ஆய்வுகள் தொடர்ந்தன. அப்போதே அவர் வீட்டுத் திண்ணையில் BA Hons. மாணவர்களுக்குக் கணிதப்பாடம் எடுத்தவர். முறையான உயர்கல்வி இல்லாததால் பல்கலைக்கழகத்தில் சேரமுடியாமல் இருந்தது. இவருடைய திறமைகளை அறிந்த பேராசிரியர் Hardy இவருக்கு லண்டனில் வாய்ப்பு தந்தார். Number Theory பற்றி அவர் பல நுட்பங்களையும் தீர்க்கப்படாத புதிர்களையும் தீர்த்தார். வெளிநாட்டில் நிலவிய குளிர் இவர் உடல்நலத்தைப் பாதித்தது. சைவ உணவையும் ஆச்சாரத்தையும் கடைப்பிடிக்கும் இவருக்கு அங்கு சரியான உணவும் இல்லை. காசநோய் பீடிக்கப்பட்ட நிலையில் ஊர் வந்து சேர்ந்தார். 1920இல் சென்னையில் காலமாகும்போது அவருக்கு வயது 32.
1938ஆம் ஆண்டு அதே கும்பகோணத்தில் சி.பி.ராமானுஜம் என்பவர் பிறந்தார். அவர் வசதி படைத்த குடும்பத்தில் பிறந்தார், அதே Town High School பள்ளியில் படித்தார். பிற்பாடு சென்னைக்கு வந்தார் லயயோலா கல்லூரியில் உயர்கல்வி பெற்றார். கணிதத்தின் மேல் இருந்த மோகம் அவரைப் புதிய கோணத்தில் Number Theory தலைப்பில் ஆய்வுகள் செய்யத்தூண்டியது. தன் பதினெட்டாவது வயதில் மும்பை Tata Institute of Funamental Research கழகத்தில் சேர்ந்து பல வியக்கும் கோட்பாடுகளை எடுத்துரைத்தார். அங்கு நல்ல ஊதியம், பெயர் எல்லாம் கிடைத்தது. கணிதமேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் எங்கே விட்டாரோ அங்கிருந்து இவர் தன் பணியைத் தொடர்ந்தார். பாரீஸ் சர்வகலாசாலையில் சிறப்புப் பதவியை ஏற்க அங்கே போகும்போதே உடல்நலம் குன்றியது. மீண்டும் மும்பைக்குத் திருப்பி அனுப்பபட்டார். Schizopherenia நோய்த்தாக்கம் முன்னேறிய நிலையில் இருந்ததால், 1974ஆம் வருடம் மறைந்தபோது அவருக்கு வயது 36.
ஆக ஆன்மாவின் பயணம் என்பது அளிக்கப்பட பணியை முடிக்கும்வரை மறுபிறவி எடுத்துக்கொண்டே இருக்கும் என்பதற்கு இந்த கணிதமேதைகளின் வாழ்க்கையே சான்று.
முந்தைய கணிதமேதை ராமானுஜன் தன்னுடைய குலதெய்வமான நாமகிரித்தாயார் மேல் தீவிர பக்தி கொண்டிருந்தார். தான் கண்டுபிடிக்கும் சிக்கலான கணித சூத்திரங்கள் யாவும் அவள் தருவது என்று பகிரங்கமாகச் சொன்னவர். அந்த அர்ப்பணிப்பும் சரணாகதியும்தான் அவருடைய மறுபிறவியில் உயர்கல்வி, வாழ்க்கை வசதிகள், ஆராய்ச்சி வாய்ப்பு, பேராசிரியர் பணி, நல்ல ஊதியம் என எல்லாமே கிடைக்கச்செய்தது. இருந்தாலும், அந்த ஆன்மாவுக்கு இரண்டு பிறவிகளிலும் விதிக்கப்பட்ட ஆயுள் மிகச்சொற்பமே!
-எஸ்.சந்திரசேகர்