About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 26 ஜனவரி, 2025

குறுக்கு வழி என்ன இருக்கு?

வாட்ஸப்பில் ஆடியோ செய்தி ஒன்றை நண்பர் அனுப்பி சந்தேகம் கேட்டார். அந்தக் குரல்பதிவு செய்தியில் “இன்னின்னக் கிழமையில் இத்தனை விளக்குகள் ஏற்றிவிட்டு, குடும்பத்தில் தாய்/தந்தை வழியில் வந்து சேர்ந்த கர்மவினைகளும், பூர்வஜென்மங்கள் மூலம் வந்த வினைகளும் மொத்தமாக எல்லாமும் இக்கணமே என்னைவிட்டு அகலட்டும்” என்று வேண்டிக்கொண்டால் உடனே நிவர்த்தி கிட்டும் என்று அதில் தகவல் இருந்தது. இது உண்மையா என்று கேட்டார்.

தெரியாது. இதில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றேன். “என்னங்க நீங்களே இப்படி சொல்றீங்க” என்று அவர் கேட்டார்.

“ஆமாங்க. இது மட்டுமே போதும்னு சொன்னால் எல்லாருமே ஒரு எண்ணெய் டின் வாங்கி, குறிப்பிட்ட காலத்திற்கு அகல்தீபம் போட்டு சிவன் கண்ணில் மண்ணைத்தூவி எப்படியாவது கர்மாவை ஊதி விரட்டிடலாமே. அப்படி நடக்கிறதா? இன்னும் சிலர் குலதெய்வக் கோயிலில் சேவல்/ஆட்டுக்கிடா வெட்டினால் எல்லா கர்மவினையும் தொலைந்து அந்தந்த வம்சத்தில் சுபிட்சம் வரும்னு சொல்லி வராங்க. உங்க கர்மவினை அகல மற்ற உயிர்களைக் கொன்றால் எல்லாம் சரியாகுமா? நாட்டார் தெய்வங்கள் மற்றும் சிறுதெய்வங்களுக்கு காலங்காலமாக இதுபோன்ற பலிகள் தருவது நம் மரபு என்று பலர் வாதிடுவார்கள்.

உயிர்பலி என்பது (சாப நிவர்த்தி சடங்கு செய்தபின்) அஷ்டகர்மம் மற்றும் தந்திர வழிபாடுகளுக்கு மட்டும்தானே தவிர நம்முடைய கெடுசெயலால் பிறவிகள் தோறும் சம்பாதித்த ஊழ் வினைகளை விரட்டுவதற்கு அல்ல! நீங்கள் செய்த குற்றத்திற்கு வேறு யாரோ சரன்டராகி பழியும் தண்டனையும் ஏற்றுத் தியாகி ஆகிறான் என்றாலும், ஆன்மா சாட்சியாக நீங்கள் செய்த பாவத்தின் கர்மவினை இன்னும் துடைக்கப்படாமலே உள்ளது. கறை படிந்த ஆன்மாவை சிவன் ஏற்பதில்லை. மீண்டும் பிறக்க வைத்து இன்னல்கள் தந்து பாடம் புகட்டி துவம்சம் செய்து விடுகிறான்.

ஏங்க.. அப்படீனா, இந்த குறுக்கு வழி யுக்தியை நம்ம மூதாதையர்கள் செய்யாமல் இருந்திருப்பார்களா? நிச்சயம் செய்திருப்பார்கள். அப்படிச் செய்திருந்தா நாம் இந்த வம்சத்தில் வந்து பிறந்து ஏன் கஷ்டப்படணும்? சுகப்பட/ துக்கப்பட ஏதோ கர்மவினை இருந்தால்தானே அந்த வம்சத்தில் அடுத்தடுத்து பிறப்புகள் வருது. பாட்டன்/ பூட்டனே வந்து எஞ்சிய வினைகளைக் கழிக்கப் பிறப்பதால் அவங்களோட பெயரை வைக்கிறாங்க. மேற்படி பரிகாரம் எல்லாம் செய்தால் சந்ததியில் இம்மிகூட கஷ்டங்கள் சோதனைகள் வரக்கூடாதே? ஆனால் வண்டி நிறைய ஏன் வருகிறது? சற்றே யோசிக்கவும்.

உயிர்பலி தந்தபின், அகல்தீபங்கள் எற்றிவிட்டபின், இனிமேல் மேற்கொண்டு தெரிந்தோ/தெரியாமலோ செய்யப்போகும் ஆகாம்ய பாவங்கள் தன்னைப் பாதிக்காதவாறு தன்னுடைய செயல்களை எவ்விதத்திலாவது திருத்திக்கொண்டானா? மீண்டும் ஒரு பிறவி எடுக்காமல் இருக்க என்ன வழி வைத்துள்ளான்? மனத்தால் வாக்கால் உடலால் அவன் செய்யும் பாவங்களை எரிக்காமல், கடனேயென அகல் தீபம் ஏற்றிவிட்டு வந்தால் போதுமா? கிடா வெட்டிப் படைத்தால் இவனுடைய எல்லா ஆன்மவினைகள் வெட்டப்படுமா? சிவன் மனம் மகிழ்ந்து இவனுக்கு வீடுபேறு தருவானா?  

சைவர்கள் தாம் உண்ணும் உணவைத்தான் படைப்பார்கள், அசைவர்கள் அவர்களுடைய பழக்கப்படி செய்வார்கள். மலைச்சாதி குறவர்கள் தேனும் தினைமாவும், வேடுவர்கள் பச்சை/சமைத்த மாமிசம், கிழங்கு, மீன் என்று படைப்பார்கள். அது அவரவர் வாழ்வியலுக்கேற்ற குலதர்மம்.

அகத்தியர் தன் கன்மகாண்டம் நூலில், ஒருவனுடைய முற்பிறவியில் அவன் செய்த அட்டூழியச் செயல்களுக்கு அகல்தீபங்கள்/ உயிர்ப்பலிகள் என்று எதையும் சொல்லவில்லை. இத்தனை பேர்க்கு வஸ்திரம், கன்யாதானத்திற்குத் தங்கம், அன்னதானம், ஆலயத்திருப்பணி, தல யாத்திரை, நதி நீராடல், என இதுபோல் பணம் கணிசமாகச் செலவாகும் பல்வேறு உபாயங்களைச் சொல்லிவிட்டு, இதெல்லாம் செய்தால் இத்தனை மண்டலத்தில் நோய் குணமாகும், குடும்பக்கஷ்டங்கள் தீரும், பீடித்த செய்வினைகள் அகலும், திருமணமாகும் என்றும், அதன்பின் வாழ்க்கையில் அவன் தருமநெறி கடைப்பிடித்து யோக்கியவானாய் இருந்தால் சுகமாக இருப்பான், இறையாசிகள் பெறுவான் என்கிறார். சிலர் இவ்வளவு செலவு ஆகுமா என்று பயந்து நெடிய பரிகாரம் செய்யாமல் விட்டுவிடுவார்கள். சொன்ன பரிகாரம் செய்தாலும் பிராப்தம் இருந்தால் நிவர்த்தி ஆகலாம். இது மிக நுட்பமான விஷயம் என்பதால் எளிதில் தப்பிக்க முடியாது என்பதே உண்மை. இதைவிட காக்கை பசு நாய் எறும்பு முதலிய ஜீவன்களுக்குச் சோறிட்டு நம் கர்ம வினையைக் குறைப்பது எளிய வழி.

இப்போது உங்களுக்குப் புரிந்ததா? பரிகாரம் என்பது மன ஆறுதலுக்கே! ஆகவே, தினமும் இருவேளை தீபம் ஏற்றி மலர்கள் சாற்றி வழிபாடு செய்து பிரார்த்தனைகளை மனதார அவன் பாதத்தில் சமர்பித்து விடுங்கள்.  வேண்டாததைக் கைவிட்டு இயன்றவரை தரும நெறிப்படி வாழ வாக்குறுதி தாருங்கள். உங்கள் குலதெய்வம் நல்வழியைக் காட்டும்!

-எஸ்.சந்திரசேகர்



திங்கள், 6 ஜனவரி, 2025

"ஓங்காரத்தில் வந்த பெருவெடிப்பு!"

 இப்படத்தில் உள்ளதைத் திருமூலர் ஏற்கெனவே தன் கருக்கிடை நூலில் விளக்கமாகச் சொல்லியுள்ளார்! அந்த ஒவ்வொரு அண்டத்திலும் ஒவ்வொரு விதமான மனிதர்கள் சித்தர்கள் உள்ளனர். அதன் தொலைவு பரிமாணம் குணாதிசயம் என அனைத்தையும் சொல்லியுள்ளார். அவர் சுற்றிப் பார்த்த அண்டம் பூமியிலிருந்து 160 அண்டங்கள் அப்பால் இருந்துள்ளது. இப்படியே 1008 அண்டரண்டங்களில் வாழும் சித்தர்கள் மனிதர்கள் ஜீவராசிகள் உண்டு என்பது தெரிகிறது.

வெவ்வேறு நிறத்தில் உருவத்தில் உள்ள அவர்கள் நீருக்குள் காற்றுக்குள் வாழும் திறன் பெற்றவர்களாகவும், அகர முதல ஓங்காரம் மூலம் பிரபஞ்சத்தில் சிருஷ்டி நடந்த காலம் முதலே உள்ள அவர்களை நிராமயத்தார் (எ) ஆதி சித்தர்கள் என்று திருமூலர் சொல்கிறார். அவர்களுடைய தொன்மை நிலையைக் கண்டுகொண்டு தரிசித்துக் கைகூப்பி வணங்கி ஆசியும் உபதேசமும் பெற்றதாய்த் திருமூலர் தெளிவாகக் கூறியுள்ளார். 

ஆக அத்துணை Universes உம் Prior to the Big Bang என்பதைவிட At the time of Big Bang என்ற சொற்றொடரே இப்படத்தில் சரியாக இருக்கும். 

'ஞானம் தரும் சித்தர் பாடல்கள்' என்ற என் நூலில் இதைப்பற்றிய விரிவான அத்தியாயம் உள்ளது. விலை உரூ.150/- DK Publishers, 99406 64635, 99404 98435

-எஸ்.சந்திரசேகர்