இன்றைக்கு ஆயிரத்து இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 7- 8 ஆம் நூற்றாண்டில், சீனத்து போகருக்கு 15 முக்கிய சீடர்கள் இருந்தனர் என்றும் அக்குழுவில் அப்போது மிக இளம் வயதான அடியேனும் ஒருவன் என்பதை அறிந்து கொண்டேன்.
பழனிமலை அடிவாரம் அருகாமையில் 'பேக வனம்' என்றதொரு மாபெரும் மூலிகைக் காடு இருந்ததென்றும் அங்கே மூலிகையைப் பறிக்கவும் மருந்துகளை அரைக்கவும் போகர் என்னைப் பணித்தார். அச்சமயம் அருகே இருந்த கல் விழுந்து என் வலது கரத்தில் ஆழமான காயம் ஏற்பட்டுவிட்டது.
உடனே போகர் எனக்கு மருந்திட்டு தன் கண்காணிப்பில் இருக்கவேண்டும் என தன் பக்கத்திலேயே என்னையும் அமர வைத்துக்கொண்டார். எங்கே போனாலும் அவருடைய இடது கரம் என் வலது கையைப் பற்றியே இருக்குமாம். அப்போது முதல் அவருடைய செல்லக் குழந்தையாக ஆகிவிட்டேன் என்பதும் அறிந்தேன். இப்போதுள்ள என்னுடைய இந்த முகம்தான் அப்போதும் இருந்தது என்றும், தலைமுடி சடையாக முடியாமல் என் முதுகுவரை அவிழ்ந்து இருந்ததாம். அப்படி ஒரு வனம் போகருடைய பெருநூல் பாடல்களில் எங்கேனும் சொல்லப்பட்டுள்ளதா என்பது எனக்கு இப்போது நினைவில் இல்லை.
அதன்பிறகு நான் எடுக்கும் எல்லா மறு பிறவிகளிலும் என் வலது கரத்தில் காயம் ஏற்படுவதும், அந்நேரம் சிகிச்சையளித்து மருந்திட குரு போகர் அக்கணமே வந்து தோன்றுவதும் இன்றுவரை நடந்து வருகிறது என்பதையும் அறிந்து கொண்டேன். கையில் காயம் ஏற்பட்டு அது அவரால் குணமாவதும், அதன்பின் சித்த ஆன்மிக ஞானமானது ஓதாமலே என்னுள் வந்து இறங்கிவிடும் என்பதும் காலம் வரும்போது அதுவே வெளிப்படும் என்பதையும் அறிந்து கொண்டேன்.
தன்னுடைய எந்த நூலை நான் எழுத வேண்டும் என்று பணிக்கின்றாரோ, அதைத்தான் இதுவரை எழுதியதாகவும், அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை அவரே தீர்த்து வைத்து வழி காட்டுகிறார் என்பதையும் அறிந்துகொண்டேன். சித்த மரபில் நான் பூரண நிலையை அடைந்து உய்வு பெற பிறவிகள் தோறும் அவரே உறுதுணையாய் இருக்கிறார் என்பதை அறிந்து ஆச்சரியத்தில் உறைந்து போனேன்.
இதையெல்லாம் ஒரு மூத்த யோகி தன் அருட்பார்வை மூலம் திரையில் ஓடும் படங்களாகப் பார்த்துவிட்டுச் சொன்னார். ஆக பிறவாத நிலையை நம் ஆன்மா எட்டும்வரை விட்டகுறை பயனாக குரு- சீடர் உறவு பிறவிதோறும் தொடர்ந்து வருகிறது. எல்லாம் சிவசித்தம் 🕉️ 🙏
-எஸ்.சந்திரசேகர்
