இவர்தான் திரு.சபரிஷ் ஷட்ராக். என்னிடம் மனிதவள மேலாண்மை படித்த மாணவர். இவரைப்பற்றி
நான் நிறைய சொல்லவேண்டும்.
வயது 28. இவருடைய தந்தை ஒரு தச்சர், தாயார் இல்லத்தரசி, உடன் பிறந்த ஒரு அக்கா. பள்ளியில்
படிக்கும்போது இவருடைய தந்தை கண்பார்வை குறைந்து அவர்கள் வீட்டருகே ஒரு சாலை
விபத்தில் இறந்து போனார். இவருடைய தாய் குடும்பத்தை நடத்த வீட்டு உதவி வேலைகள் செய்து
மிகவும் சிரமப்பட்டு குடும்பத்தை ஓட்டினார். பள்ளியில் படிக்கும்போதே சபரி பகுதிநேர
வேலைகள் நிறைய செய்து தன் படிப்பிற்கும் குடும்பத்திற்கும் தேவையான பணத்தை
சம்பாதித்தார். அதிகாலையில்/ நள்ளிரவில் சினிமா போஸ்டர்கள் சுவற்றில் ஒட்டும்வேலை,
காலையில் பேப்பர் போடுவது, பிறர் வீட்டில் சிறு பணிகள் செய்து தருவது, கூரியர் பாய், என்று பல
வேலைகள் செய்தார். சிலசமயம் பெரிய அந்தஸ்திலுள்ள சமூக நிழற் கூட்டம் கண்ணிலும்
பட்டுள்ளார். காலபோக்கில் இவருடைய சொந்தங்கள் இவர்களிடம் பாராமுகமாய்
இருந்தனர். முதல் வகுப்பில் பிளஸ்-டூ முடித்ததும், கல்லூரியில் படிக்கவேண்டிய கட்டாயம்
எழுந்தது.
இவர்களுடைய சர்ச் குழு பாதிரியாரின் சிபாரிசு கடிதம் பெற்று அப்பகுதி
கவுன்சிலரை பார்த்து உதவி கோரினார். ஒரு தனியார் கல்லூரியில் மாலைநேர வகுப்பில் அட்மிஷன்
கிடைத்து BA படித்துத் தேறினார். பகலில் தனக்கேற்ற ஒரு முழுநேர வேலையைப் பார்த்தார். கால்
சென்டரில் பணிசெய்தபின் கிடைத்த அனுபவத்தில் இன்று சிறுசேரியில் ஒரு பிரபல IT
நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் பணி புரிகிறார்.
மெல்ல தன் குடும்பப் பொறுப்பை ஏற்றுகொண்டார். மணம் முடித்த அக்காள் குடும்பமும்
இவர்களுடன் நிம்மதியாக வாழ்ந்து வருகின்றனர். “சார், சொந்தமா என் சக்திக்கேற்ப சின்னதா
ஒரு கால் கிரவுண்டு நிலமாவது வாங்கி என் அம்மாவுக்கு வீடுகட்டி கொடுக்கணும். அவங்க
கஷ்டப்படாம இருக்கணும்ங்கிறதுதான் என் ஆசை சார்.” என்று கண்கள் விரிய தன் கனவுகளைச்
சொல்வார். தனக்குப் பிடித்த ‘அப்பாச்சி’ இருசக்கர வண்டி வாங்கினார். குடும்பம்
சற்று பெரிய வீட்டிற்கு குடிபோனது. பொருளாதாரம் வலுபெற்றது. பணத்தின் அருமை உணர்ந்தவர் என்பதால், சிக்கனமாய் பணத்தை செலவழித்தார். அவரிடம் இன்னும் ஒரு குழந்தைத்தனம் தெரிந்தது. சற்றும் கர்வமோ பந்தாவோ இல்லை. தன் தாயின் சம்மதத்தோடு தன்னை காதலித்த பெண்ணை கரம் பிடித்தார். இன்று ஒரு வயது குழந்தை உள்ளது. மகிழ்ச்சியான கூட்டுக் குடும்பத்தில் வாழ்கிறார்.
இன்னல்களுக்கிடையே கடுமையாய்
உழைத்து வாழ்க்கையில் முன்னேறிய பெரிய மனிதர்களைப்பற்றி நாளிதழ்களில் படித்திருப்போம்.
ஆனால் இவரை கண்கூடாகக் காண்கிறேன். கெட்டு போகக்கூடிய வாய்ப்புகள் கைக்கு எட்டும்
தூரத்தில் இருந்தும் சபரிஷின் மனம் அதை நாடிப் போகவில்லை. எந்த தீய பழக்கமும் இல்லாத
ஒரு கண்ணியமான நபர். தன் லட்சியத்தை அடையும் வழியில் எண்ணத்தை சிதறவைக்கும் பல தடைகளை
தாண்டி வந்துள்ளார். கர்த்தரின் கிருபை பெற்ற நல்லொழுக்கமானவர். தன் வருவாயில்
தவறாமல் ‘பங்குப்பணம்’ கொடுக்கும் இறைப்பற்று மிக்கவர். என்னிடம் பயின்றோர் எத்தனையோ பேர். அதில் சிலர் மட்டுமே மனதில் தங்குவர். அவர் தன் கடந்தகாலம் பற்றி யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் என்னிடம் மட்டும் பகிர வேண்டும் என்ற எண்ணம் ஏன் வந்தது என்று தெரியவில்லை என்பார். இவருடைய கதை இக்கால இளைஞர்களுக்கு ஊக்கம்தரும்!
"Really inspiring. I need to write about you in my next book" என்று சொல்வேன். அப்போது அவருக்கு பிரத்தியேகமாய் ஒரு ஆங்கிலக் கவிதை எழுதிக் கொடுத்தேன். படித்துவிட்டு நெகிழ்ந்துபோனார். இன்று சபரிஷ் என்னுடைய கட்டுரையின் மையக்கருத்தாக இடம்பெற்று விட்டார். அவருடைய கனவு மெய்ப்பட என் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.