முற்பிறவியிலிருந்த முகச்சாயலே மீண்டும் மறுபிறவியில் தொடர்கிறது என்பதை என்னுடைய அனுபவம் வெளிக்காட்டியதுப்பற்றி முன்பு ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். அது இன்றைக்கும் எனக்கு ஆச்சரியமூட்டும் புதிர்தான். ஒவ்வொரு பிறவியில் ஒவ்வொரு வருணத்தில் ஏதோவொரு சாதியில் பிறந்து வாழ்ந்து மறிக்கிறோம். பிறகு வேறொரு இடத்தில் நம் ஊழ்வினைக்கேற்ப ஏதோவொரு குடும்பத்தில் உயர்/தாழ் பொருளாதாரச் சூழலில் பிறந்து வளர்ந்து, படித்து/படிக்காமல், வேலைக்குப் போய்/போகாகாமல், திருமணம் ஆகி/ ஆகாமல், பிள்ளைப் பேறு கிட்டி/கிட்டாமல் போகலாம். நாம் பிறந்த அந்த சந்ததியில் முன்னோரின் உடலமைப்பு முகச்சாயல், நடை, குரல் என்று பலவற்றைப் பெறுகிறோம். ராகு-கேது வழியே இப்பண்புகள் கடத்தப்படுவது நியாயமக உள்ளதுதான். விட்டகுறை தொட்டகுறையாக ஊழ்வினையை அனுபவித்துத் தீர்த்திட அவர்களே நாமாக பிறந்திருப்போம் என்ற காரணம் இருப்பதால் அவர்களுடைய பெயரையும் நமக்கு வைக்கிறார்கள்.
சரி. அவர்கள் எப்போதோ இறந்தபிறகு நேரடியாக இப்போதுதான் நாமாகப் பிறக்கிறார்களா? இல்லை! அவர்கள் இறப்புக்கும் நம் பிறப்புக்கும் இடைப்பட்ட காலத்தில் இதற்குமுன் அவர் எடுத்த வேறு ஜெனனங்களில் அந்தந்த சந்ததியில் பிறந்து ஊழ்வினையைத் தீர்த்துவிட்டு இறந்தபின், அடுத்து நாமாக இக்குடும்பத்தில் தக்க சமயத்தில் வந்து பிறக்கிறார்கள் என்பது என் மதியில் உணர்ந்த பொருள். சிக்னல் விழுவதற்குத் தக்கபடி ஒரே தண்டவாளத்தை வெவ்வேறு ரயில்களுக்கு மாற்றி வளைத்து வழி செய்வதைபோல்தான் இதுவும். இப்படியிருக்க அதே முகமும் உருவ ஒற்றுமையும் ஒவ்வொரு பிறவியிலும் வருமா என்பது நம்பும்படி இல்லையே என்று நானே நினைத்ததுண்டு. ஆனால் அது அப்படித்தான் என்பது பாலக்காடு பகவதி கோயிலில் தெரிந்தது. இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.
பல வருடங்களுக்குமுன் தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் மகள் திருமதி.அருணா அவர்கள் அளித்த பேட்டியில், ஒரு முற்பிறவியில் தான் அக்பரின் மனைவி ஜோதாபாய் என்பதை டிவி நிகழ்ச்சியில் உறுதியாகச் சொன்னதை நான் பார்த்துக் கொண்டிருந்தேன். வடநாட்டுப் பெண்ணான இவரை சிறு வயதிலேயே ஆதித்தனார் தன் மகளாக சுவீகாரம் ஏற்றார். அவர் தன் பிறந்த வீட்டு நபர்களுடன் சுற்றுலா போனபோது, ஃபதேபூர் சிக்ரியில் தான் வாழ்ந்ததாகவும் அக்பர் பாதுஷா தனக்காகத்தான் ஜோதா மஹால் கட்டித் தந்தார் என்றும் சொன்னார். அதை அப்போது யாரும் நம்பவில்லை.
பிறகு டிவி குழு இப்பெண்மணியை அங்கு அழைத்துச் சென்றது. அங்கு அரண்மனையில் ஒவ்வொரு இடத்திலும் நின்று தேம்பித் தேம்பி அழுதார். திடீரென டூரிஸ்ட் guide யிடம் ‘நான் அங்கு பிரசவித்த நினைவு வருகிறது, இப்போது அது என்ன இடம்?’ என்று கேட்டறிந்தார். காலவோட்டத்தில் அது கொத்தளம் குளியலறை என்று மாறியதாக ஏதோ ஹிந்தியில் சொன்னார். உள்ளே ஆங்காங்கு வண்ணச் சித்திர வேலைப்பாடுகள் நிறைய இருந்தது.
அருணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்போது மாறுவேடப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெற்றாராம். அப்போது அவரது சிறுவயது புகைப்படத்தைக் காட்டினார்கள். அதோடு ஃபதேபூர் சிக்ரி கோட்டையின் சுவற்றிலுள்ள ஓவியத்தையும் காட்டினார்கள். என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை. இவருடைய முகம் அச்சு அசலாக அங்கு ஓவியத்தில் இருந்தது. இப்போது இவருக்கு வயது கூடியுள்ளதே தவிர அதே முகம்தான். இது எப்படி சாத்தியம் என்று அப்போதே என்னுள் கேள்வி எழுந்தது. ரஜபுத்திர ராணி ஜோதா பாய்க்கும், இந்த அருணாக்குவும் ஐந்து நூற்றாண்டுகள் இடைவெளி. ஓர் ஆன்மா தன் ஓட்டத்தை முடித்துக்கொண்டு விடுதலையாகும் வரை அந்த முகச்சாயலுடன் தொடர்கிறது என்பது என்னுடைய புரிதல். இக்கருத்தை நிராகரிப்போரும் உண்டு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக