நான் சொல்லப்போவது ஓர் உண்மைச் சம்பவம்.
1968. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் என் நண்பனின் அப்பா திரு.ராமன் மும்பையில் வேலையில் இருந்தார். தன்னுடைய சென்னை அலுவலக சகாவின் பிள்ளைக்கு மும்பையில் அணுசக்தி நிலையத்தில் பொறியியலாளர் பணிக்கான நேர்காணலுக்கு அழைப்பு வந்திருந்தது. அங்கு அந்தப் பிள்ளை வந்ததும் ரயில் நிலையம் சென்று கூட்டிக்கொண்டு போனது முதல் தங்க வைத்து அணுசக்தி நகருக்கு அழைத்துச் சென்று வந்து, வண்டி ஏற்றி சென்னைக்கு அனுப்பியது வரை ஒருநாள் விடுப்பு போட்டுவிட்டு பொறுப்பேற்று உதவினார்.
மும்பையில் வேலை செய்த தன்னுடைய மேலதிகாரியிடம் (தமிழர்) சென்னை கிளையில் உள்ள நண்பரின் மகன் இண்டர்வியுவுக்கு வந்தது பற்றியும் தான் விடுப்பு போட்டுவிட்டு போனதன் காரணத்தைச் சொல்லியுள்ளார். இரண்டு மாதங்கள் கழித்து அந்தப் பிள்ளை தேர்வில் செலெக்ட் ஆகி வேலையும் மும்பையில் கிடைத்தது. பிற்பாடு நண்பரின் அப்பா ஓராண்டில் கொல்கத்தாவுக்கு மாற்றலாகிப் போனார். காலங்கள் ஓடியது.
1989. என் நண்பரின் மூத்த அண்ணன் முதுகலை ரசாயனம் முடித்த வருடம். அவருடைய அப்பா அவருக்குத் தீவிரமாக நல்ல வேலைக்குப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மும்பையில் வேலை செய்த அந்தப் பிள்ளை சென்னையில் நண்பருடைய அப்பாவை எதேச்சையாக சந்தித்தார். அப்போது என் நண்பரின் அப்பா தன்னுடைய மகனுக்கு வேலை சிபாரிசு செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவர், 'அப்படியா? அப்போ இதுக்கு முன்னாடி நீங்க உங்க பையனுக்கு வேலை கேட்டீங்களே அது மூத்த மகனா?' என்றுள்ளார்.
'இல்லையே பா... இவன்தான் என் மூத்தமகன்' என்றார்.
'ஒ.. அப்போ 7 வருஷத்துக்கு முன்னாடி கண்ணாடி போட்டுகிட்டு ஒருத்தர் என்னிடம் வந்து "நான்தான் இராமன், அடையாளம் தெரியுதா? உன்னை மும்பயில இண்டர்வியுவுக்கு கூட்டிகிட்டு போனபோது பார்த்தது.." என்றாரே.
"அது நான் இல்லையே... இத்தனை வருஷம் கழித்து இப்போதான் உங்களை பாக்குறேன் தம்பி" என்று இவர் சொன்னார்.
"உங்களோடு வேலை செய்தவங்க யாருடைய மகனாவது Atomic Power ல வேலை செய்யறாங்களா?" என்று கேட்டுள்ளார்.
சற்று யோசித்துவிட்டு, "ஆமா.. மும்பையில என்னுடைய மேலதிகாரியோட பையன் ஒருத்தன் அங்க அணுசக்தில வேலையில இருக்கான்" என்றார்.
"ஐயோ.. ஏமாந்துட்டேன் சார்... அப்போ அந்த ஆள்தான் என்கிட்டே 'நான்தான் ராமன்னு' பொய் சொல்லி என்னை சிபாரிசு பண்ணச் சொன்னார். நானும் நன்றிக்கடனுக்கு செய்தேன். உங்களைப் பார்த்து 30 வருசம் ஆச்சில்ல உங்க முகம் சரியா நியாபகம் இருக்கலை.. மோசம் போயிட்டேனே" என்று மனம் வருந்தினார்.
"பரவாயில்ல விடுப்பா.. யாருக்கு என்ன வரணும்னு இருக்கோ அதுதான் அமையும். It's okay" என்று என் நண்பரின் அப்பா சொன்னார்.
2018 ஆண்டு இறுதியில் விழுப்புரம் அருகே ஒரு விபத்து. "ஓட்டுனர் உள்பட காரில் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் சம்பவ இடத்திலேயே பலி" என்று பத்திரிக்கையில் செய்தி வந்தது.
தன் பெயர் ராமன் என்று எந்த மேலதிகாரி பொய் சொல்லி தன் மகனுக்கு வேலை வாங்கினாரோ, அந்த மகன்தான் விபத்தில் மாண்டார். தந்தை செய்த பாவம், மகனையும் மருமகளையும், பேத்தியையும் சுவடின்றி துடைத்து அழித்தது. பொய் சொல்லி வாங்கிய அரசு வேலையில் வாழ்ந்தும் வளர்ந்தும் என்ன பயன்? இறந்தவரின் Benefits எல்லாம் claim செய்ய குடும்பத்தில் Nominee, Successor இல்லாமல் ஈட்டிய பாவத் தொகை பல லட்சங்கள் ரொக்கமாக பாவம் செய்த 94 வயது தந்தையிடமே வந்து சேர்ந்து விட்டது. தன் மகனுடைய குடும்பம் கூண்டோடு அழிந்ததற்கு அழுவாரா, கையில் சுளையாக அரை கோடி வந்தததற்கு சந்தோஷப்படுவாரா?
இதை என் நண்பர்தான் அண்மையில் சொன்னார். மக்களே! நீங்கள் நேர்மையாக முடிந்தவரை இருக்க முயலுங்கள். இக்காலத்தில் இதுபோன்ற பொய்கள் சொல்வது சாதாரணம். இது ஒரு பாவமா இதற்கு மரண தண்டனையா? என்று நீங்கள் நினைக்கலாம். தண்டனை என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். ஈசன் நம் ஒவ்வொருவரின் அறக் கணக்கையும் வைத்துள்ளான்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக