பாதாள உலகம் எப்படி இருந்தது என்பதைப்பற்றி பழைய பதிவு ஒன்றில் போட்டிருந்தேன். மண் மரம் செடி கொடி கடல்போன்ற ஏறி, சுறா மீன்கள், என பலவற்றை நான் அங்கு கனவில் கண்டதையும் அங்கு நிலவிய சூழலைப்பற்றியும் சொல்லியிருந்தேன். அது நாகலோகம் என்றும் அழைக்கப்படுகிறது.
அங்கே அது ஏழு உலகங்களாகப் பிரிக்கப்படுகிறது. அங்கு நாகரிஷிகள் ஆட்சி செய்கிறார்கள். அதல விதல நிதல தலாதல மகாதல ரசாதல பாதாள என்பனவாகும். வாசுகி தலைமை வகிக்க அங்கே எப்போதும் வேத மந்திரங்கள் முழங்கிக்கொண்டே இருக்குமாம். ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷன் கூட இந்த லோகத்து ஜீவராசிதான். அப்படி என்றால் புராணம்படி இந்த பாதாள உலகிற்கு யாரேனும் போய் வந்தனரா? ஆம். இராமபிரானின் மோதிரத்தைக் கண்டெடுக்க ஹனுமான் இந்த நாகலோகத்திற்கு வந்தபோதுதான் இதற்குமுன் பல யுகங்களில் பல இராமர்கள் அவதரித்த விஷயமே அனுமனுக்கு வாசுகி மூலம் தெரிய வந்தது. அந்த நாகலோலகம் அசாத்தியமானது. சொர்க்கத்திற்கு நிகராக எல்லா கட்டுமானங்கள் கொண்ட நகரங்களும் உண்டு என்று சிவபுராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், வாயு புராணம் என எல்லாமே விவரிக்கின்றது.
அந்த நாகரிஷிகள் எப்படியான சக்தியைப் பெற்றவர்கள்? அவர்கள் தாம் நினைத்த மாத்திரத்தில் எந்த ரூபத்தையும் எடுக்கவல்ல ரிஷிகள். பாதாள லோகத்திற்கும் கீழாக உள்ளதுதான் நரகம். அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உள்ளது என்பதற்கு இணங்க அதே உலகங்கள் நம் உடலில் சக்கரங்களாக உள்ளன. மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை ஏழு, மூலாதாரத்திற்குக் கீழேயுள்ள அதல முதல் பாதாளம் வரை ஏழு. ஆக ஈரேழு பதினாலு உலகங்கள்.
மூலாதாரம் மண். அதனடியில் பாதாள உலகங்கள் தொடங்கும். அதனால்தான் குண்டலினி என்ற பாம்பு மூலத்தில் தலையை கீழுலகம் நோக்கிப் பார்க்கச் சுருண்டு படுத்துக் கிடக்கும். ஆறாதார சக்கரங்களான மூலாதாரம் முதல் சகஸ்ராரம் வரை யோக சாதனைக்குப் பயனுள்ளது. மற்றவை கணக்கில் கொள்வதில்லை. மலம் /சிறுநீர் கழித்துவிட்டு வந்தால் உங்கள் தொடை கெண்டைக்கால் வெலவெலத்து பலவீனமாகத் தெரிவது ஏன்? மலம் நிறைந்த மூலம் காலியானதும் அங்கே கனமில்லாமல் போகும்போது சக்தியோட்டம் தெளிவாகும்போது இந்த பலவீனம் தெரியும். அது அதல-பாதாளம் வரை பத்து நிமிடங்களுக்குச் சோர்வைக் காட்டும். ‘மலம் போனால் பலம் போகும்’ என்பது பழமொழி. ஆனால் அதுதான் ஆதாரமாக உடலுக்கு வலு தந்து தாங்கிப் பிடிக்கும்.
யோக நிலையிலும், உண்மையாக பூகோள நிலையிலும் இந்த உலகங்கள் இருக்கின்றன. அங்கே ஸ்தூல உடலுடன் சென்றாலும் சூட்சும ரூபத்தில் இருக்கும் பல விஷயங்கள் நம் கண்களுக்குத் தெரியாது.
அந்த நாகலோக ரிஷிகளில் பலர் ஈசனின் கட்டளைகள் ஏற்று பூமிக்கு வந்து அவதாரங்கள் எடுத்துவிட்டு மீண்டும் நாகலோகம் சென்றடைந்து பணிகளை மேற்கொள்வார்கள். அப்படியான வேதம் ஓதும் நாகரிஷிகளில் சிலர் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர், வடலூர் இராமலிங்க அடிகள், சந்த் ஞானேஸ்வர் என்று சொல்லிக்கொண்டே போகலாம். இவர்கள் நினைத்த மாத்திரத்தில் இன்றும் அரூபமாக தினமும் தாங்கள் ஸ்தாபித்த கோயில்களில் உலாவந்து ஈசனை பூசித்துச் செல்வது வழக்கம். அத்தி வரதர் எழுந்தருளியபோது பாதாள லோகம் பற்றி மேலோட்டமாகச் சொன்னேன்.
அதுபோல் சித்தர் பாடல்களில் மேரு மலையில் ஏறிப்போய் பல அதிசயங்களைக் கண்டதை போகர் உரைத்தார். ‘உண்மையில் அதெல்லாம் இல்லை. யோக மார்க்கத்தில் சஞ்சரித்து முதுகுத்தண்டு வழியே நிலைகளில் உயரந்து கடைசியில் மேரு/பொதிகை/கயிலாயம் என்ற சகஸ்ரார சக்கரத்தில் குண்டலியை நிலைக்கச் செய்து சச்சிதானந்த நிலையை அடைவதைத்தான் குறிக்கின்றார். வேறொன்றுமில்லை!’ என்று சிலர் கூறுகின்றனர். இது யோக மார்க்கத்தில் சரி. ஆனால் உண்மையில் ககன குளிகையை அடக்கிக் கொண்டு அங்கே ஸ்தூல தேகத்துடன் பறந்துபோன போகரை என்ன சொல்வார்களோ?
“பாலகா! நீர் யார்? ஏன் இங்கு வந்தீர்? ஸ்தூல தேகத்துடன் மேருவில் யாரும் பிரவேசிக்க விதியில்லை. சித்தர்முனி கூட்டத்தினரின் சாபம் கிட்டும்” என்று சொன்னபோது. “நான் திருமூலரின் மரபில் வந்த காலங்கிநாதரின் சீடன் போகர். நீங்கள் எனக்கு அருள் புரியுங்கள். மேருவின் ரகசியங்களை அறியச் செய்யுங்கள்” என்று கேட்டுக் கொள்கிறார். “அய்யன் காலாங்கியின் சீடரா? வருக!” என்று சொல்லி வேண்டிய ரகசியங்களையும் சமாதியிலுள்ள நூல்களையும் காட்டுகின்றார்கள். சித்தர் அவருடைய தேகத்திலுள்ள ஆறாதார சக்தி சக்கரங்களில் ஏறி தெய்வத்தைக் காண ககன குளிகை எதற்குக் கொள்ளவேண்டும்? சுவரூப, சந்தான, மாலினி, கமலினி, போன்ற மற்ற ரசமணி குளிகைகள் போதுமே! ஆகாய மார்க்கமாகப் பறக்க உதவுவது ககன குளிகை. அப்படித்தான் சப்த சாகரங்களைச் சுற்றி வந்தார்.
ஆகவே, அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் உண்டு. அந்த இரண்டையுமே சித்தர்கள் அடைந்து சாதித்தார்கள் என்று சொல்லவே இந்தப் பதிவு. நம் யோக நிலைகள் வழியே உயர்ந்து சொர்க்கத்தை அடைவதும் நரகத்தை அடைவதும் அவரவர் செயல்களையும் ஆன்ம பலத்தையும் ஜெபத்தையும் பொறுத்தது என்பதை வருகின்ற வைகுண்ட ஏகாதசியில் ஆடும் பரமபதம் விளக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக