திங்குஜம் ஷுப்குமார் மெய்தி சிங். மணிப்பூரிலிந்து கல்வி கற்க வந்தவன். என்னுடன் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பில் ஒன்றாகப் படித்தவன். முன் வரிசை இருக்கையில் அமர்பவன். உயரம் நான்கரை அடி. அவன் விழித்துக்கொண்டு இருக்கிறானா, தூங்குகிறானா என்று தெரியாதபடி ஒரு கோடு கிழித்ததுபோன்ற கண்கள். டீஷர்ட் மற்றும் ஜீன்ஸ் அணிந்து, முதுகில் ஒரு பையை மாட்டிக்கொண்டு பொறுமையாய் வருவான். நல்ல பலசாலி. யார் வம்புக்கும் போகாதவன்.
அவன் வாய் திறந்து அதிகம் பேசமாட்டான். கொஞ்சம் ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். தமிழ் தெரியாததால் அவனுக்கு முக்கியமான சில ‘நல்ல’ வார்த்தைகளை எடுத்த எடுப்பிலேயே சக மாணவர்கள் சொல்லிக் கொடுத்து விட்டனர். அவை ஏதோ விவகாரமான சொற்கள் என்பதை யூகித்து ‘ந.. ந’ என்று கை அசைத்து மறுப்பான். வகுப்பில் நடத்தப்பட்ட பாடத்தில் ஆசிரியர் கேட்ட எந்த கேள்விக்கும் அவன் ஒருமுறைகூட விடை சொல்லி நான் பார்த்ததில்லை. ஆசிரியர்கள் அவனுடன் மல்லுக்கு நின்று போதிக்கப் போராடுவார்கள்.
ஏதேனும் பேசினால் அவன் அரைகுறை ஆங்கிலத்தில் பேசுவான். அவனுக்கு அப்போதே பால்ய விவாகம் நடந்ததுவிட்டது என்று ஒருமுறை சொன்னது எல்லோருக்கும் வியப்பாய் இருந்தது. ‘உன் பெண்டாட்டி என்ன படிக்கிறாள்?’ என்று கேட்டால், ‘தெரியாது. அஞ்சாவதுனு நினைக்கிறன். பெண்களுக்கு எங்கள் ஊரில் படிப்பு தேவையில்லையாம்’ என்று சொல்வான்.
அவன் ஒரு சமயம் அருணாச்சலம் என்ற இன்னொரு மாணவனைக் கராத்தேயில் புரட்டிப்போட்டு எட்டி உதைத்தான். இடைமறித்து ‘டேய் திங்கு... why டா?’ என்று நான் கேட்க, அதற்கு அவன், ‘he talk bad about me’ என்று சொல்லியபடி அவனைக் கன்னத்தில் பளார் என்று அறைந்தான்.
அடி வாங்கியவன் மௌனமாய் அமர்ந்து கொண்டான். ‘அடிக்கிற அளவுக்கு அவனை நீ என்னடா இங்க்லீஷ்ல சொன்னே?' என்று கேட்டேன். ‘உங்க ஊர்ல படிக்க வழியில்லாம இங்க வந்து படிக்கிற பரதேசி நாயினு கிண்டலுக்கு சொன்னேன்டா, அதுக்கு போய் ...’ என்று அழுது கொண்டிருந்தான். ‘நல்லா வாங்கிக் கட்டிக்கோ. அவன் பறந்து பறந்து அடிக்கிறான். தாங்குவியா? உனக்கு என்ன போச்சு .. நீயா அவனுக்கு பீஸ் கட்டி சோறு போடுற?’ என்று அதட்டினேன். என் உடல் மொழியிலும் கண் அசைவிலும் அருணாச்சலத்தைக் கோபமாகத் திட்டுவதை ஓரளவுக்குப் புரிந்துகொண்ட திங்கு உடனே வந்து என் கரத்தைப் பற்றி முத்தம் தந்து தன் நெற்றியில் ஒற்றிக் கொண்டான்.
படிக்கவோ பிழைக்கவோ ஒருவன் தன் சொந்த மாநிலத்தைவிட்டு வெளியேறி தென்னகம் வந்தாலும் தன்மானம் முக்கியம் என்பதை அன்று அவன் உணர வைத்தான். மனிதம் முதன்மையானது. மொழி என்பது இரண்டாம் பட்சம். சுயமரியாதை என்பது நம்மூரில் கருஞ்சட்டை கழகத்தார்க்கு மட்டுமே சொந்தம் என்று இதுகாறும் தோற்றுவித்துள்ளனர். ஹோட்டலில் வடகிழக்கு மாநில பணியாளர்களைக் காணும்போது திங்கு நினைவுக்கு வருவான்.
பள்ளி இறுதித் தேர்வுக்கு முன் அவன் ஊருக்குப் போனான். அதன்பின் அவனைப் பார்க்கவில்லை. ‘சந்து, நீ எங்க ஊருக்கு வா. சுத்தி காட்டுறேன்! என்றான். திங்குஜம் ஷுப்குமார், லமைந்தாங், 5 காச்சிங் பஸார், இம்பால்’ என்ற தன் விலாசத்தைத் தந்துவிட்டுப் போனான். நம் வாழ்வில் ரயில் சிநேகம் போல் வருவோர்கூட தாக்கத்தை ஏற்படுத்துவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக