தீபாவளி என்றால் நம் எல்லோர் இல்லங்களில் இனிப்பு/காரம் பிரிவுகளில் குறைந்தது மூன்று வகைகளைச் செய்வது வழக்கம். அதுவும் பாரம்பரியமாகவே இருந்து வருவது மரபு. ஆனால் காலம் போகிற போக்கில் இப்போதெல்லாம் வருடத்திற்கு ஒருமுறை வரும் தீபாவளிப் பண்டிகைக்கு மெனக்கெட சிரத்தையுடன் செய்வது என்பது இரண்டாம் பட்சமாகவே பல வீடுகளில் நினைக்கின்றனர்.
இன்று அண்டை வீடுகளிலிருந்து இனிப்பும் காரமும் வந்தன. புதிதாக இப்போதுதான் பலகாரம் செய்யக் கற்றுக்கொள்பவரின் கைவண்ணத்தில் இருந்தன. நீர்த்துப்போன பூரணத்தின் காரணத்தால் சுகியனை எடுக்கும்போதே பிய்த்துக்கொண்டு அறுந்து விழுந்தது. ஜாமூன் ருசியற்றதாய் அதிகமான நீரில் சர்க்கரை இல்லாமல் மிதந்து கொண்டிருந்தன. பிஸ்கட் போல் தூள்தூளாக உடைந்துபோன அதிரசத்தை அழகாக ஜோடனை செய்து தட்டில் வைத்திருந்தனர். உருட்டுப் பதத்தைத் தவறவிட்டு முதிர் பாகில் கிண்டிய கோளாறு! கேழ்வரகு அரிசி கலந்த முறுக்கு என்று எதோவொன்று இருந்தது. சற்றும் மணமில்லாமல் கடகடவென பல்லை உடைக்கும் பாவனையில் கசந்தது. சோதனையில் ஓரீடு சரியாக வரவில்லை என்றால் அதை வீணாக்காமல் அதில் எதைச் சேர்த்தால் வேறென்ன ருசியான பதார்த்தம் செய்யலாம் என்ற சமயோசிதம் இருப்பதில்லை.
அண்டை வீடுகளில் கொடுப்பதை வாங்காமல் பெரும்பாலும் தவிர்த்து விடுவோம். அதையும் மீறி அன்புடன் கொடுப்பதை நிராகரித்தால் தவறாக நினைத்துக் கொள்வார்கள். வாங்காமல் போனாலும் சங்கடம், வாங்கி உண்டாலோ அதைவிட வயிற்றுக்குச் சங்கடம். சிறுதானியப் பலகாரங்கள் என்ற பெயரில் இவர்கள் தானிய பண்டங்களை வீணடிப்பது வீட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல. ஆர்வம் இருந்தால் நிச்சயம் வீணடிக்க மாட்டார்கள். ஆனால் பலகாரம் செய்வதில் குறைந்து வரும் ஈடுபாடும், பாரம்பரியத்தை விட்டு வெகு தூரம் போய்விட்ட போக்கும், அந்தோ பரிதாபம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக