கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு உபதேசம் செய்யும்போது, ‘இந்தப் பால்வெளியில் தசலட்ச சங்கம் விண்மீன்கள் உள்ளன. இப்பிரபஞ்சம் போலவே இன்னும் பல பிரபஞ்சங்கள் வெவ்வேறு அளவில் உள்ளன. அதெல்லாம் உன் கண்ணுக்குத் தெரியவில்லை என்பதால் அப்படி ஒன்று இல்லை என்று சொல்லிட முடியுமா?’ உன்னால் நேரடியாக அதைப் பார்க்க இயலாது. அர்ஜுனா, இதோ என்னுள் அதைக் காட்டுகிறேன், பார்! அண்டத்தில் இருப்பது உன் பார்வைக்கு இல்லாததுபோல் தோன்றுவது மாயை.” (பகவத்கீதை: 8:18)
அப்படி உள்ளது மனோன்மணீயம் நூலுக்குப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்கள் இயற்றிய தமிழ்த்தெய்வ வணக்கம் பாடல். நாம் இதுகாறும் படிக்க மறந்துபோன இரண்டாம் பத்தி உள்ளது. அதில் ‘ஆரியம் போல் உலக வழக்கழிந்து ஒழிந்து’ என்ற அடி உள்ளது. சிவனின் வாசியாக மறைந்து இருக்கும் மொழி எப்படி அழிந்து ஒழிந்து போகும்? உங்களையும் என்னையும் நம்பியா சிவனுடைய ரவிகலை வாசியின் ஆதாரப் பண்புகள் உள்ளன? எழுதா கிளவியாய் அது என்றைக்கும் யுகயுகங்களாக மறைந்திருப்பது.
சுயம்புவாய்த் தோன்றி இதுகாறும் மறைந்திருக்கும் சூட்சுமம் உடையது. அது சமயம் வரும்போது தன்னைத் தானே வெளிக்காட்டிக்கொள்ளும். அதுவரை அதன் வெளிப்பாடாய்ச் சக்தி மட்டும் வெளியே தோன்றி அசைந்து இயங்கும். ஒரு தாவரத்தின் ஆதார வேர் புலப்படாமல் பூமிக்குள் ஆழமாய் எப்படி மறைந்திருக்குமோ அப்படித்தான் மறையன் உள்ளான். சிவனுடைய அரூப மந்திரமொழி பேச்சு மொழியாக இல்லாத காரணத்தால் சிவன் எப்படி அழிந்து ஒழிந்து போவான்? ஆகமங்களைச் சிவன் ஆரியத்திலும் தமிழிலும் சக்திக்கு உபதேசித்தான் என்கிறார் திருமூலர். சிவனின் இடகலை வாசியே சக்தியும் தமிழும்!
அக்காலத்தில் சுந்தரனாரின் பாடலில் இந்தச் சொல்லாடலை யாரும் தர்க்கம் செய்யாமல் ஏற்றுக்கொண்டு விட்டதால், இன்று அம்மொழியை/அவனை இறந்துபோன, வழக்கழிந்த, ஒழிந்த என்று மனம் குளிரப் பேசுகின்றனர். நூலின் முதல்பக்க வாழ்த்துப் பாவிலேயே சிவன் அழிந்து ஒழிந்தான் என்பது அபசகுனம். சிவனில்லாமல் சக்தி ஏது? சிவன் அழிந்தால் சக்தியும் அழிந்து போகும்! பிறகு தமிழ் ஏது? தமிழ் மீது பற்று இருக்கிறது என்பதைக் காட்ட இப்படியா பேராசிரியர் அமங்கலமாய்ப் பேசுவது?
-எஸ்.சந்திரசேகர்