பழைய பதிவு ஒன்றில் ஒருங்கிணைந்த மும்மூர்த்திகளின் உருவமான ஸ்ரீதத்தாத்ரேயரைப் பற்றி நாம் பார்த்தோம். யார் எல்லாம் இவருடைய அவதாரங்களாக வந்து போனார்கள் என்று உங்கள் மனத்தில் கேள்வி எழும்.
கடந்த யுகங்களில் பலவுண்டு என்றாலும் இந்தக் கலியுகத்தில் இதுவரை ஐந்து அவதாரங்கள் நடந்துள்ளன. முதல் இரண்டு அவதாரங்கள் தென்னகத்திலும் மற்றயவை மராட்டியத்திலும் நிகழ்ந்தன. இவர்களுடைய பின்னணியைப் பார்த்தால் அத்திரி-அனுசுயை ரிஷி தம்பதி வளர்த்து ஆளாக்கும் முதல் நிலைப் பருவமாகவே இருக்கும். ஸ்ரீபாதவல்லபர், ஸ்ரீநரசிம்ம சரஸ்வதி, ஸ்ரீமாணிக்க பிரபு மகாராஜ், அகல்கோட் ஸ்ரீ சுவாமி சமர்தர், ஷிர்டி ஸ்ரீசாயிநாதர் என அவ்வரிசை வரும். தாணுமாலயனாக தத்தர் வாசம் செய்யும் தலங்கள் என்றால் அது சதுரகிரி, சபரிகிரி, சஹாயாத்ரி, நீலாஞ்சனகிரி, ஸ்ரீசைலம்.
இவர்கள் சராசரி மனித உருவில் வாழ்ந்து சித்துகள் நிகழ்த்தி மகாசித்தி அடைந்தவர்கள். சரி, இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? இவர்கள் சித்தியாகும் முன்பாக அடுத்து வரவுள்ள தன் அவதாரத்துடன் உரையாடி, தொடர வேண்டிய பணிகளைக் குறித்துப் பேசிப் பரிமாறும் தருணங்கள் நடந்தன. இதுதான் நமக்கு ஆச்சரியம்! இன்னும் ஜனனம் எடுக்கவேயில்லை என்கிறபோது அடுத்த நூற்றாண்டில் வரவுள்ள ஒரு அவதாரம் முன்பாகவே முதல் அவதாரத்துடன் பேசுவதா? விந்தை! இதை எல்லாம் அவர்களே சொல்லி வெளிப்படுத்தாதவரை நாம் அறிய வாய்ப்பில்லை. சிதம்பரம் ஸ்ரீ பழனிச்சாமி சித்தர், திருவண்ணாமலை ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள், காஞ்சி பரமாச்சாரியார், போன்ற உச்ச நிலை தபஸ்வி ஞானதிருஷ்டியில் அவதார புருஷர்களின் சந்திப்புக் காட்சிகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஆனால் ஷிர்டி மகான் மீது மட்டும் ஏன் இந்த துவேஷம்? முஸ்லிம் என்பதும் அவரைப் பற்றிய தவறான பரப்புரையுமே காரணம். தெருவோரம் பிக்ஷம் எடுத்துக்கொண்டு இருந்த ஒரு சாதாரண முஸ்லிம் ஃபக்கிரான இவரை முஸ்லிம்களே தங்கள் மதத்தின் துறவியாக ஏற்காதபோது, நாம் மட்டும் ஏன் ஏற்க வேண்டும்? அங்கே சாயி மந்திர் கோயிலில் ஆகம முறைப்படி நடக்கும் அனுஷ்டானங்களை எதிர்ப்பது ஏன்? அவர் அவதாரப் பிறவி என்பதை ஏற்க முடியாததால்! அத்திரி-அனுசுயா ரிஷி தம்பதி கங்காபாவ்-தேவகி என்ற கதாபத்திரமாக வந்து தம் ஐந்து வயது சிறுவனை ஒரு முஸ்லிம் துறவியிடம் விட்டுவிட்டுப் போகிறார்கள். பரத்வாஜ கோத்திர பிராமண சிறுவன் பிற்பாடு சுஃபி துறவியாக மாறியதை அவர் சத்சரிதங்கள் சொல்லும். அது ஏன் முஸ்லிமாக வரவேண்டும்? விடை இல்லை!
‘ஆதியில் நந்தியாகி தவம் செய்து அயன்மால் இந்திரனாகி சுப்ரமணிய ரூபமாகி ராமனாய் கிருஷ்ண வடிவாய் நபி ரூபமாகி போகராக நிலைத்திட்டேன்’ என்று போகர் தன் ஜெனன சாகரத்தில் சொன்னதுபோல்தான் இதுவும் உள்ளது. கலிகால நிலைக்கு ஏற்ப வேற்று மதங்களிலும் அவதாரங்கள் நடக்கும். ஏன் எதற்கு? அது சிவ ரகசியம்! போகரே வெளிப்படுத்தாத தன்னுடைய ஏனைய அவதாரங்களை அவர் ஆசிகளுடன் நாம் சுயமாய்க் கண்டுகொள்ளலாம்.
சாஹிபு உருவத்தில் தத்த அவதாரம் ஏன் வர வேண்டும்? நபியாக போகர் ஏன் வர வேண்டும்? பழனியில் சமாதியில் வைத்தபின் அங்கிருந்து மறைந்து சீனம் போய் மன்னனாக ஏன் ஜெனிக்க வேண்டும்? இதற்கான விடையை அவரிடம்தான் கேட்க வேண்டும். நமக்கே எல்லாம் தெரியும், சூட்சுமத்தை எல்லாம் கரைத்துக் குடித்தாகி விட்டது என்ற போக்கில் அதை நிந்தித்து விமர்சிப்பது அறியாமை. ஆகாம்ய பாவத்தை ஈட்டும்! ஷிர்டி சாயிநாதரை இகழும் அதே வாய் நபியாக வந்த போகரையும்தான் இகழும். இக்காலத்தில் மகான்கள்/ சித்தர்கள்/ கடவுளர் உருவம் பொறித்து வியாபார நோக்கில் பலதும் நடக்கும். அதற்கு நாம் பொறுப்பல்ல!
அகத்தியர், போகர், கான்னட் ரிஷியே ஐரோப்பாவில் ஒரு வோல்டா, எடிசன், நியூடன், கெப்ளர், கில்பர்ட், டாலமி, கோபர்நிகஸ், என விஞ்ஞானிகளாக வந்து போயிருந்தால்தான் நமக்கு என்ன தெரியும்? அகத்தியர் மரபில் வந்த சீடர்கள் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் செய்த கண்டுபிடிப்புகள் சிலவற்றை மேல் நாட்டில் யாரேனும் செய்தால், ‘பார்த்தியா, இங்கிருந்து சித்த நூலேடுகளைத் திருடிக்கிட்டுபோய் அவங்க கண்டு பிடிச்ச மாதிரி காட்டிடாங்க.. திருட்டுப் பசங்க!’ என்று விமர்சனங்கள் எழும்போது சிரிப்பு வரும். ஏற்கெனவே இது ரிஷிகளின் நூலில் உள்ளவையே என்பதை அறிந்ததும் கோபப்படுகின்றனர். அந்த மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்ததை அதே காலத்தில் இங்கே ஏன் யாரும் செய்து பரப்பவில்லை?
நம் மகான்களின் அவதாரங்களும் சாநித்யமும் முடிவில்லாதாது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு மகானாகப் பிறந்து மக்களைக் காத்து நல்வழிப்படுத்தும். சிறப்புப் பணிக்காக இவர்கள் பணிக்கபடுகிறார்கள். கிபி 13ஆம் நூற்றாண்டு முதலே ஸ்ரீ பழனிச்சாமி சித்தர் எங்கோ வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவ்வப்போது இன்னொரு தேகம் எடுத்துத் தங்குகிறார் என்பது அவருடைய மெய்யுரை.
-எஸ்.சந்திரசேகர்