"கொளநல்லி வழியாக இன்று கொடுமுடி வந்தேன். காவிரிக்கரையில் அமைந்த ஸ்ரீ மகுடேஸ்வரர் மற்றும் வீரநாராயணப் பெருமாள் கோயில் பாழடைந்து உள்ளது. அதைப் புதுப்பிக்கும் பொருட்டு உள்ளூர் செட்டி வியாபாரிகள் நிதி திரட்டுகிறார்கள். இன்று சிவனுக்கான விசேஷ நாளாம், மக்கள் கூட்டம் அலைமோதியது. சமயப்பணிக்கென இவ்வூரில் பதினொரு பிராமண குடும்பங்கள் உள்ளன. இத்தலம் புராதன வரலாறு உடையது என்பதை அறிந்தேன்" என்று ஆங்கிலேய சர்வேயர் புக்கானன் செப்டம்பர் 5, 1892 தேதியிட்ட தன்னுடைய பயணக்கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.
எங்கள் ஊரின் இக்கோயிலில் அன்று போதுமான அளவில் பணியாளர்கள் வேலை செய்துள்ளனர் என்ற விபரம் அண்மையில் பார்த்த ஒரு பழைய ஆவணத்தில் இருந்தது.
ஸ்தானீகம், பரீச்சாரகம், சுயம்பாகம், அர்ச்சகம், வேதபாராயணம், பஞ்சாங்கம், யக்ஞோபவம், மணியம், சங்கீதம், மெய்க்காவல், மாலைகட்டி, நாதசுரம் முகவீணை, ஒத்துவூதல், தவுல், டவண்டை, கைத்தாளம், திருச்சின்னம், மத்தளம், நட்டுவம், தித்தி, தாசி, மாராயம், திருவலகு.
சுமார் எண்பது ஆண்டுகளுக்குமுன் எங்கள் ஊர் சிவாலயத்தில் இருந்துள்ள பணி இடங்களின் பெயர்கள்தான் இவை. 1943 ஜூன் மாதம் கோயில் ஆவண ஊதியப் பட்டியலில் ஏழு தாசிகள் பணியில் இருந்துள்ளனர். அன்று மாத ஊதியமாக தாசிகள் ரூ 4 அணா 8, இசைக் கலைஞர்கள் அதிகபட்சமாய் ரூ 8 அணா 4 வரை பெற்றனர்.
இன்று தாசிகள் இல்லை. ஆனால் மாராய திருவலகு, கூட்டி, எள்ளுக்கிழிகட்டு தீபம் விற்பனை, ஆகிய பணிகளுக்கு Scale of pay range 10000 -31500 plus allowances as per TNHRCE rules என்று உள்ளது. சுயம்பாகம், சைவ/வைணவ முறையில் சமையல்/பிரசாதம் தயாரிக்க மடைப்பள்ளி உதவியாளர் (மடையர்) ஊதிய நிலை 7100-13200 மற்றும் இதர படிகள் என்ற அளவில் உள்ளது.
சம்பளப் பட்டியலில் அன்று இடம்பெற்ற தாசிகளான அங்கமுத்து, சவுந்திரம், வெங்கலெட்சுமி, ஆகியோர் சம்பள ரெஜிஸ்தரில் தங்கள் கையொப்பத்தை இட்டுள்ளனர். இவர்கள் குறைந்தபட்ச கல்வி அறிவைப் பெற்றிருந்தனர் என்பது ஆச்சரியத்தைத் தந்தது.
சிவன் கோயிலில் உழவாரப்பணி செய்ய இன்று நல்ல ஊதியம் கிடைக்கிறது. நாமும் சிவனே என அப்பணிக்குப் போய்விடலாம். நம் ஜாதகத்தில் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் அதற்கும் சிவசித்தம் அருள் வேண்டுமே! 😀
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக