சித்தர்களின் வெளிப்பாடுகள் மற்றும் அவர்களுடைய ஜெனனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்குள்தான் நடக்கும் என்று பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது அப்படியல்ல! மதத்தை, மொழியை, மாகாணத்தை, தேசத்தைத் தாண்டி அயல்நாடுகளிலும் நடக்கும். சில வருடங்களுக்கு முன் வெளிவந்த என் ‘சித்தநூல் ரகசியங்கள்’ (கற்பகம் புத்தகாலயம்) என்ற புத்தகத்தில் இதுபற்றி நான் சொல்லியிருந்தேன்.
ஃபேரடே, எடிசன், டெஸ்லா, ரூதர்ஃபோர்ட் மற்றும் பல மேலைநாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வழங்கிய தொழில்நுட்ப ரகசியங்களும் கருவிகளும் கடந்த நூற்றாண்டுகளில் பெரிதும் பேசப்பட்டன. ஆனால் இந்த நவீனங்களை எல்லாம் மூத்த சித்தர்கள் கடந்த யுகங்களிலே கண்டுபிடித்துச் செயலாக்கிவிட்டனர் என்பதைப்பற்றி நம் பழைய பதிவுகளில் பார்த்துள்ளோம்.
ஜெர்மானியர்கள் நம் பண்டைய சமக்ஸ்ருத்த ஏடுகளைத் திருடிக்கொண்டு போனார்கள், சீனம்/திபெத் நூலகங்களில் இன்னும் நம் பொக்கிஷ நூல்கள் உள்ளன என்று நிறையவே இங்கு அங்கலாய்த்தனர். திருடிக்கொண்டு போனதால் மேலைநாட்டினர் கண்டுபிடித்தனர் என்றனர். ஆனால் அதே காலகட்டத்தில் அதுகாறும் நம்மிடம் இருந்த நூல்களை வைத்து ஏன் நம்மவர்கள் புதிய ஆக்கங்களைத் தரவில்லை? விஸ்வகர்ம குலத்தினர் தம் குலத்தொழில் முறையில் சிலவற்றைச் சிறப்பாய் வெளிக்கொண்டு வந்தனர். ஆனால் மற்றவர்கள்...? இத்தனைக்கும் வடமொழி கோலோச்சிய காலம் ஆயிற்றே? ஏன் செய்யவில்லை? விடை காணமுடியாத பல கேள்விகள் உண்டு. எல்லாம் சிவசித்தம் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.
அப்படி ஓர் அயல் நாட்டவர்தான் திரு. அலெக்ஸாண்டர் பட்னி. பரவெளி ஆய்வாளர், நூல் ஆசிரியர், சமஸ்க்ருத மொழி ஆர்வலர், பிரபஞ்ச மின்காந்த ஒலி அதிர்வு விஞ்ஞானி, ரசவேதி என இவர் பன்முகங்கள் கொண்டவர். அலெக்ஸிடமிருந்து இன்று ஒரு விரிவான மின்னஞ்சல் எனக்கு வந்தது. இவர் என்னுடைய பழைய ஆங்கில சித்தவியல் கட்டுரைகளையும், பதிப்புகளையும் வாசித்துள்ளார் என்றார். போகருடைய கண்டுபிடுப்புகளை நான் முடிந்தவரையில் திறம்பட வெளிக்காட்டியுள்ளேன் என்று என்னைப் பாராட்டினார். என் 'போகர் ஏழாயிரம்: சப்தகாண்டம் ஒரு பார்வை' நூலை மொழிபெயர்த்துப் படித்துள்ளார். அவர் தன் கடிதத்தில் சொல்லிய சாரம் என்ன?
“நண்பா, சித்தர் போகர் உரைத்த மறைப்பு மிகுந்த கண்டுபிடிப்புகளை என் ஆய்வில் செய்து வெற்றி கண்டுள்ளேன். அவர் உரைத்த ரசவாத வேதியல் ரகசியங்களை உடைத்துப் பிரயோகம் செய்து நூறு சதவிகிதம் வெற்றியும் பெற்றேன். வெவ்வேறு வெப்பங்களில் படிமங்களின் அதிர்வில் வெளிப்படும் துகள்களின் ஆய்வையும், புவியீர்ப்பு காந்தவிசை சார்ந்த ஒலி ஆய்வையும் மேற்கொண்டேன். சில ஆண்டுகளுக்கு முன் பரவெளியில் கேட்கும் "ஓங்கார" நாதம் பற்றி வெளியிட்டதும் நானே.
சித்தரின் பாடல்களில் உறைந்துள்ள மறைப்புகள் அத்தனையும் இரத்தினங்கள் என்பதை உணர்ந்தேன். அவருடைய பாடல்கள் மூலம் நான் செய்த கண்டுபிடிப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள ஆவலாய் உள்ளேன். என் ஆய்வுகளில் அவருடைய மறைப்புகள் எல்லாமே எனக்குப் பரிச்சயமாகி வருவதை சில வருடங்களாகவே உணர்கிறேன். பாடல்களிலுள்ள மறைப்பு விலகிட அந்த விதியாளி நானாகி நானே போகராக மாறி அனைத்தையும் செய்யமுடிகிறது என்பதை நினைத்தால்... நான் போகரின் மறுபிறப்போ என்றும் சிந்திக்க வைக்கிறது. உங்களிடம் மேலும் பல விஷயங்களை விவாதிக்க ஆவலாக உள்ளேன். நன்றி, வாழ்த்துகள் நண்பா!”
இவரைப்பற்றி நான் இன்று அலசி ஆராயும்போதுதான் இவர் எழுதிய கட்டுரைகளையும், புத்தகங்களையும் காண நேர்ந்தது. சிலவற்றைக் கூர்ந்து வாசித்தேன். இவர் BBC வானொலிக்குத் தந்த பேட்டியையும் கேட்டேன்... அசந்து போனேன்! இவருடைய புத்தகத்தைப் படிக்கும்போதுதான் இவருக்கும் நிகோலா டெஸ்லாவுக்கும் நெருங்கிய ஒற்றுமைகள் அவர் சிந்தனை, ஆய்வு, உருவ நிலையில் உள்ளதை அறிந்தேன். போகர் கையாண்ட, மின்காந்தவியல் சூத்திரம் மூலம் செலுத்திய வான்ரதம், பூமியை ஸ்கேன் செய்த படிகமானி கதிர்கள், ஆகாய விமானத்தை இருளாக்கிப் (Stealth) பார்வைக்குப் புலப்படாமல் மறைக்கும் சூத்திரம் என பலதும் நினைவுக்கு வந்தன. பல ரிஷிகள் போதித்த நுட்பங்களை அன்றே போகர் வடிவாக்கினார்.
என் ஆங்கிலக் கட்டுரைகளும் பதிப்புகளும் எங்கோ யாருக்கோ பயன்படுவது மிகுந்த மகிழ்ச்சியும் மன நிறைவையும் தருகிறது. அலெக்ஸ் அளவுக்கு நான் எதையும் முனைப்பு எடுத்துச் செய்யவில்லை என்றாலும், அவர் மூலம் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. எல்லாம் சிவசித்தம்!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக