நம் வாசக சகோதரர் இன்று காலை 8 மணி அளவில் மூவனூர் நோக்கி முசிறி-துறையூர் பிரதான சாலையில் பேருந்தில் போய்க் கொண்டிருந்தார். கூட்டம் குறைவாக இருந்ததால் இவருக்குப் பக்கத்து இருக்கை காலியாக இருந்துள்ளது.
என்னுடைய காலாங்கிநாதர் ஞானவிந்த ரகசியம் புத்தகத்தைப் படித்துக்கொண்டே வந்தவர் சற்றே கண் அயர்ந்துவிட்டார். மணச்சநல்லூர் நிறுத்தத்தில் ஒரு பத்து வயது சிறுவன் இவர் பக்கத்தில் வந்து உட்காரும்போது இவருக்கு முழிப்பு வந்து பார்த்துள்ளார்.
அந்தச் சிறுவன், "அண்ணா, இங்கே நான் உட்கார்ந்தது இடைஞ்சலாக இருக்கா? வேணும்னா பின்னாடி வேற இடத்துலே போய் உக்காந்துக்கறேன்... நீங்க அந்த புக்கை தொடர்ந்து படிச்சு முடியுங்க" என்று சொல்லியுள்ளான். அதற்கு இவர் "இல்ல தம்பி இங்கேயே உக்காரு" என்றுள்ளார்.
பொடியன் வயதுக்கு மீறிய முதிர்ச்சியான பேச்சு பேசுகிறானே என ஆச்சரியப்பட்டு மேற்கொண்டு புத்தகத்தைத் தொடர்ந்து வாசித்து வந்துள்ளார். எதிர் காற்று அடிக்கவே மீண்டும் தூங்கிவிட்டார். சற்று நேரத்தில் விழித்துக் கொண்டபோது அங்கு அந்தச் சிறுவன் இல்லை. இத்தனை வருடங்களாக அத்தடத்தில் பயணிக்கும் இவர் ஒரு நாள்கூட அந்தப் பையனைப் பார்த்ததில்லை என்கிறார். தன்னை எழுப்பிவிட்டு மேற்கொண்டு அந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்படி சொல்லிவிட்டுப் போய்விட்டான்.
நடந்ததை என்னிடம் சொல்லி, "சார், இது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. அவன் யாராக இருக்கும்?" என்று கேட்டார்.
"நேற்றுதான் போகர் ஜெயந்தி நடந்து முடிந்தது. ஒரு வேளை போகரே தன் குருவின் நூலைத் தொடர்ந்து படிக்கும்படி பாலகன் ரூபத்தில் வந்து சொல்லிவிட்டுப் போயிருக்கலாம். அது நமக்குத் தெரியாது. இதுபோன்ற அமானுஷ்யம் எதுவும் நடக்கும்" என்றேன்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக