நேற்றைய என் கவிப்பாடலுக்குத் தொடர்புடையதே இந்தப்பதிவு.
"வேகாக்கால் பற்றிக் காற்றை அடக்கும் கணக்கை அறிவேனோ ...
பரஞான அருளால் விட்ட குறை தொட்ட குறை முடிப்பேனோ..."
என்று எழுதியிருந்தேன் அல்லவா?
அந்தக் காற்று எது? சதா உள்ளே காற்றை இழுத்து வெளியே விடும் வெந்துபோன மூச்சுதான் அது. சில சித்தர்கள் இதை சாகாக்கால் என்றும் மாற்றிச்சொல்வர். அதைத் தணியவிடாமல் சாகவிடாமல் சுவடே இல்லாமல் எப்படி மூச்சை அளந்து விடுவது? மூச்சை வாங்கி நாசி வழியே சரியாக விடாதது விட்ட குறை. அதைப் பாதியிலேயே திருப்பிச் சுழுமுனையைத் தொட மேல் நோக்கிச் செலுத்துவது தொட்ட குறை. ஆக காற்றை நம் போக்கில்தான் புஸ் புஸ் என்று கண்டபடி விட்டு வீணாக்குகிறோம். அதனால் நம் ஆயுள் குறையும். இப்படி இருந்தால் மரணமில்லா பெருவாழ்வு எப்படி?
இதைப்பற்றிச் சிவவாக்கியர் அழகான விளக்கத்தைக் தருகிறார்.
'வடிவு கண்டு கொண்ட பெண்ணை
வேறொருவன் நத்தினால் விடுவனோ
அவனை முன்னர் வெட்ட வேண்டும் என்பனே
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலைமட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!’
(- சிவவாக்கியம் - 006)
அழகான பெண்ணை விரும்பி மணம் செய்தபின், வேறொருவன் அவள்மீது மோகம் கொண்டு விரும்பி அவள் கணவனை அணுகினால் அவனை வெட்டிப்போட வேண்டும் என்று கோபம் வரும் அல்லவா? அப்படித்தான் அழகான நம் தேகத்தை எமன் கொண்டு போக வந்தால் அவனைக் கோபத்துடன் உதைத்துத் தள்ளாமல் அந்த உடலை மயானம்வரை அனுப்பிச் சுட்டெரிக்கக் கொடுப்பதா? என்கிறார் சிவவாக்கியர்.
மிக அழகான உவமை! ஆனால், எமனைத் தடுப்பது எப்படி என்கிற கேள்வி எழும். இதற்குத் திருமூலர் ‘காற்றைப் பிடித்தால் கூற்றை உதைக்கலாம்!’ என்று விடை சொல்கிறார்.
நம் மூச்சுக்காற்றை எப்படிப் பிடிப்பது? எமனை எப்படி உதைத்துத் தள்ளுவது? நம் பிராணனை முறைப்படுத்தி அதை வீணாக்காமல் அளந்து வாசியைப் பற்றி மிகக்குறைவாக நுகர்ந்தால் எமனை ஏமாற்றிவிடலாம், ஆயுளையும் நீட்டிக்க வைக்கலாம். பூரகம்- கும்பம்- ரேச்சகம் ஆழமாக நீண்டு இருந்தால் சாத்தியம். மரணமில்லாப் பெருவாழ்வு வாழலாம்!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக