தெருவில் எனக்கு முன்னே ஒடிசலான ஒரு முதியவர் ஊதிக்கொண்டு நடந்து போனார். அவருடைய இடது கணுக்காலில் கருப்பு கயிறு, கையில் ஒன்று கட்டியிருந்தார். பிய்ந்து போன ரப்பர் செருப்பு அணிந்து நிதானமாய் நடந்து சென்றார். அவர் இழுத்து விட்ட சிகரெட் புகை மண்டலம் காற்றில் எழும்பி என் முகத்தில் உராய்ந்து சென்றது. மூச்சு முட்டாத குறையாக விரைந்து நடந்து அவருக்கு முன்பாகச் சென்றுவிட்டேன். யாரெனத் திரும்பிப் பார்த்தேன்!
பொக்கை வாய், குழி விழுந்த கன்னம், இடுங்கிய கண்கள், சாம்பல் பூத்த சருமம், வயது பின்னெழுபதுகள் இருக்கும். மோப்ப ஆய்வில் அவர் சரக்கு அடிப்பவர் என்பது தெரிந்தது. உருவத்தைப் பார்த்த உடனே திகைத்தேன்.
நல்லொழுக்கம் பேணிய ஒரு தேகமாகத் தெரியவில்லை. இவருக்கு ஊரார் கண் திருஷ்டி படுவதற்கு அங்கே என்ன மிச்சம் இருக்கிறது? ஏற்கெனவே சீக்கு உடம்பு போல்தான் தெரிந்தது. புகையும் சரக்கும் அள்ளித்தரும் நோய்களே அதிகம். அப்படி இருக்கும்போது அந்தக் கருப்பு கயிறு எதற்கென்றே தெரியவில்லை.
முன்பெல்லாம் மிக அரிதாகத்தான் காலில் கருப்பு கட்டிவிடுவார்கள். ஆனால் இப்போது தெருவில் எதிர்படுவோர் எல்லோர் காலிலும் கயிறு பார்க்கிறேன். அது மந்தரித்ததா ஸ்டைலுக்காகவா என்பது தெரியவில்லை. கருப்புக் கயிறை எல்லா ராசிக்காரர்களும் கட்டக்கூடாது என கேள்விப்பட்டுள்ளேன், மிதுனம் துலாம் கும்பம் நீங்கலாக மற்ற ராசிகளுக்கு அது கெடுபலனைத் தருமாம். திருஷ்டி, காத்து கருப்பு, அடிக்கடி உடல்நலம் பாதிப்பு, போன்றவற்றுக்குத் தற்காலிகமாகக் கயிறு கட்டிவிடுவார்கள். பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு மாதம் வரை கருப்பு வளையல் அணிவித்து திருஷ்டி பொட்டு வைப்பது வழக்கம்.
வேப்பிலை சாமியாடிகள் பெரும்பாலும் சனிக்கிழமைகளில் இதுபோன்ற கயிறு கட்டிவிடுவார்கள். சில உபாசகர்கள் ருத்ர காயத்ரியை ஜெபித்து உருவேற்றிட வேண்டும் என்பார்கள். இக்காலத்தில் அக்கயிறு கட்டியதற்கான காரணமும் தெரியவில்லை, அணிந்தவர் நித்தம் ஜபம் செய்து சக்தியூட்டுகிறார்களா என்பதும் தெரியவில்லை. 🤔
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக