வாலையைப்பற்றியும் அவளைக் கண்டுணர்ந்து தரிசிக்கும் வழியையும், ஆறாதாரசக்கர தளத்தின் குணாம்சங்களையும் “வாலைக்கும்மி” நூலில் கொங்கணர் எளிதாகத் தந்துள்ளார்.
ஆறாதார சக்கரங்கள் வழியாக வாசி ஊர்ந்து சென்று ஆக்ஞா சக்கரத்தில் சுழுமுனையுடன் சங்கமிக்கும் இடமே திரிகூட பர்வதம். அது உண்ணாக்குக்கு மேலாக புரூ மத்தியில் உள்ளது. இடகலை பிங்கலை சுழுமுனையுடன் சங்கமிக்க அங்கே சுயம்பிரகாசம் ஒளிரும். (கபம் சளி இங்கே வாசியின் வழியை அடைத்துக்கொண்டு பிரச்சனை தரும். அதனால் வழலையை அகற்றவேண்டும் என்கிறார் சித்தர்.) எண்கோண வடிவ நட்சத்திரம்போல் ஆடாமல் சுடர்விட்டுச் சுழலும். அங்கே அகத்தீ நிலையாக எறிந்துகொண்டு இருந்தாலும் தலை வெந்துவிடுவதில்லை!
ஹம்-ஸம் ஓடும் ஆறாதாரங்களின் உச்சியில் அங்கே எண்ணெயில்லை, சுடரை அணைக்கத் தண்ணீர் இல்லை. வாசிக்கால் அந்தப்பாதையிலேயே பிசகின்றிப் போய்க்கொண்டிருந்தால் பாதைப் புலப்படும். எங்கே போவதற்கு? குன்றின் மேலே ஏறி ஆகாயக் கடுவெளியில் தீபஜோதியில் வாலைக்குமரியைத் தரிசிக்க!
மேலே ஏறிப்போகும் வழிதோறும் ஒவ்வொரு சக்கர தளத்திலும் தசநாத சப்தங்கள் கேட்கும். மேலே அவளுடைய சான்னித்தியம் வெளிப்பட சிலம்புச்சத்தம் கேட்கும். சிக்கலான பாதையைப்போல் தெரிந்தாலும் அகவிளக்கொளி மார்க்கத்தைக் காட்டும். அங்கே ஓங்காரம் ஒலிக்க வாலையவள் வீற்றிருப்பாள்!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக