என் பதிவினையொட்டி ஒரு நண்பர் சந்தேகம் கேட்டிருக்கிறார்.
“நாம் சிறுவயதிலிருந்தே கஙசஞ உச்சரிக்கும் முறை சரிதானா? நாம் பேசும்போது உச்சரிக்கும் சொற்களும் தவறாக உள்ளதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதுபற்றி ஒரு பதிவு போடவும்.”
நீங்கள் கேட்பது சரிதான். கஙசஞ என்பதை ka nga cha gnya என்றுதான் உச்சரிக்க வேண்டும். ஆனால் ஆரம்பப் பள்ளியிலேயே தவறாகத்தான் பயிற்றுவிக்கின்றனர். அதாவது கஙசஞ உயிர்மெய் எழுத்துகளைச் சொல்லும்போது ச என்பதை cha என்றும், வல்லினங்கள் சொல்லும்போது மட்டும் அதை sa என்றும் சொல்லித்தருகின்றனர். கஸடதபற என்பதில் sa என்பதும் பிழைதான்!
இதன் காரணமாகவே எந்தச்சொல்லை எப்படி உச்சரிக்கவேண்டும் என்பதில் அநேகருக்கும் குழப்பம் உண்டு. பிழையோடே நாமும் கல்வி கற்று ஒப்பேற்றிவிட்டோம்.
எங்கள் ஊரில் மூக்குறிஞ்சி வாத்தியார் என்று இருந்தார். ஏன் இந்தப் பெயர்? சளி மூக்கடைப்பு ஒழுகலுடன் வரும் சிறுவர்களை “உறியாதே, உயிர்மெய்யைப் பழகு!” என்பாராம். அதன்படி நாம் சொல்லிப்பார்த்தால், வல்லினம் என்பது நாக்கின் பின்புறத்திலிருந்து ஒலி எழுந்து ஒவ்வொரு எழுத்துக்கும் மேல்தட்டில் நாக்கு தொடும் நிலை சிறிது சிறிதாக முன்னேறி வந்து உதடுகளில் வந்து முடிகிறது. ஆக ka cha என்பதே சரி, ka sa என்பது தவறு. இதைப்பொறுத்தே சொற்களை நாம் உச்சரிக்கும் விதம் அமைகிறது. இக்காலத்தில் அதை யாரும் பெரிதாய்க் கண்டுகொள்வதில்லை.
திருப்புகழ் ஓதுதல் நாக்கு சுழற்சிக்கும் மூச்சுப்பயிற்சிக்கும் உகந்தது. "முத்தைத்தரு பத்தித் திருநகை" பாடலில் உச்சரிப்பு ஒலிகள் உதடுகளுக்கும் முன்வரிசைப் பற்களுக்கும் ஒட்டியே அமையும். பிற்பாடு அது மெல்ல மத்திம நிலைக்கு வந்து, அதன்பின் நாக்கு பின்புறம் தொடுமாறு சொற்களை அருணகிரியார் அமைத்திருப்பார். மென்மையில் தொடங்கி அதன்பின் கரடுமுரடாகி, பிறகு இரண்டுமே கலந்து வரும். இதுதான் tongue twister என்பது. வாசியும் நரம்பு மண்டலம் சீர்பெறும்.
தமிழின் பெருமையை முழங்குவது ஒருபக்கம் இருக்கட்டும், அந்தத் தமிழ் எழுத்துகளின் உச்சரிப்பைத் தமிழாசிரியர்கள் சிரத்தையுடன் ஆரம்பப்பள்ளியில் சொல்லித்தராவிட்டால் தமிழுக்குத்தான் இழுக்கு! வயதானபின்பு பற்கள் கொட்டிவிட்டால் எதுவும் செய்யமுடியாது, பல்லு போனால் சொல்லு போச்சு! பல்செட் போட்டால் உச்சரிப்பு ஏறக்குறைய அருகில் வந்தாலும் அது செயற்கையாக ஒலிக்கும். அதனால்தான் பல் விழுந்த பொக்கை வாயர்களை வேதமந்திரம் ஓத, பதிகம் பாசுரம் பாட அமர்த்த மாட்டார்கள். அவர்கள் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளலாம்.
அதனால்தான் வேத மந்திரங்களை ஓதச் சிறுவயதிலையே பயிற்சி தருவார்கள். வேத பாடசாலையில் சிறுவர்கள் ஸ்லோகம் சொல்லும்போது விரல் கணு அடையாளம் வைத்துக்கொண்டு கையை ஏற்றி இறக்கி ஒலி அழுத்தம் உணர்ந்து உரக்க உச்சரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். வர்ணம் மாத்திரை பலம் சாமம் ஸ்வரம் என உச்சரிப்பை எங்கெங்கு எப்படி எவ்விதம் சொல்வது என்று அத்தியயனம் செய்யும்போது பிழையின்றிக் கற்றுக் கொள்வார்கள். ஆனால் நம் தமிழில் எது சரியான ஒலி என்று உணர்ந்து திருத்திக் கொள்ளும்போது வயதாகிவிடுகிறது. 😀
ஆக இப்படியாக மருத்துவமும் பக்தியும் சேர்ந்ததுதான் நம் மொழி. ஆய்த எழுத்தான ஃ சொல்லும்போது இரு காதுகளும் அடைத்து, அழுத்தம் மேற்புறம் எழுந்து ஆக்ஞா சக்கரம் பகுதியில் குவியும். அந்தப் பகுதிதான் மூன்றாவது கண் ஃ இருக்கும் இடம். உள்ளே ஊசித்துவாரப் பிரம்மரந்திர வாயில் அமைந்துள்ள இடம், ஆகாய சிதம்பரத்தின் வாயில்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக