About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

ஞாயிறு, 24 நவம்பர், 2024

ஆய்வாளர் எதிர்கொள்ளும் சிரமம்!

 அண்மையில் ஒரு மின்னஞ்சல் எனக்கு வந்தது. PhD பட்டத்திற்கு ஆய்வு செய்யும் ஒரு வாசகர் அதை அனுப்பியிருந்தார்.

"வணக்கம் ஐயா🙏 தங்களின் போகர் 7000 நூலை முழுதும் படித்தேன். இந்த காலகட்டத்தில் நான் படித்த நல்ல படைப்புகளில் இதுவும் ஒன்று. நான் முனைவர் பட்ட ஆய்வாளர் ...... கல்லூரி, குற்றாலம். என் ஆய்வுக்கான தலைப்பு 'சித்தர்களின் பாஷாண ரகசியங்களும் சிலைகளும்'. எனக்கு ஐயங்கள் பல உள்ளன. நான் அனுப்பியுள்ள இப்பாடல்கள் இடம்பெற்ற காண்டம்/ பாடல் எண்கள் எது என நீங்கள் எனக்கு உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்."

"சகோதரி! மேற்படி பாடல்களை ஏழாயிரத்தில் அலசிப் பார்த்துவிட்டேன். அச்சு அசலாக எங்குமே இப்படியான பாடல்கள் இல்லை. பதிப்பாகும் பல நூல்களில் இதுபோல்தான் முன்னுக்குப்பின் முரணாகய்ப் பாடல்களின் மேற்கோள் இருக்கும். புத்தகத்தை ஆசிரியர் எப்படியேனும் முடிக்கும் எண்ணத்தில், பாஷாணம் என்றாலே போகர்தான் எனவும், போகர் என்றால் எழாயிரம்தான் என்றும் அவர்களே யூகித்து எழுதி விடுகிறார்கள். சரி பார்ப்பதில்லை. அப்படிச் செய்யும்போது  நூலின் பெயர், காண்டம், பாடல் எண், என எந்த ஆதார விபரமும் இல்லாமல் பாடல்கள் இருக்கும். Bibliography பக்கத்தில் நூலின் பெயர், ஆசிரியர், பதிப்பகம், பதிப்பாண்டு போன்ற தகவல்கள் இருக்கவேண்டும். ஆனால் இவற்றைக் கடைப்பிடிக்கத்தவறி விடுகிறார்கள். ஆதாரம் பற்றிய சந்தேகம் தெளிவுற அநேக சித்தர்களின் மூலப்பாடல் நூல்களை நீங்கள் படிக்கவேண்டும். ஆனால் அத்தனையும் படிக்க உங்களுக்கு அவகாசம் போதாது.

இப்பாடல்கள் சித்தர்களின் சரக்கு வைப்பு, வாத வைத்தியம், போன்ற பல நூல்களில் இருக்கச் சாத்தியம் உண்டு. எந்தவொரு திடமான ஆதார மேற்கோள் இல்லாததால் பலபேர் இதை உண்மை என நம்பித் தவறாகவே இணையத்தில் போகருடைய பாடல்கள் என்றே பரப்பி விடுகிறார்கள். இவை எந்த நூலில் இடம்பெற்றுள்ளன என்பதைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோற்போரில் ஊசியைத் தேடும் வேலைதான்" என்று பதிலளித்தேன்.

"ஐயா, தங்களுடைய பதில் கண்டேன்.  கண்டறிந்து சொன்னதற்கு மிக்க நன்றி. நீங்கள் சொல்வதும் உண்மைதான். வேறொரு சித்தர் இயற்றிய பாடலுக்கு அவசரத்தில் போகர் பெயரை வைத்து முடித்துவிட்டார் போல. இப்படியெல்லாம் நூலாசிரியர் செய்தால் என்னைப் போன்ற ஆய்வாளர்கள் நிலை கஷ்டம்தான்" என்று பதில் போட்டிருந்தார்.

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக