ஏகாதசி/ சிவராத்திரி மற்றும் சில முக்கிய தினங்களில் ஒரு பொழுது இருப்பதைப்பற்றி என் உறவுக்கார பெரியம்மா சிலாகித்து என்னிடம் சொன்னார். இந்த விரதம்/ உபவாசம் எல்லாம் சற்றும் ஒத்துவராத எனக்கு “ஒரு பொழுதுனா எப்படி இருப்பீங்க?” என்று கேட்டேன்.
“என்ன இப்படி கேட்டுப்ட? அன்னைக்கு ராத்திரி சாதம் சாப்பிட மாட்டேன். இட்லி, தோசை, கொழுக்கட்டை, பூரி இதமாதிரிதான் சாப்பிடுவேன்” என்றார்.
“இதுலெல்லாம் அரிசி பருப்பு உளுந்து எல்லாமே இருக்கே.. ராத்திரி நேரம் எண்ணெய் மிளகாய்பொடி எல்லாம் குழைச்சு சாப்பிட்டா நெஞ்செரிச்சல் வரும்.. அதுக்கு மோர் சாதம் சாப்பிடக்கூடாதா?” என்றேன்.
“அதெல்லாம் உசிதமில்ல. காலங்காலமா இப்படித்தான் வழக்கம். அப்படி இல்லாட்டி பால் பழம் மட்டும் சாப்பிடலாம்” என்றார்.
“பழ-ஆகாரம்’ மட்டும்தான் இருந்திருக்கும். ஆனால் பேச்சுவாக்கில் யாரோ அதை பல-ஆகாரம்னு பெயர் மாத்தி இட்லி, தோசை, அடை, போண்டா, சாப்பிடலாம்னு சொல்லியிருக்கணும்னு நினைக்கிறேன்” என்றேன்.
“ஆமா ... எல்லாம் தெரிஞ்சவனாட்டம் பேசு” என்றார் கோபமாக.
“வெறும் மோர் சாதம் சாப்பிடறதைவிட உங்க பலகாரம் டிஃபன் ரொம்ப புஷ்டியா இருக்கு. அப்போ நிஜமான நிர்ஜல உபவாசம் எப்போ இருப்பீங்க?” என்று கேட்டேன்.
“அட போடா... இதுதான் ஒரு பொழுது... நீ பலகாரம் தின்னா தின்னு தின்னாட்டி போ” என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினார்.
- எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக