திருப்பரங்குன்றம் எபிசோட் இன்னும் ஓய்ந்தபாடில்லை. தினசரி செய்தியில் எப்படியும் இடம் பெற்றுவிடுகிறது. அந்த மலையின் பின்னணி என்ன, அங்கே சமாதியிலுள்ள பெருஞ்சித்தர்கள் யார், மகத்துவம் எத்தகையது என்பதை இப்பதிவில் காணவுள்ளோம்.
மதுரையின் சிக்கிந்தாமலை ரகசியங்கள் பற்றி போகர் ஏழாயிரம் நூலில் ஐந்தாம் காண்டத்தில் உரைத்துள்ளார். சீனத்து மக்கள் வானில் பார்த்து அதிசயித்த பளபளக்கும் பஞ்சலோக செம்புரவியைப் பற்றி உங்களுக்கு நினைவிருக்கிறதா? பழைய பதிவில் அதைப் பார்த்துள்ளோம்.
அப்புரவியை அளித்த திருவேல மகரிஷி சிக்கிந்த மலையிலுள்ள சித்தரிஷியிடம் போகரை அனுப்புகிறார். இம்மலையில் சமாதியிலுள்ள சிக்கிந்த மகரிஷியைக் கண்டு தரிசித்து உபதேசம் பெற போகர் கெகன குளிகையிட்டு அங்கே வரும்போது அம்மலையே லிங்க ரூபமாய்த் தெரியவே இறங்குகிறார். பரமனே குன்று வடிவில் இருக்க இது பரங்குன்றமானது.
நான்கு வாசல்கள் கொண்ட வலிமையான கோட்டையைப்போல் மலை கம்பீரமாய் இருக்கிறது. அங்கே எண்ணற்ற சித்தர்கள் சூழ்ந்திருக்க, போகரைத் தடுத்து நிறுத்துகிறார்கள். தான் காலாங்கியின் சீடர் என்றும் திருவேல மகரிஷியாரின் கட்டளைப்படி இப்பரங்குன்றில் இறங்கி சிக்கிந்த மகரிஷியைத் தரிசிக்க வந்த காரணத்தையும் சொல்கிறார். மயில் இவரை அடுத்த மேல் நிலைக்கு இட்டுச் செல்கிறது.
வைகை நதி பாயும் வளமிக்க நாட்டில் சிக்கிந்தா மலையின் கீழே முத்தான வடிவேலர்க்குக் கோயிலும், அருகில் அழகான சுனையும், மலையின் உச்சியில் சுரங்கமும் உண்டு. நான்கு யுகம் கடந்து நின்ற மூத்த சித்து, கலியின் அறுபதாம் ஆண்டில் சமாதி விட்டு வெளிவரும் சமயம், போகர் அவர்முன் தெண்டனிட்டுப் பணிந்து நின்றார். அசுவினி மகரிஷி உபதேசம் தந்ததைப்போல் இவரும் சித்திக்கான உபதேசமும், செம்புரவிக்கு மந்திரமொழி கட்டளைகள் (command language for onboard flight control) தரும் ரகசியத்தையும் வழங்குகிறார். அவர் சமாதியைவிட்டு எழுந்து வரும்போது பல அதிசயங்கள் நடந்தன. சுனையறுகே நின்று கைதட்ட மச்சமுனிகள் மேலே நீந்தி வரலாயிற்று. அதன் பிறகு கள்ளர்தேச அழகர்மலை, யானைமலை, திருவில்லிப்புத்தூர், சதுரகிரி ஆகிய தலங்களுக்குப் போகர் பறந்து போகும் கட்டங்கள் பின்னால் வருகிறது. இதுதான் நான் சொல்ல வந்த சாரம்.
சிக்கிந்தா மகரிஷி இருந்த மலையையும் சமாதியையும் பிற்காலத்தில் சிக்கந்தர் மலையாகவும் தர்காவாகவும் மாற்றியது கலியின் கோலங்கள். சிக்கிந்தமலைமீது உயிர்களை வெட்டி அசைவம் சமைத்துப் பரிமாறும் இஸ்லாமியரின் மதவழிபாடு நமக்கு நெருடலைத் தரும்.
மக்கதேசம் போய் யாக்கோபு என்று பெயர் மாறிய ராமதேவர், அழகர்மலை ராக்காயி அம்மன் கோயில் நூபுரகங்கை வரும் பாதையில் சமாதி கொண்டார். மலைநாட்டுச் சதுரகிரியில் எண்ணற்ற மூத்த சித்தர்கள் சமாதியான விவரங்கள் ஏற்கெனவே பார்த்தாயிற்று. காலாங்கி ஞானவிந்த ரகசியம் 30 நூலில் இந்த விஷயங்களைக் காலாங்கிநாதர் விரிவாக உரைத்துள்ளார்.
மூத்த சித்தர்களின் பெருநூல்களை ஆதாரமாகக்கொண்டு திருப்பரங்குன்றம் சர்ச்சையை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். பல யுகங்கள் சமாதியில் இருந்து வெளியே வந்த சிக்கிந்தாமலை மகரிஷியார் எப்படி இஸ்லாமியத் துறவியாகச் சித்தரிக்கப்பட்டார்? பாறை சமாதி எப்படி எப்போது தர்கா ஆனது? இது பின்னாளில் வந்த புனைவுதான் என்றாலும் நிரூபிக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. அன்றே இரு மதத்தினரின் சர்ச்சையைப்பற்றி சொல்லும் ஆங்கிலேயரின் கெஜட் மிஞ்சிப்போனால் 18-19 ஆம் நூற்றாண்டில் எழுதியதாக இருக்கும். ஆகவே பழமையான நூல்களை ஆய்வு செய்து இதற்கு விடைகாண வேண்டியது நீதிமன்றம்தான்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக