முருகனை ஏற்கும் தமிழர்கள் சிலர் இராமனை ஏற்பதில்லை. இராமனோ/சேதுவோ எதுவுமே உண்மையில்லை என்று எல்லாம் தெரிந்ததுபோல் வாதிடுவார்கள். முருகனின் படைவீடுள்ள பழனியின் திண்டுக்கல் மாவட்டமானது இராமாவாதரம் உண்மைதான் என்பதை நிரூபித்துள்ளது. எப்போது, எப்படி?
அது 1935-40 இடைப்பட்ட காலம். பழனி ஸ்ரீதங்கவேல் சுவாமிகள் சிறுவனாக இருந்தபோது தான் பார்த்ததை விவரிக்கிறார். தன் அப்பா பெருமாள்சாமி, தாத்தா கர்ணபெருமாள் ஆகியோருடன் இவர் புஷ்பத்தூர் அருகே ஒரு கிராமத்திற்குப் போய் வரும்போது அங்கே புகை வண்டிக்கான தண்டவாளம் அமைக்குப் பணிகள் நடைபெற்று வந்தன. இவர்கள் அங்கே கடக்கும்போது பணியில் ஈடுபட்டிருந்த மேஸ்த்ரி “ஐயா, இங்கே ஏதோ சதுரபலகை மாதிரி பெரிய கல்லு இருக்கு. அதுல பொக்கிஷம் இருக்குமோ.. பாண்டியன் காலத்துதா இருக்கும்போல” என்று சொல்லிக்கொண்டே அதை அப்புறப்படுத்த முயன்றுள்ளார். சுவாமிகளின் அப்பாவும் தாத்தாவும் உதவி செய்ய, கடப்பாரையைக் கொண்டு அதைச் சிரமப்பட்டு நகர்த்தி வைத்தனர்.
உள்ளிருந்து கமகம நறுமணப் புகை மேலே வீசியது. பள்ளம் உள்ளே எட்டிப்பார்த்த இவர்களுக்கு ஒரே ஆச்சரியம். ஒரு சித்தபுருஷர் பத்மாசனத்தில் அமர்ந்திருந்தார். தலைமுடி ஜடாமுடியாய் வளர்ந்து அவிழ்ந்து பரவிக்கிடக்க, கை நகங்கள் எல்லாம் வேர்கள்போல் வளர்ந்து பூமிக்குள் ஊடுருவிப் போயிருந்தது. அவருக்கு முன்னே இரண்டு தீபங்கள் சுடர்விட்டு எரிந்து கொண்டிருந்தன.
அது மதிய வேளை. சில நிமிடங்களில் வெய்யில் அவர்மீது பட்டதும் கண்களைத் திறந்து தலையைத் தூக்கிப் பார்த்துள்ளார். “என்ன இராவண சங்காரம் முடிந்துவிட்டதா?” என்று அவர் கேட்டுள்ளார். இவர்களுக்கு ஒன்றும் புரியாமல் திகைத்துள்ளனர். “சாமி, நீங்க என்ன கேக்கறீங்கனு விளங்கலை” என்று தாத்தா சொன்னார். “ஓஹோ, கலியுகம் பிறந்துட்டுதா” என்றார். யாரும் பதில் சொல்லாமல் திகைத்துப் பார்க்கும்போது, கைகளைக் கோர்த்து அவர் தியானத்தில் மீண்டும் கண்ணை மூடினார். மூன்று நிமிடத்திற்குப் பிறகு தீபங்கள் மறைந்தன, அதன்பின் மூன்று நிமிடத்தில் சித்தபுருஷரே மறைந்து போய்விட்டார்.
அவர் அமர்ந்திருந்த இடத்தில் விபூதியைப்போல் வெள்ளைவெளேர் என்று மணல் இருந்தது. தாத்தா செய்வதறியாது தன் மேல்துண்டைக் கழட்டி கீழே குனிந்து மணலை அள்ளி முடித்துக்கொண்டு வீடு திரும்பினார்களாம். மேஸ்திரி உட்பட மக்கள் பலரும் கைநிறைய எடுத்துக் கொண்டார்கள். வெள்ளிமணல் பழனி அருங்காட்சியத்தில் உள்ளதாம்.
இராவண சம்காரம் முடிந்துவிட்டதா என்று கேட்டதைப் பார்த்தால்... அவர் இராமாவதாரம் காலம் முதலே பல லட்சம் வருடங்களாக அங்கே சமாதியில் இருக்கும் சித்தபுருஷர் என்பது தெரிகிறது. இத்தனைக் காலங்கள் ஆகாரம்/தண்ணீர் இல்லாமல் அங்கே தவத்தில் இருக்க முடிந்தது என்பது உச்சநிலை. அவர்கள் ஜீவனை பிரம்மத்தில் வைத்து ஜீவகர்ப்ப யோகத்தில் இருந்துள்ளனர். இராமனின் தாய் கோசலை தன் மகனைக் காக்குமாறு முருகனை வேண்டிக்கொண்டு அனுப்பினாள் என்று வால்மீகி கூறுகிறார். ஆக இன்னும் பழனியின் சுற்றுவட்டார பகுதியில் சித்தபுருஷர்கள் யோகசமாதியில் இருக்கவும் சாத்தியமுண்டு.
தங்கவேல் சுவாமிகள் சமாதியாகி இன்றைக்கு இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது. “வருங்காலத்தில் உலகப்பிரசித்தமாகும் சித்த நூல்களை நீ எழுதப்போகிறாய். அதை எழுதத் தேவையான ஞானம் அதுவாக உன்னுள் வந்திறங்கும்” என்று அன்றே என்னைப்பற்றி அவர் சொன்னார். அதன்பின் பத்தாண்டுகள் கழித்து 2013இல் 'போகர் 7000: சப்தகாண்டம் ஒரு பார்வை' விளக்கவுரை எழுதினேன். சுவாமிகளின் குருநாதர்தான் தவத்திரு மானூர் சுவாமிகள்.
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக