படிக்கலைனாலும் வாங்கி வைக்கணுமா? எதற்கு? அது நாளடைவில் பொலிவிழந்து மக்கிய வாசம் வந்து தூசியில் கிடக்கும். நண்பர்களோ உறவினர்களோ வந்து வாசிக்கக் கேட்டால் உடனே அதை இரவல் கொடுக்கத் தயங்குவார்கள். ஏனென்றால் புத்தகங்கள் வெளிச்சுற்றுக்குப் போனால் திரும்பி வராது என்ற நம்பிக்கை. 😀
பணம் கொடுத்து வாங்கியது தனக்கும் பயன்படாமல் பிறர்க்கும் பயன் தராமல் ஒரு தலைமுறைக்குப் பூட்டியே இருப்பது விரயம். ஒவ்வொரு வீட்டிலும் "என்றாவது பின்னாடி தேவைப்படும்... இருக்கட்டும்.." என்று சொல்லியே பல உபகரணங்கள் பிசுக்குப் படிந்து சீண்டுவாரின்றிக் கிடக்கும். அப்படியொன்று இருப்பதே நாளடைவில் மறந்து போகும்.
புத்தகம் வாங்கப் போதிய வசதி இல்லாமல் ஏங்குபவர்கள் ஒருபுறம், பெருமைக்கு வாங்கி அதை வாசிக்காமல் பாதுகாப்பவர்கள் இன்னொருபுறம். இந்தப் போக்கை என்னவென்று சொல்ல?
நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது Ali Baba and the Forty Thieves கதை புத்தகம் வகுப்பு நூலக அடுக்கில் ஒன்றுதான் இருந்தது. அதை ஒவ்வொரு மாணவனும் இரண்டு நாள்வரை வைத்துக்கொண்டு வாசித்துவிட்டுத் தர அனுமதியுண்டு. முப்பது மாணவர்களின் கைகளில் புரண்டு இரண்டு மாதங்கள் கழித்து வரும்போது அதில் சோறு போட்டு ஒட்டிய பக்கங்கள், ஆங்காங்கே குறுக்கு நெடுக்காகத் துண்டுக்காகிதப் பிளாஸ்திரியுடன் டிங்கரிங் செய்யப்பட்டு அலங்கோலமாய் வரும். கடைசி பக்கத்தில் 'வண்ணானுக்கு பாக்கி 2.50, குப்புசாமி விலாசம், குழந்தையின் abcd கிறுக்கல்கள்' என சகலமும் இருக்கும். 😂 அதெல்லாம் ஒரு காலம்!
நல்ல நிலையில் பொருளோ புத்தகமோ பயன்படாமல் வெகுகாலமாக உங்களிடம் இருந்தால் யாருக்கேனும் கொடுத்து விடுவதே உத்தமம்.👌
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக