About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

வியாழன், 17 ஏப்ரல், 2025

மந்திரவொலியின் சக்தி!

 “கோயில் கும்பாபிஷேகம் நடக்கப்போகுது இல்ல, யாகசாலையில தினமும் மந்திரங்கள் சொல்லி பூஜை, வேதபாராயணம் நடக்குதாம்.. போய் உக்காந்து பார்த்துட்டு வாங்க” என்று கிராமத்துப் பெரியவர் தன் பேரன்களிடம் சொன்னார்.

“தாத்தா, போர் அடிக்கும்.. பந்தல் முழுக்க ஒரே புகையும் வெக்கையுமா இருக்கும். வேத மந்திரம் எதுவும் புரியாது... அங்கே போய் என்ன செய்ய?” என்று சிறுவர்கள் கேள்வி கேட்டனர்.

“கண்ணுங்களா, அதுல ரொம்ப பெரிய சூட்சுமம் இருக்கு. மந்திரம் புரியாட்டாலும் பரவால்ல. நான் சின்ன பிள்ளையா இருந்தப்ப அதைப்பத்தி நம்ம குருக்கள் ஐயாவோட பாட்டனாரு எங்களுக்கு ரகசியம் சொன்னாரு. அது என்னனு சொல்றேன்” என்று விளக்கினார்.

அதாகப்பட்டது, வேத மந்திரங்கள் எல்லாமே ஒவ்வொரு சந்த அளவில் ஏற்ற இறக்கத்துடன் சொல்லும்போது, ஒலி உச்சாடனங்கள் பலவித அதிர்வுகளை எழுப்புகிறது. அதையெல்லாம் உடல் கிரகித்துக்கொண்டு பல அதிர்வலைகளில் திசுக்களைச் சக்தியூட்டியும், நோய்வாய்ப்பட்ட ஆபத்தான திசுக்களை அழித்தும், ஒவ்வொரு ஆறாதாரச் சக்கர மண்டலங்களைச் சுற்றியுள்ள உறுப்புகளில் சக்தி அதிர்வுகளைத் தந்து புதிய திசுக்களை உற்பத்தியாக்கியும் நம் தேகத்தை வலுவாக்குகிறது. 

ரிஷிகள் நமக்களித்த வேதமந்திர உச்சாடனங்களை நம் விருப்பத்திற்கேற்ப கூட்டியோ குறைத்தோ இடைவெளி விட்டோ வேறு ஒலி மாற்றியோ சொல்ல விதியில்லை. வேதகோஷம் கேட்பதற்கே இப்படியான பலன் என்றால் ருத்திராட்சம் அணிந்து மந்திரங்களை ஓதுவார்க்குக் கிட்டும் பலன் அளப்பரியது. 


ஆரம்பகால வேத அத்தியயனம் பாடம் நடக்கும்போது மாணவர்கள் கைகளை உயர்த்தி இறக்கி இடம் வலம் அசைத்து ஓதும்போது கைவிரல்களின் கணுவைத் தொட்டு எண்ணிக்கை வைத்துகொள்வது குருகுல முறை. உச்சாடனத்தில் உதாத்த (மேல் நிலை), அநுதாத்த (கீழ்), ஸ்வரித (மத்திமம்), என அசைவுகள் உண்டு. வெவ்வேறு ஸ்தாயி ஸ்வர மாத்திரையில் ஆங்காங்கே இடைவிடாமல் சொல்லும்போது மூச்சுப் பயிற்சியால்  நுரையீரல் கொள்ளளவு மேம்படுவதோடு தேகத்திலுள்ள திசுக்கள் சிறிய நுண்ணணு பேட்டரி மின்கலம்போல் செயல்படும். உச்சந்தலையில் நுண் சிகையானது பிரபஞ்ச ஆற்றலைப் பெற்றுத்தரும். அதனால்தான் மெல்லிய சிறு குடுமிகூட இல்லாமல் கிராப் தலையுடன் வேத மந்திரம் சொல்ல, வேள்விச் சடங்கு நடத்த உட்காரக்கூடாது என்பார்கள்.

மூளைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்கள் புத்துயிர் பெற, பாதம் கெண்டைக்கால் தொடை மார்பு தோள் தலை என அனைத்திலும் நம்மையறியாமலே இலகுவான உணர்வு மேலோங்கும். சித்தர்களும் சக்திவாய்ந்த பீஜங்களை அப்படியே தங்கள் அஷ்டக்ர்ம மந்திரங்களில் சொன்னது குறிப்பிடத்தக்கது. சித்த வைத்தியப்படி ஒரு மண்டலம் பத்தியத்துடன் மருந்து உண்டால் நோய்கள் குணமாகும். அதுபோல் இந்த வேதமந்திர கோஷத்தை ஒரு மண்டலம் (48 நாள்) அமர்ந்து காதுகொடுத்துக் கேட்டாலே நல்ல பலன் கிட்டும். 


சமஸ்கிருத மந்திரம் உசத்தி என்றால், தமிழ் மட்டும் குறைந்ததா? இல்லை! தமிழும் சக்தி வாய்ந்தது. சிவன் உயர்வானவன் என்றால் சக்தியும் அப்படித்தான்! தமிழில் மெல்லினம்/இடையினம் எழுத்துகள் முக்கியமானது. அவ்வொலிகளைக் கன்னாபின்னாவென மாற்றி உச்சரித்துச்சொல்லி வந்தால் ஆபத்தில் முடியும். தமிழ் மொழிதானே என்று அசட்டையாக இருக்கக்கூடாது. நாளடைவில் மரபணு கட்டமைப்பில் கோளாறு வரும், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். அந்தந்த ஒலி அதிர்வுகள் சம்பந்தப்பட்ட ஆறாதாரச்சக்கர உறுப்புகள் பலதும் நோய்வாய்ப்பட்டுப் பாதிக்கப்படுவது உறுதி. இக்காலத்தில் பலரும் இதை உணர்ந்து கொண்டதாய்த் தெரியவில்லை.

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக