படத்திலுள்ள செய்தி இன்று கண்ணில் பட்டது. இதைப்பற்றி விமர்சிப்பதா அல்லது பாராட்டிப் புகழ்வதா என்று எனக்குத் தெரியவில்லை.
மாநிலத்திலுள்ள அரசுப்பள்ளிகளுக்கு நம் கல்வித்துறைதான் எல்லா வசதிகளையும் செய்யவேண்டும். அதற்கான செலவையும் ஏற்கவேண்டும். முன்னாள் மாணவர் பெருத்த நிதியைத் தருகிறார் என்றால் அவரே அப்பள்ளியைத் தத்தெடுத்து நடத்தலாம். இன்னும் சொல்லப்போனால் அவரே எளிமையாக ஒரு பள்ளியை நிறுவி மேல்நிலைவரை இலவசமாகக் கல்வியை வழங்க ஆவன செய்யலாம். முன்னாள் மாணவர்களும் ஊர் மக்களும் சேர்ந்து நிதி திரட்டி அரசுப்பள்ளி/ கல்லூரி வளர்ச்சிக்குத் தர வேண்டும் என்றால் பெயரில் ஏன் அரசு என்ற முன்னொட்டு வரவேண்டும்?
மாநிலங்களவை MP ஒவ்வொருவருக்கும் தொகுதி மேம்பாட்டு நிதியாக The Member of Parliament Local Area Development Scheme (MPLADS) ஆண்டுதோறும் ₹5 கோடி வழங்கப்படுகிறது. அதிலிருந்து அரசுப் பள்ளிக்கூடத்திற்கான கட்டுமானம், விரிவாக்கம், நூலகம், அறிவியல் கூடம் போன்ற அபிவிருத்திப் பணிகளுக்கும் அவ்வப்போது பரிந்துரை செய்து நிதியை வழங்கலாம்.
ஆனால் எவ்வித நிதியுதவி இல்லாமல் நம் கொள்ளுத் தாத்தா காலத்தில் தொடங்கிய எத்தனையோ தரமான நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் இன்று போதிய வசதிகள் இல்லாமல் மூடும் தருவாயில் இயங்கி வருவதைப் பார்க்கிறோம். ('பள்ளிக்கூடம்' திரைப்படம் நினைவுக்கு வருகிறது.) அதுபோன்ற தனியார் பள்ளிகளுக்கும் அதன் பழைய மாணவர்கள் தாராளமாக நிதியுதவி செய்ய முன்வர வேண்டும். புறக்கணிப்பது தவறு!
-எஸ்.சந்திரசேகர்


