குருவிடம் அமர்ந்து உபதேசம் கேட்கும் சீடன் உள்ளது போன்ற இப்படம் என்னுள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்கியது. ஏன்? என்ன காரணம்?
கடந்த மாதம் என் வாசகர் ஒருவருடன் தொலைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் சித்தர்கள் பற்றிய யூடியூப் காணொளிகள் பதிவேற்றி வருகிறார். அன்று ஸ்பீக்கர் ஆன் செய்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அவர் அருகில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த எழுபத்தைந்து வயதான அவருடைய அப்பாவும் இருந்துள்ளார்.
யாருடன் நீ பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று அப்பா தன் மகனைக் கேட்க, இவர் என்னைப் பற்றியும் என் புத்தகங்கள் பற்றியும் சொல்லியிருக்கிறார். அவர் அப்பா தீட்சை பெற்ற யோகி என்பதை நான் பிற்பாடு அறிந்துகொண்டேன்.
என் குரலை உன்னிப்பாகக் கேட்டுக் கொண்டிருந்த அவர் அப்பா உடனே கண்களை மூடி தியானத்தில் அமர்ந்து என்னுடைய முற்பிறவிகளை எல்லாம் பார்த்துவிட்டுச் சொல்லிக்கொண்டு வந்தாராம்.
சந்திரசேகர் வைத்திய சாஸ்திரத்தில் கரை கண்டவர், கொல்லிமலையில் ஆகாச கங்கை அருகே ஆசிரமத்தில் சீன உருவில் இருந்த போகரிடம் நேரடி சீடராக இருந்து பயிற்சி பெற்றவர். மிகுந்த வைராக்கியம் கொண்டிருந்த இவர் மீது போகருக்கு எப்போதும் ஒரு கண் உண்டு. அக்கூட்டத்தில் இவர்தான் மிகவும் இளம் வயது சீடர். அதற்குமுன் பழனியில் போகரின் நேரடி பராமரிப்பில் இருந்து அவருடைய செல்லப்பிள்ளையாகவே இருந்தார். இப்போதும் போகர் இவரைத் தன் கண்காணிப்பில் வைத்துள்ளார்.
சந்திரசேகர் அதன் பின் எடுத்த ஐந்து பிறவிகளில் சித்தர்கள் குழுவிலேயே முழுக்க முழுக்க இருந்து, இறுதியில் மௌன நிலைக்குப் போய் காட்டுக்குள் சமாதியில் அமர்ந்துவிட்டார். அநேக சித்தரிஷிகள் இவருடன் தொடர்பில் உள்ளார்கள். மூத்த சித்தர்கள் இவர் மூலம் இன்னும் சீரிய பணிகளைச் செய்து முடிக்கச் சித்தமாய் உள்ளனர். போகருடைய அம்சமாக வழிகாட்டுதல்படி வந்துள்ள இவர் சித்த புத்தகங்கள் எழுதி வருகிறார்" என்ற ரகசியத்தையும் சொன்னாராம்.
"அதனால் போகர் சம்பந்தமான வீடியோ பதிவுகளை நீ யூடியூபில் பதிவேற்றும் முன் சந்திரசேகர் பார்க்கட்டும். ஒப்புதல் தந்தபின் செய்" என்று அவருடைய அப்பா சொல்லியுள்ளாராம்.
இதில் இன்னோர் ஆச்சரியமும் உள்ளது! தற்போது என்னைப் பற்றி ஐயா சொன்ன ரகசியத்தைக் கடந்த ஆண்டு மூன்று பேர் ஏற்கெனவே சொல்லியுள்ளனர். போகர், கோரக்கர், கொல்லிமலை மௌனகுரு சித்தர், ஆகியோருடன் என்னையும் பார்த்ததாக ஒரு கிரியா யோகி சொன்னார். அவர் என்னிடம் இதைத் தெரிவித்தபோது "அதெல்லாம் இல்லீங்க. நீங்க சதா போகருடைய நினைப்பாவே இருப்பதாலும், என்னோட சித்த நூல்கள்/ முகநூல் பதிவுகள் யாவற்றையும் வாசித்து வரும் தாக்கத்தாலும் என் முகம் உங்க ஆழ் மனசுல பதிஞ்சுபோச்சு... மத்தபடி வெறெதுவுமில்லைங்க" என்று சொல்லி முற்றுப்புள்ளி வைத்தேன்.
ஆனால் இப்போது ஐயா அதைத் திறந்து போட்டுவிட்டார். எல்லாம் சிவசித்தம் வகுத்தபடி நடக்கிறது. குரு பதம் போற்றி! 🕉️🙏
-எஸ்.சந்திரசேகர்