சித்தர் பாடல்கள் எல்லாம் மேலோட்டமாகப் புரிந்துகொள்ளக்கூடிய எளிமையுடனும், அதேசமயம் மறைப்பு நிறைந்த ஆழமான மெய்ஞானப் பொருள் தரும் பாடலாகவும் இருக்கும். ஒவ்வொரு சித்தர் எடுத்துரைக்கும் பாங்கும், பாணியும், விவரிக்கும் பொருளும் தனி முத்திரையைப் பதிக்கும்.
அப்படியொரு வகைதான் அழுகணிச் சித்தரின் பாடல்கள். கோரக்கரின் சீடர்களில் ஒருவரும் பொற்கொல்லரான அவர் அழகு அணிகளைச் செய்தவர் என்பதால் அழகணிச்சித்தர் என்றும்; மக்களுக்கு மெய்ஞானம் உணர்த்திட கண்களில் கண்ணீரோடு அழுதபடி பாடியதால் அழுகண்ணி என்ற பெயர் வந்தது என்றும், இருவிதமான பெயர்க் காரணங்கள் உண்டு.
உதாரணத்திற்கு இங்கே ஒரு பாடல் தந்துள்ளேன். இதைப் படிக்கும்போது “ஆஹா, சுவையான சர்க்கரைப்பொங்கல் செய்ய நல்ல ரெசிபி தந்துள்ளார் போல. ஆடி முதல் மார்கழி வரை நீடிக்கும் சம்பா பருவத்தின் நெல்லை அரிசியாக்கி அதைச் சமைத்து, பொங்கிய சாதத்தில் உழக்கு நெய் ஊற்றி, குழையாமலும் நறுக்கரிசியாகாவும் இல்லாமல் முத்து முத்தாய் வரும்போது அதில் மா பலா வாழை சர்க்கரையும் சேர்த்தால் தேனாமிர்தமாக இருக்கும். அதை உண்டு களைப்பாற வேண்டியதுதான்” என்று நினைக்கத் தோன்றும்.
ஆனால் இதில் ஓடும் மூச்சைப்பற்றியும் வாசியோகத்தையும் உணர்த்தும் மெய்ப்பொருள் உள்ளது என்பது மறைப்பாக உணர்த்தப்பட்ட சங்கதி. உள்ளே வெளியே ரேசகம்/ பூரகம்/ கும்பகம் முறையில் பிராணாயாமம் உழக்குழக்காக உள்ளே ஓடுகிறது. இந்த மூச்சுக்காற்று இடகலை/ பிங்கலை/ சுழுமுனை வழியே முக்கனியாக ஓடி, முத்து போன்ற ஆக்ஞா பிரம்மரந்திர வாசல் துளையை வாசிக்கால் தாண்டினால் அங்கே மேலே கபால பீடத்திலிருந்து தேனாமிர்தம் சிந்தும். அதை உண்டால் களைப்பேதும் வராது, யோகசமாதியில் அமர்ந்திட சக்தி கிட்டும் என்ற பொருளில் அமைந்ததாக யோகிகள் சொல்வதுண்டு.
சித்த மரபில் சீடர்களாக இருந்தோ, ஒரு வாசியோகியிடம் மாணவராக இருந்தோ இப்பாடல்களை எல்லாம் பிசிறு இல்லாமல் கற்றுக்கொண்டால் மட்டுமே மெய்ப்பொருள் அறிய முடியும். இல்லாவிட்டால் நாம் என்னத்தைக் கண்டோம்?
சொல்லப்பட்ட விஷயம் என்னவோ எல்லா சித்தர்களும் உணர்த்தும் ஒரே பொருள்தான். ஆனால் அவர் விவரிக்கும் விதமும் கையாளும் சொற்களும் சிவவாக்கியார் பாடலைப்போன்றே நம்மைக் குழப்பி அதன் உண்மைப் பொருளை அறியமுடியாமல் தவறான விளக்கத்தைப் பரப்பச்செய்யும்.
- எஸ்.சந்திரசேகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக