குருக்ஷேத்திர யுத்தம் முடிந்த பின்னர் கிருஷ்ணன் துவாரகை திரும்பியிருந்தார். அங்கு அவர் முப்பத்தாறு ஆண்டுகள் தர்மத்தோடு ஆட்சி புரிந்தார். தன் பிறப்பின் நோக்கங்கள் அனைத்தும் முடிவடைந்து விட்டது எனும் எண்ணமும் கிருஷ்ணனுக்கு உண்டானது.
கிருஷ்ண பரமாத்மாவின் சுதர்சன சக்கரம் மறைந்து போனது. பாஞ்சஜைன்யம் எனும் கிருஷ்ணனின் சங்கும் இருக்குமிடம் தெரியாமல் போய்விட்டது. கிருஷ்ணனின் தேரும், பலராமனின் ஏர் ஆயுதமும் காணாமல் போயின. காந்தாரி இட்ட சாபம் பலிக்கத் தொடங்கிவிட்டதோ? கிருஷ்ணனிடம் சென்று பலரும் முறையிட்டனர். செய்த பாவங்கள் தீர மக்கள் தல யாத்திரை போய்வரும்படி கிருஷ்ணன் பணித்தான். மக்களும் கிளம்பினார்கள் ஒரு கிரகண சமயத்தில். அதுவே ஒரு கெட்ட சகுனமாக ஆகிவிட்டது.
தன் இனத்தின் அழிவு மட்டுமல்ல தன்னுடைய முடிவும் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டான் கிருஷ்ணன். மன அமைதி நாடி அருகிலுள்ள ஒரு வனத்தினுள் சென்றான். அங்கு நெடிது வளர்ந்திருந்த புல் வெளியொன்றில் சிறிது ஓய்வெடுக்க கால்நீட்டிப் படுத்தான். அவன் உடல் முழுவதும் புல்லினுள்ளும் பாதங்கள் மட்டும் ஒன்றின் மேலொன்றாக வைத்துப் படுத்தான்.
அப்போது அந்த வனத்தினுள் வேட்டைக்கு வந்தவன் புல்வெளியில் மான் ஒன்று தலையை நீட்டிப் படுத்திருப்பது போல காட்சியளித்த கிருஷ்ணனின் பாதங்களை நோக்கி முன்பு மீனின் வயிற்றிலிருந்து மீட்டு இரும்புத் துண்டு பொருத்திய அம்பை எய்தான். அது கிருஷ்ணன் பாதங்களைத் துளைத்துக் கொண்டு உடலின் உள்ளே சென்றது. கிருஷ்ணனுக்கு உடலின் பாதங்களைத் தவிர வேறு எங்கு அடித்தாலும் மரணம் நேராது. தரையில் படுத்திருந்த கிருஷ்ணனின் கால்கள் மானின் தலையைப் போல இருந்ததால் அதை நோக்கி எய்த அம்பு கிருஷ்ணனின் உயிரைக் குடித்தது. அன்று காந்தாரி கொடுத்த சாபம் இப்படி நிறைவேறியது.
அஸ்த்தினபுரத்தில் இருந்த அர்ஜுனனுக்கு கிருஷ்ணனின் மறைவு குறித்த தகவல் நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் வியாச பகவான் மூலம் தெரியவந்தது. துவாரகை நகருக்குள் கடல் புகுந்தது. அத்தோடு பெருமை மிகுந்த அந்த நகரம் கடலினுள் மூழ்கியது. “வில்விஜயா! நீங்கள் அனைவரும் இந்த மண்ணுலகத்தில் பிறவி எடுத்த நோக்கம் நிறைவேறிவிட்டது. கிருஷ்ணனின் நோக்கமும் நிறைவேறி விட்டது. உங்களிடம் இருந்த அஸ்திரங்கள் அனைத்துக்கும் இனி வேலை இல்லாமல் போய்விட்டது. அர்ஜுனா! நீயும் உன் சகோதரர்களும் இனியும் இந்த பூவுலகில் இருக்கத் தேவையில்லை. ஆகையால் நீங்களும் புறப்படுங்கள்” என்று ஆணையிட்டார்.
அது மாசி மாதம், கிமு.3102. துவாபர யுகம் முடிவுற்றது. கலியுகம் பிறந்தது. பாரெல்லாம் பாவங்களும் துன்மார்க்க நெறிகளும் துளிர்விட்டு எழ, தர்மம் என்னும் பசு ஒற்றைக் காலில் நின்று திண்டாடியது. யுகம் கலிபுருஷனின் கட்டுப்பாட்டில் வந்தது. இக் கலியை வதம் செய்ய திருமால் 'கல்கி' அவதாரமாக வருவார்.
ஓவியர்: வட்டாடி பாபைய்யா
சித்தர் போகர் தன் ஜெனனங்களைப் பற்றி சொல்லும் போது.. தானே பஞ்சபாண்டவர்களாகவும் கிருஷ்ணனாகவும் தோன்றியதாகச் சொல்கிறார். ஒன்றே பலவாக இருந்து கதாபாத்திரங்கள் நிகழும் அதிசயத்தைப் பாருங்கள். போகரை தரிசித்தால் திருமாலை, முருகனை, இராமனை, கிருஷ்ணனை தரிசித்ததற்கு சமம். சித்தம் இருப்பின் வாய்க்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக