About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

சனி, 4 ஜனவரி, 2020

சரித்திரம் படைக்கும் குறிப்பேடுகள்!

இன்றைக்கு அச்சுத் தொழில்நிட்பம் நினைத்துப் பார்க்க முடியாத நிலையில் முன்னேற்றத்தை அடைந்துவிட்டது. கைப்பிரதியின் சங்கதியை தட்டச்சு செய்து, அதை புத்தக அளவுக்கு மின்னூல் வடிவாக்கம் தந்து, படங்களை ஆங்காங்கே சேர்த்து, மெய்த் திருத்தம முடித்து, ஒளிநகல் எடுத்தபின், அச்சுக் கூடத்தில் தரமான தாளில் அச்சாகி, பாரங்கள் எண்ணிக்கையில் பிரிக்கப்பட்டு, வண்ணமய முகப்பு அட்டைக்குள் அவை அடுக்கி பைண்டிங் செய்யப்பட்டு, காய்ந்தபின் பதிப்பாளரின் கடைக்கு வந்து சேர்ந்து விடுகிறது. அவ்வளவு ஏன்... நூல் வெளியீடு விழாவிற்கு சுமார் 10 பிரதிகள் மட்டும் போதும் என்றால், அவசரத்திற்கு மட்டும் தேவையானதை POD (Print on Demand) என்ற முறையில் செய்துகொள்ளவும் இன்று வசதி உள்ளது.

ஆனால் 250 ஆண்டுகளுக்கு முன் இப்படி எந்த ஒரு வசதியும் இல்லாத காலத்தில், பிரெஞ்ச்/பிரிட்டிஷ் ஆட்சியில் ஆளுநருக்கு 'துபாஷ்' @ மொழி பெயர்ப்பாளர் பணியில் இருந்தவர்களுக்கு ஆவணங்களை எழுதி கோர்வையாக தைத்து வைப்பது என்பது கை ஒடியும் வேலைதான். அப்படியான பிரம்மாண்ட வடிவில் ஆவணங்கள் எழுதி வைத்தவர்தான் 18 ஆம் நூற்றாண்டில் பாண்டிச்சேரியில் கவர்னர் டியூப்ளே கீழ் பணிசெய்த துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை.

இத்தனையையும் தமிழில் Diary யாக எழுதி வைத்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அந்த புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்தது. அதில் அக்காலத்தில் 1736-1761 வரை நிலவிய அரசியல், சமூகம், வரலாறு, மற்றும் தன் சொந்த விஷயங்களையும் பல பகுதிகளாக டைரி எழுதி பராமரித்தார். இத்தனைக்கும் அவர் 52 வயது வரைதான் வாழ்ந்தார். மிகுந்த செல்வாக்குடன் கோலோச்சினார் என்று தெரிந்தது. பிற்பாடு அத்தனையும் 1900 களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல வால்யூம்களாக வெளிவந்தன. இன்றும் அவை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆவணக் களஞ்சியம் துறையில் பாதுகாக்கபடுகின்றது. அவற்றில் சில பக்கங்களை நான் படித்துள்ளேன். அந்நாளைய நிகழ்வுகளைப் பதிவு செய்த விதம் ஆச்சரியமாக இருந்தது.

இப்போது எதற்கு இதைப்பற்றிச் சொல்கிறேன்? வரும் வாரம் ஆனந்தரங்கம் பிள்ளையின் தமிழ் அச்சுப்பிரதிகள் புதுவையில் வெளியாக உள்ளது என்ற செய்தியைப் பார்த்தேன். அவருடைய சந்ததியில் வரும் பேரப்பிள்ளை திரு.ஆனந்தரங்க ரவிச்சந்தர் இதை முனைந்து செய்துள்ளார் என்பது பாராட்டத்தக்கது. பல வீடுகளில் எடுத்த பொருளை எடுத்த இடத்திலே வைக்காமல் எங்கெங்கோ முறையின்றி வைப்பார்கள். சில வீடுகளில் குடும்ப ஆவணங்களை டிரங்கு பெட்டியில் சர்வ ஜாக்கிரதையாக பாதுகாத்தவர்களும் உண்டு.

"ஆமா, சொத்து பத்து விட்டுட்டு போயிருந்தா பாதுகாக்கலாம்... மூதாதையரோட மக்கிப்போன புஸ்தகம் காகிதத்தை வெச்சிகிட்டு என்ன செய்ய? தூக்கி வெந்நீர் அடுப்புல போடு!" என்று அன்றைக்குச் சொன்னவர்கள் இப்பொக்கிஷம் எதிர்காலத்தில்  பணம் சம்பாதித்துத் தரும் என்பதை நினைத்துப் பார்த்ததில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக