About Author

A postgraduate in Physics and Business Administration with 25 years of experience in IT /BPO /Construction/ Education and Training sector.

திங்கள், 9 மார்ச், 2020

வெள்ளிமலை தரிசனம்!

கயிலாயம் எனப்படும் Mount Kailash மீது இதுவரை யாரும் சமீப காலத்தில்  ஏறியதில்லை. ஆனால் எப்போதோ பிக்கு மிலரேபா ஏறிப்போய் கால் பதித்தார் என்று படித்துள்ளேன். பொதுவாகவே கைலாசபதி அடிவாரத்தின் சில கிலோமீட்டர் தொலைவிலேயே பரிக்ரமா என்னும் பிரதக்ஷ்ணம் செய்வதுடன் சரி. மலையில் சிவனும்-சக்தியும் இருப்பதால் அது புனிதமானது என்று பல யுகங்களாக நம்பப்படுகின்றது. அடிவாரத்தை நெருங்கும்போது அருகிலேயே கயிலாயம் இருப்பது போன்று தோன்றும். ஆனால் நெருங்கநெருங்க அது இன்னும் தொலைவிலேயே இருக்கும் என்று யாத்ரீகர்கள் சொல்லக் கேட்டதுண்டு.

இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத சில பன்னாட்டு மலையேறுவோர் கடந்த காலங்களில் ஏற முயற்சித்து மாண்டுபோனது அதிகம். அதனால் திபெத் அரசு அங்கே நுழையத் தடை விதித்தது. ஹிந்துக்களுக்கும் பௌத்தர்களுக்கும் அது புனிதமானது.

நமக்குத் தெரிந்து மலைமீது இலங்கை வேந்தன் இராவணன் ஏறவில்லை. தான் அங்கே வந்தும்கூட தன்னை ஈசன் கண்டுகொள்ளவில்லை என்ற கோபத்தில் அங்கு அடிவாரத்தில் நின்று கைலாய மலையை அசைத்துத் தூக்கிப் பிடித்தான். சிவபெருமான் தன் காலால் அழுத்த, மலை இராவணன் மீது விழுந்து அவனை நசுக்கியது. அப்போது தன் தவறை உணர்ந்து பதினைந்து சுலோகங்கள் கொண்ட 'சிவதாண்டவ ஸ்தோத்திரம்' பாடினான். அதில் சிவதாண்டவ அதிர்வுகள் வெளிப்படும். நீங்களே இதை வேக நடையில் படித்துப் பார்த்து உணரலாம்.

"ஜடாடவீ கலஜ்ஜல ப்ரவாஹ பாவித ஸ்தலே
கலேவலப்ய லம்பிதாம் புஜங்க துங்க மாலிகாம்
டமட் டமட் டமட் டமன் னினாதவட் டமர்வயம்
சகார சம்டதாம்டவம் தனோது னஃ ஶிவஃ ஶிவம்"

இதற்கு இன்னொரு விளக்கமும் சொல்வார்கள். இராவணன் பக்தியுடன் இதைப் பாடியபடி ஏறினான் ஆனால் உச்சியை அடையும்முன் சிவன் வெகுண்டு உதைத்தான், அவன் விழுந்தபோது ஏற்பட்ட வடுவே கயிலாய தென்முத்தின் நீளமான கோடு என்று வேறு விதமாகவும் சொல்வதுண்டு.

அங்கே சிவனும்-சக்தியும், ரிஷிகளும், வாசம் செய்கிறார்களா? இதை யாரேனும் கண்டுள்ளனரா? அது tetrahedral பிரமிட் வடிவம் போல் நாற்பட்ட கூம்பாக உள்ளது.

நம்மைப் போன்ற சாதாரண மக்களின் கண்களுக்குப் புலப்படுவதில்லை. ஆனால் சித்த ரிஷிகளும் மகான்களும் அங்கே ஈசனையும்-ஈஸ்வரியையும் கண்டு தரிசித்துள்ளனர். யார் சாட்சி? சித்தர் போகர்தான்! அவர் ககன குளிகையை வாயில் வைத்துக்கொண்டு தன் குருநாதரை எண்ணியவாறு அருகே செல்ல ஒவ்வொரு உயர நிலையிலும் கணபதி, முருகன், பிரம்மன் என ஒவ்வொருவரும் தரிசனம் தந்தனர். இதுவரை சித்தர்கள் எழுதிவைத்த எண்ணற்ற சமஸ்கிருதம்/தமிழ் நூல்கள் புராணங்கள் எல்லாமே அங்கு ஈசனின் கட்டுப்பாட்டில் உள்ளதைக் கண்டார்.

போகர் ஆகாயத்தில் பறந்து போகவில்லை என்று வாசியோகிகள் சிலர் சொல்வதுண்டு. நம் உடலிலுள்ள ஆறாதார சக்கரங்களில் கடவுளர் வாசம் செய்வது உண்மை என்றாலும், கயிலாயம்/மேரு/ பொதிகை எனப்படும் சகஸ்ரார/மேரு சக்கரத்தில்தான் அந்தத் தரிசனத்தைக் கண்டிருக்க முடியும் என்பார்கள். அப்படி என்றால் அவர் ஏன் பறக்க வேண்டும்? குளிகைகளில் எட்டுவகை உண்டு என்கிறார் போகர். அதில் குண்டலினியை ஏற்றவும் சமாதியில் நிலைக்கவும் சில குளிகைகள் உண்டு. ஆனால் இந்த ககன குளிகை அதற்கானதல்ல! அவரது பாடலை வாசிப்பவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம் என்று சொல்வார்கள். அவர் தன் பாடலில் உணர்த்தும் நிலைகள் முதுகுத் தண்டின் நிலைகள் என்றும், சக்கரங்களில்தான் தரிசனம் செய்தாரே தவிர, நேரில் அல்ல என்று வாதிடுவார்கள்.

ஆனால் உண்மை என்ன என்பதை போகருடைய பாடல் சொல்கிறது. "ஏ பாலகா! யார் நீ? இங்கே ஏன் வந்தாய்? மனிதர்கள் தூல தேகத்துடன் இங்கு பிரவேசிக்க விதியில்லை. ரிஷிகளின் சாபத்திற்கு ஆளாகாதே!" என்று ஒரு ரிஷி சொல்கிறார். அதற்கு இவர், "திருமூலர் வழியில் வரும் காலாங்கி நாதரின் சீடன் போகர் நான்" என்றதும் இவர் அறியவேண்டிய மேரு ரகசியங்களைக் கற்பித்து மேல் நிலைக்கு அனுப்புகிறார். அவரை ஆங்காங்கே மூஞ்சூர், மயில், கருடன், அன்னம், யானை என ஒவ்வொன்றும் சுமந்துச்சென்று சேர்பிக்கிறது. பிரளயத்தில் ஈசன் இப்பூமியை நீரில் எடுத்து மீட்டு ஏழு கண்டங்களாகப் பிரித்துப் போட்டான். அங்கெல்லாம் சப்தசாகரங்களைக் கடந்துபோய் போகர் பிரவேசித்து சமாதி நிலையில் பல யுகங்கள் இருந்துள்ளார்.

குமரிக் கண்டத்தில் இருந்தோர்க்கு பொதிகையே மேரு, நம் மொத்த கண்டத்திற்கு உத்தர பாகத்திலுள்ள கைலாசமே மேரு என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சித்தர்களின் பாடல் இதை தெளிவாக உணர்த்துகின்றது. அப்படிப்பட்ட கயிலாய மலையை நாம் சிவனாகவே பாவித்துப் போற்றவேண்டும். அங்கு சிவ தரிசனம் கிட்டினால் அது அவரவர் பேறு. ஓம் நமசிவாய!

கொசுறுத் தகவல்:- மிலரேபா 10-11 ஆம் நூற்றாண்டில் கயிலாய குகையில் தியானம் செய்தார். அதே காலகட்டத்தில் தன் சீன மக்களை எதிரிகளிடமிருந்து (மங்கோலியர்?) காக்க போகர் சீனாவில் மன்னனாகப் பரிபாலனம் செய்தார் என்கிறார் கோரக்கர். தூல தேகத்துடன் கயிலாய உச்சிக்கு ஏறிப்போக முடிந்த அந்த பிக்கு யார்? உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

-எஸ்.சந்திரசேகர்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக