பள்ளியில் என்னுடன் எட்டாம் வகுப்பில் பரத்குமார் என்ற மாணவன் படித்தான். அவன் சிறுவயதிலேயே தந்தையை இழந்தவன். உடன்பிறந்த அண்ணன் அக்கா உண்டு. அவனுடைய அம்மா வெளியுலகம் அறியாதவர். அவனுடைய அண்ணனும் அக்காவும் பத்தாம் வகுப்புவரைதான் படிக்க முடிந்தது. இருவரும் காலையிலேயே வேலைக்குப் போவார்கள். இருவரும் சேர்ந்து மொத்தமாக மாதம் ரூ.250 ஊதியம் ஈட்டினர்.
அவன் படிப்பில் சராசரிதான் என்றாலும் பள்ளிக்கு ஃபீஸ் கட்டமுடியாத காரணத்தால் குடும்ப ஏழ்மையை விளக்கிச்சொல்லி அவன் அம்மா பள்ளியின் தாளாளர் காலில் விழுந்து எப்படியேனும் கட்டணமின்றி படிக்க வைக்க உபகாரம் செய்யுமாறு கெஞ்சினார். அவனுக்குச் சீருடை மற்றும் பாடப் புத்தகங்களை அவரே இலவசமாகக் கொடுத்தார். மழைக்காலம் வந்தாலோ சீருடை அழுக்காகி விட்டாலோ அதை துவைத்து உலர்த்திப் போட்டுக்கொள்ள வேண்டிய நெருக்கடியான சூழ்நிலை.
மாலையில் ஒருநாள் பள்ளிவிட்டுப் போகும்போது ‘சந்துரு எங்க வீட்டுக்கு வாடா, இங்கிருந்து தூரமில்லை’ என்றான். ‘சரி வர்றேன்’ என்று சொல்லிவிட்டு அவனுடன் போனேன். சிறிய காம்பவுண்டுக்குள் ஓடு வேய்ந்த ஓர் அறையை இவர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தனர். உள்ளே போனதும் அவன் அம்மாவுக்கு என்னை அறிமுகம் செய்தான். நாங்கள் தரையில் உட்கார்ந்தோம். அவருடைய காது மூக்கு கழுத்தில் ஒரு குந்துமணி தங்கமில்லை. அவர்கள் பரிதாபமான வாழ்க்கைச் சூழலில் உள்ளது அப்போதுதான் எனக்கே தெரியும்.
அவர்கள் குடியிருந்த வீடு 10x10 அளவுதான் இருக்கும். வாடகை ரூ.75. ஒரு சதுர அறையின் மூலையில் தரையில் மண்ணெண்ணெய் அடுப்பு, இன்னொருபக்கம் மர பீரோ மற்றும் சில பாத்திரங்கள். சிறிய டிரான்சிஸ்டர் மட்டும் என் கண்ணில் பட்டது. மேஜை நாற்காலி ஏதுமில்லை, கால்நீட்டிப் படுத்தாலே வீடு நிரம்பிவிடும்.
அவன் அம்மா பேசும்போது எங்கள் பள்ளித் தாளாளர் அவனுக்குச் செய்யும் உதவியைச் சொன்னார். தன் மகனும்/மகளும் வீட்டுக்கு வந்ததும் சிற்றுண்டி தரவேண்டும் என்பதால் அவன் அம்மா அடுப்பில் சப்பாத்தியும் கீரை கூட்டும் செய்து கொண்டிருந்தார். எனக்கும் அவனுக்கும் தட்டில் சூடாக இரண்டு சப்பாத்தியும் கீரை கூட்டும் வைத்துக் கொடுத்தார். ‘சாப்பிடுப்பா’ என்றார். சந்தோஷமாய் சாப்பிட்டேன். தலையைத் தூக்கித் தண்ணீர் குடித்தபோது எதிரே சுவற்றில் அவனுடைய தந்தையின் படம் தூசியில் தொங்கிக் கொண்டிருந்தது.
‘பாடத்துல இவனுக்கு ஏதேனும் புரியலைனா கொஞ்சம் சொல்லிக்குடுப்பா... மத்த பசங்க இவனோட பழகுறதில்லைன்னு சொல்வான்’ என்றார். ‘சரி.. நான் வரேன்’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன். நான் ஒன்பதாம் வகுப்பிற்கு வேறு பள்ளிக்கு மாறினேன். பிறகு அவனைப்பற்றிய எந்த செய்தியும் தெரியாது.
எப்போதெல்லாம் சப்பாத்தி-குர்மா சாப்பிடுகிறேனோ அப்போது சட்டென்று அவர்களுடைய நினைவு ஒருகணம் வந்துபோகும். ‘என்றென்றும் உணவுக்குக் குறையின்றி அவர்களுக்குப் படியளந்திடு இறைவா’ என்று உடனே என் மனம் வேண்டிக்கொள்ளும். நம் வாழ்க்கைப் பயணத்தில் எத்தனை விதமான மனிதர்களை நாம் கடந்து செல்கிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக