ஓம் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரம்தான் ஆதிசிவனின் மொத்த உருவம். இப்பிரபஞ்சம் தோன்றியது அவனது சிருஷ்டியினாலே. இடகலை பிங்கலை சுழுமுனை சங்கமிக்கும் முச்சந்திதான் ஆக்ஞா சக்கரம். ஹூன் என்ற பீஜம் சொல்லி மூன்றாவது கண்ணிலிருந்து சிருஷ்டிகள் தொடங்கின. அஷ்ட சித்திகளும் சித்திக்கும் ஆதித்தலம் அதுவே. வாசியின் பாதை ஓட்டமெடுத்து ஆக்ஞா சக்கரத்தில் சுடர்விட்டு எரியும் அகத்தீயால் அவன் சுடலை என்றும், உடலெங்கும் வெண்ணீறு பூசி சுடுகாட்டில் சுடலையாக அலைந்து திரிந்ததால் பித்தன் எனப்படுகிறான். பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட விஷத்தைப் பருகி அதைத் தொண்டையில் நிறுத்தியதால் ஸ்ரீகண்டன் Srikandan எனப்படுகிறான்.
(ஸ்ரீ என்றால் திருமகள், மேன்மை, இனிப்பு, விஷம் என்று பல பொருளுண்டு. நீங்கள் நினைக்கும் Srikanth ஸ்ரீகாந்தன் என்பது வேறு. திருமகள் மனம் கவர்ந்த மாதவன் என்பது பொருள். நமக்கு இனிப்புதான் விஷம். அதை உண்டால் கபம் சேரும். ‘கபம் சிவத்துக்கு எமன்’ என்ற முதுமொழி நினைவுக்கு வருகிறதா? கபம் /வழலை விலகினால்தான் முச்சந்தி சக்கர வாசல் (பிரம்மரந்திரம்) திறக்க ஆகாய அம்பலமே வெளிப்படும். அங்குதான் மஹாபத்மம் என்ற தாமரைக் காட்டில் ஆயிரத்தெட்டு இதழ்கள் நடுவே சிவன் சச்சிதானந்தமாகத் திரிந்து சக்தியுடன் ஐக்கியப் படுகிறான். வழக்காடு மன்றத்தில் சித்த சுவாதீனமில்லாதவர்போல் பேசி வம்புக்கிழுத்த ஈசனைப்பார்த்து சுந்தரர் 'நீர் பித்தன்' என்றார்.)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக