இரண்டு மாதங்களுக்குமுன் மயிலாடுதுறையிலிருந்து அம்மையார் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டு பேசினார். “நான் ஓம்சக்தி உபாசகி. எதையோ இன்டர்நெட்டில் தேடும்போது ஒவ்வொரு முறையும் உன்னுடைய புத்தகமும் வீடியோவும் வந்தது. நீண்ட நாளாகவே உன்னிடம் பேசணும்னு இருந்தேன் கண்ணு. இன்னைக்குத்தான் அம்பாள் பேசச்சொல்லி உத்தரவு கொடுத்தா” என்றார்.
“சரிங்க.. என்ன விஷயம்?” என்று கேட்டேன். “கொரோனவுக்கு உன் மூலமா தீர்வு கிடைக்கும்னு அம்பாள் சொன்னா. ஆகாயத்துல சீனாவும் அமெரிக்காவும் ஏகப்பட்ட செயர்கோள்களை சுத்தவிட்டு நம்ம பூமிக்கு மேலே கிருமியையும் பரப்பி, எல்லா ஆன்மிக அருளார்கள் மனங்களையும் முடக்கிப்போட்டு வெச்சிருக்காங்க. நான் அதை எல்லாம் tracking செய்து செயலிழக்க வைக்கிறேன். மேற்கொண்டு நான் ஜெபிக்க வேண்டிய மந்திரம் என்னனு நீதான் சொல்லணும்” என்றார்.
“எழுதறதோட என்னுடைய பணி முடிஞ்சுதுங்க. ஒவ்வொரு காண்டத்திலும் உள்ள மந்திரங்கள் பீஜங்கள் எதுவும் என் நினைவுல தங்காது. திரும்பி மூலப்பாடல் நூலை எடுத்துத்தேடி வாசித்துப் பார்க்கணும். அது சிரமம்” என்றேன்.
“உன் குலதெய்வம் அம்மன்தானே கண்ணு? பூர்வீக வீட்டை இப்பத்தான் பார்த்தேன் ஓடு வேய்ந்த தாழ்வான வீடு, அதை அம்பாள் காட்டிட்டா” என்றார்.
“இன்னொரு விஷயம் கண்ணு.. நான் எங்கே போனாலும் அங்கே வெயில் அடிக்காது, என்னோடு சூரியனும் நகர்ந்து வரும். வெயில் படாம மேகத்தை அம்பாள் அனுப்பி வெச்சிடுவா. இஸ்ரோ விஞ்ஞானி ஒருத்தர் வந்து பார்த்து கணக்கிட்டு ஆமா சூரியன் நகருதுன்னு சொன்னாரு” என்றார்.
“ஓ.. ஆச்சரியமா இருக்கே.. சூரியனே நகர்ந்து வருதா.. அமெரிக்காவுக்கு இது தெரியாம போச்சே.. டிவியில உங்களைப்பத்தி இதுவிஷயமா எதுவும் இதுவரை கேள்விப்பட்டதில்லை” என்றேன்.
“நான்தான் இப்போதைக்கு அதை ரகசியமா வெச்சிருக்கேன் கண்ணு” என்றார். உனக்கு நான் மந்திர தீட்சை தரணும். இதுக்கு முன்னாடி எதாவது உனக்கு உபதேசம் ஆகியிருக்கா? என்றார்.
“இப்போவா.. எதுக்கு? எனக்கு உபதேசம் எல்லாம் எதுவும் ஆகலை” என்று ஒரே போடுபோட்டேன். நம்முடைய சித்த அனுபவங்களை, மகான்கள் தந்த உபதேசங்களைப் பற்றி எதுவும் நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அவர் தன்னைப்பற்றி மார்கெடிங் செய்யப் பாடுபடுகிறார் என்பது புரிந்தது.
“கண்ணு, அதோட பரிகாரம்கூட செய்யணும். இவ்வளவு செலவாகும். உங்க மூதாதையர் சந்தோஷப்படுவாங்க” என்றார். என் கொள்ளுப்பாட்டனே நான் தான் என்பதை அவர் உணரவில்லை. அவர் மேற்கொண்டு என்ன கதைக்கிறார் என்பதைக் கேட்க ஆவலானேன்.
“ரெகார்ட் பண்ணிக்கோ கண்ணு... இதோ சக்தியின் பீஜமந்திர உபதேசம்” என்று சொல்லத் தொடங்கினார். இரண்டு நிமிடங்கள் சொல்லி முடித்தார். அவர் சொல்லத் தொடங்கியதுமே என் காதில் எதுவும் விழாதபடி எங்கள் ஜன்னலுக்கு அருகேயுள்ள மாமரத்தில் காகம், குயில், அணில் எல்லாமே ஒரே நேரத்தில் சேர்ந்திசையாக ஒலி எழுப்பி இடைஞ்சல் செய்தது. அவர் முடிக்கும்போது சப்தமும் ஓய்ந்தது. எனக்கு எச்சரிக்கை விடுத்த சகுன நிமித்தத்தை நான் புரிந்துகொண்டேன்.
“கண்ணு, எங்களோட நிலத்துல வீடு கட்டமுடியாம தடங்கலாவே நிக்கிது.. அதை எப்போ முடிப்போம்னு சித்தரைக் கேட்டு சொல்லு. தினம் என்னோட இரண்டு வேளையாவது பேசு கண்ணு. மந்திர அதிர்வு வரும்” என்றார்.
“நீங்கதான் உபாசகர் ஆச்சே நேரடியா அம்பாளையே கேட்டுக்கோங்க.. நீங்க நினைக்கிற மாதிரியான ஆளு நானில்லை, அருள்வாக்கு எதுவும் சொல்லத் தெரியாது” என்றேன். அவருடைய மனதை சற்றே ஆழம் பார்க்க சில கேள்விகள் கேட்டேன். அவருடைய பதில்கள் எதுவும் சரியாகப் படவில்லை.
சுதாரித்துக் கொண்ட அம்மையார், “என்ன கண்ணு.. ரெகார்டு ஆயிடுச்சா? என்றார். “இல்லீங்க Memory space insufficient னு வந்திடுச்சு save ஆகலை. நீங்க சொன்ன எதுவுமே காதுல விழலை. ஆக உங்க உபதேசம் வேண்டாம்னு இருக்கு. நீங்க எந்த நோக்கத்தோட கால் செய்தீங்களோ தெரியாது. என்னால உங்களுக்கு உதவ முடியாது மன்னிக்கவும்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.
அருளாளர்கள் என்ற போர்வையில் சிஷ்ய கோஷ்டியை வைத்துக்கொண்டு சிலர் இப்படித்தான் நம் சமுதாயத்தில் வலம் வருகின்றனர். இவரைப் போன்றவர்கள் என்னதான் உபாசகராகவே இருந்தாலும் தன்னிடம் பேசும் எதிராளியைப் பற்றிய விஷயங்களை யக்ஷிணி/இட்சிணி உதவியுடன் காதில் கேட்டுக்கொண்டு நம்மை நம்பவைக்க முயல்வார்கள். அதையும் மீறி நம்முடைய தெய்வமும், சித்தரும் அவர்களுடைய நோக்கத்தை deactivate செய்ய நம் அருகிலேயே இருப்பார்கள். இவர்கள் உங்களுடன் தினமும் பேச முற்படும்போது உங்களை மனவசியம் mesmerise செய்ய முயல்வார்கள். அதை முறியடிக்க குலதெய்வ தியானமும் மந்திர பந்தனமும் செய்துகொண்டு இத்தகையோரிடம் பேசவேண்டும்.
“ச்சே! வர்றமாதிரி வந்து நழிவிப்போச்சு. முடிந்தவரைப் பேசி கஜகரணம் போட்டுப் பரிகாரம்கிற பேர்ல அமௌன்ட் தேறும்னு நினைச்சேன்...” என்று அவருடைய மைண்ட்வாய்ஸ் நமக்குக் கேட்கிறது. இவ்வளவு தூரம் பேசவிடாம ஆரம்பத்திலேயே இவருடைய அழைப்பைத் துண்டித்திருக்கலாமே என்று நினைப்பீர்கள். ஆனால் இவருடைய உண்மையான நோக்கம் என்ன என்பதை அறிய வேண்டும், அல்லவா?
யாரிடம் போனால் விடிவு கிடைக்கும் என நினைத்தபடி சமுதாயத்தில் பலர் அலைந்து திரிவதைக் காணமுடிகிறது. இறுதியில் பணம்காசு செலவு செய்து எமாறுவோரே அதிகம். அத்தகையவர்களிடம் ஏமாறுவதும் வினைப்பயனே! சிவ சித்தர்களால் மட்டுமே நம் ஊழ்வினைகளைத் தள்ளுபடி செய்யமுடியும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக