‘முக்காலத்தையும் உணர்ந்து சொல்லும் பகவான்’ என்று தலைப்பிட்டிருந்த ஒரு யுடியூப் காணொளி கண்ணில் பட்டது. அருள்வாக்கு சொல்லும் கல்பாக்கம் பகவான் என்ற இறையருளாளருக்குச் சுமார் நாற்பது வயது இருக்கும். சைவம்/அசைவம் வேற்றுமையைப்பற்றி பேட்டி கண்டவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார். வெறும் காய்கறி கீரை வகைகளை உண்டு, அசைவம் சாப்பிடாதவர்களை நீங்கள் எப்படி சைவம் என்று சொல்வீர்கள்? சைவம்/சைவர் என்று எதுவுமில்லை என்றார். காய்/கனி தரும் தாவரங்களுக்கும் உயிர் உண்டு. அதைக் கொன்று உண்பது சைவம் ஆகாது என்று ஜீவகாருண்யம் நோக்கில் மேலோட்டமாகச் சொன்னார்.
இவர் சொன்னது சரியா? அடிப்படை உண்மையைப்பற்றி மாணிக்கவாசகரின் சிவபுராணம் என்ன சொல்கிறது? ‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி...’ என்று ஆன்மாவின் பயணம் போய்க்கொண்டிருக்கும். கீரை, காய்கனி, தாவரங்களும் அதன் வகைகள் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பயன் தரும்படி அதன் சிருஷ்டி அமைந்துள்ளது. என்னதான் அதற்கும் ஜீவன் உண்டு என்றாலும் அவை தியாகத்தின் சின்னமாகப் படைப்பாகி அதன் வளரியல் பயன் முழுமையானதும் அடுத்தடுத்து அதன் ஆன்மா உயர்நிலையை எட்டும். உண்மையைச் சொல்ல வேண்டுமானால் குடிக்கும் தண்ணீரிலும் சுவாசிக்கும் காற்றிலும் ஜீவனுண்டு. உயிரற்ற பஞ்சபூதம் உண்டா?ஒரு தாவரத்தின் உயிர் மூலாதாரமாக இருக்கும் வேரைப் பறிக்க வேண்டுமானால் அதைச் செய்யும் முன் சாப நிவர்த்தி மந்திரம் சொல்லி உயிரூட்டவேண்டும் என்பது சித்தர்கள் விதி. ஆனால் காய்/ கனிகளைக் கொய்வதால் பாவம் வருவதில்லை.
கலியுகத்தில் ஸ்ரீதத்தாத்ரேயரின் முதல் அவதாரமான ஸ்ரீபாதஸ்ரீவல்லபர் விளக்கிய கருத்தை என் நூலிலிருந்து இங்கு பதிக்கிறேன். “ஜீவாத்மா பரமாத்வோடு சங்கமிக்க அது பிரம்மானந்தத்தை உணரும். ஜீவாத்மா வெறும் கல்லாக இருந்தாலும் அது வேதனைகளை உணர முடியும். அதன்பின் அது ஓர் உலோகத்தில் போய் தங்கும். அப்போது அது ஆழ் உரக்க நிலையில்தான் இருக்கும். ஓர் உலோகத்தின்மேல் அமிலத்தை ஊற்றினால் அதற்கு உரக்க நிலையில் வேதனைகள் இருக்கும், அது பிற்பாடு உருக்குலைந்து வேறொரு உலோகத்தினுள் தங்கும். அதன்பின் அது புல்லாகி, மரம் செடி கொடியாகி வேர்விட்டு நிலைத்து உயிர் இருந்தும் உயிரற்றதாக இருக்கும். அதன்பின் அது புழு பூச்சியாக ஏற்றம் பெறும். அடுத்த நிலையில் மீனாக, பறவையாக, விலங்காகப் பரிணாமம் பெறும். அடுத்து பசு என்கிற உன்னத நிலைக்கு வரும். அது தாயாக இருந்து எல்லோருக்கும் பாலமுதை வழங்கித் தியாகம் செய்து, உணவுப் பயிருக்கு உரங்கள் தந்து பிறகு மனிதனாகப் பிறப்பு எடுக்கும். ஒவ்வொரு நிலையிலும் அதனதன் சம்ஸ்காரங்கள் செயல்பாடுகள் ஏற்றபடி அடுத்தடுத்து உயர்நிலையை எட்டுகிறது. கற்கள்/ கனிமங்கள்/ உலோகம் எல்லாமே அப்படியே பிறந்து இறக்கின்றன. பிறகு தாவரங்கள் மரங்கள், என பிறந்து இறந்த பின் மனித பிறப்பை அடைகின்றது. மனிதனாய்ப் பிறந்தபின் அவன் தன்னுளிருக்கும் பரமாத்மாவை உணர்ந்து வீடுபேறு அடையவேண்டும். பாவங்கள் செய்து தாழ்நிலையை அடைதல் கூடாது” என்பதாகும். நம் மறுபிறப்புகள் போக புதிதாய் மனித பிறப்பை எட்டும் இதுபோன்ற ஆன்மாக்களுக்கு அளவே இல்லை. இதை நாம் பெரிதாக சிந்திப்பதில்லை. பிரபஞ்ச தோற்றம் முதல் இன்றுவரை மக்கள் தொகை பெருகித்தான் வருகிறது.
படைப்பான மண்/ பாறைகள்/தாவரங்கள் என எல்லாமேவா நமக்கு உபயோகமாகிறது? உலோகங்கள் அனைத்துமா சமையல் பாத்திரங்களாக, கோயிலில் மணியாக, வேலாக சூலமாக பூஜைப் பாத்திரங்களாக, மடப்பள்ளி அண்டா குண்டாவாக, மின்சாதன உபகரணமாக ஏற்றம் பெறுகின்றன? நமக்குத் தெரிந்து விற்கப்படாமல் பாத்திரக் கடையில் வருடக்கணக்கில் வாங்குவாரற்றுக் கிடக்குப்பவை எவ்வளவோ உண்டு! ஏன்? பயன்பட அந்த ஆன்மாவுக்கு இன்னும் விடிவு வரவில்லை. Nano அளவில் சிந்திக்க வேண்டிய அதி சூட்சுமமான சங்கதி இது.
சைவ உணவுச்சங்கிலி இயற்கையாகவே படைப்பாகியபோது அதை எப்படித் தர்க்கம் செய்ய முடியும்? மலர்கள் இலைகள் கனிகள் என எல்லாமே இறை வழிபாட்டிற்கு/ உணவிற்கு என இருக்கும்போது அதை பறிப்பதால் பாவம் எப்படி வரும்? மனிதனின் சைவ நெறியால் அவை ஆன்ம உயர்வும் படிநிலை ஏற்றமும் பெறுகின்றன என்பதே உண்மை. அதை உயர்த்துவது நமக்குப் புண்ணியமே! உணவுகளில் பிராணிகளைக் கொன்று அசைவம்/புலால் உண்பது மட்டுமே பாவம் என்று கண்டிக்கப்பட்டுள்ளது. பிராணிகள் இவனுக்கு உணவனால் அது ஏற்றம் பெறும் ஆனால் இவன் தாழ்நிலை பிறப்பை அடைகிறான். இதுதான் சூட்சுமம்! ஆக, சைவ நெறி போதிக்கும் உன்னத உணவின் உயர்வை ஆழமாக அறிந்துகொள்ளாமல் இவர் பேசியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக