ஒரு நாட்டின் பிரதமர் ஆகப்பட்டவர் கோயிலுக்குச் சென்றால், அங்கவஸ்திரம்
போர்த்திக்கொண்டு, நெற்றியில் விபூதி சந்தனம் குங்குமம் தரித்துத் தன் பக்தியை
வெளிக்கட்டினால், அதில் தவறென்ன? கங்கையிலும் அயோத்தியிலும் தீப ஆரத்தி எடுத்தாலோ, இமயமலைச்
சாரலில் தியானம் செய்தாலோ, இதில் குற்றம் காண என்ன இருக்கிறது? இந்துத்வா
சாராத அநேகர்களும் இச்செயலைக் கண்டித்தும் பரிகசித்தும் வருவது வேதனையான விஷயம்.
அதைப்போன்றே, அரசியல் எதிரணியினர்களும்!
சமத்துவம் போற்றும் இந்தியா போன்ற நாட்டின் பிரதமரோ /
குடியரசுத் தலைவரோ இந்துவாக இருந்து, தங்களுடைய சனாதனக் கோட்பாட்டைப் பகிரங்கமாக வெளிக்காட்டக்
கூடாது என்று இந்திய அரசியல் சட்டம் எங்கேனும் சொல்லியுள்ளதா? அவரவர்
மத சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்கத் தடை விதிக்கிறதா? இல்லையே! இந்திய அரசியல்
சாசனத்தின் முன்னுரையில், 42-வது திருத்தம் கொண்டுவந்த பிறகுதான், பார்க்கும்
எல்லாவற்றிலும் தவறு கூறத் தொடங்கினார்கள்.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி, தேவையில்லாமல்
அதில் செய்த திருத்தம் என்ன? SOVEREIGN SOCIALIST
என்ற சொற்களை அதில்
இணைத்தார். இது எப்படி இருக்கிறது என்றால், ஆச்சாரமான ஒருவர், நவநாகரிகமாகவும் இருக்க வேண்டும், சமூகத்துவத்துடன்
தர்மநெறியும் காக்க வேண்டும், ஆடு / கோழி வளர்க்க வேண்டும், அதேசமயம் சுத்த சைவமாக இருக்க
வேண்டும் என்று சொல்வது போன்றது.
இன்றைக்குப் பிரதமர் மோடியின் யோசனைகளையும் பாவனைகளையும், சீனா
/ பாகிஸ்தான் தவிர, உலகின் பெரும்பான்மையான நாடுகள் எவ்விதத்திலும் குறை
கூறியதில்லை. உலகமே வியந்து போற்றும் ஆளுமைமிக்க நபராகத் திகழ்கிறார். நேபாளம், இந்து
ராஜ்ஜியம்தான்! அது சீனாவுக்கு அடிபணிந்துபோவதால், மனு சிருஷ்டித்த நேபாளத்தை
அடியோடு மாற்றிவிட முடியுமா என்ன? மதரீதியாக நாம் எவ்விதம் நடத்தை கொள்ள வேண்டும் என்று
ஐரோப்பியர்கள் அறிவுரை சொல்ல விதியில்லை. தன்னுடைய வயதான தாயைச் சென்று
பார்ப்பதும், அத்தாயானவள் பசுவுக்கு உணவு அளித்துவிட்டுத் தன் மகனுக்கு
இனிப்பு ஊட்டியபின், இவர் கையில் நூறு ரூபாயை அன்பளிப்பாகத் தந்ததைப் பலரும்
கேலியாகப் பேசினார்கள். தேர்தலுக்கான ஸ்டண்ட் என்று கிண்டலடித்தனர். மேற்கத்திய
மக்கள், தங்களுக்கு இப்படியொரு பேறு கிடைக்காதா என்று ஏங்கும்போது, நம்
நாட்டில் உள்ள சில துர்புத்திப் படைத்தவர்கள், பரிகாசம் செய்வது அழகன்று.
கடந்த ஆண்டு Infinity
Foundation என்ற அமைப்பின்
தலைவரான அமெரிக்கா வாழ் இந்தியர் ராஜீவ் மல்ஹோத்ரா, இந்தியாவின்
மதகோட்பாட்டுக்கும் ஒற்றுமைக்கும் குந்தகம் விளையும் வகையில் பேசி, சர்ச்சையில்
சிக்கிக்கொண்டார். மேல் நாட்டில், அன்னையர் தினம், தந்தையர் தினம் என்று வருடத்துக்கு ஒரு நாள் வகுத்து, முறைவைத்துக்
கொண்டாடுவதோடு சரி. அதன்பின், அவர்கள் என்ன கதிக்கு ஆளானார்கள் என்று அறிய
முற்படுவதில்லை. ஏனென்றால், அவர்களுடைய கலாசாரமும் வளர்ப்பும் அந்த ரீதியில் உள்ளது.
ஆனால், நம் நாட்டில் சிறுவயது முதலே நாம் எல்லோரும் ஒரே வசுதேவ குடும்பமாக இருந்து
வளர்ந்தோம். என்னதான் நமக்கு வயதானாலும், பெற்றோர் சொல்லை கேளாது போவோமோ? அறவே
இல்லை! இங்கே அப்படிப்பட்ட சிறப்பு தினங்களைக் கொண்டாடும் பழக்கமில்லை. ஏனென்றால், தினமும்
அவர்களைச் சுற்றியே நம் வாழ்க்கை நடக்கிறது. நம் பாரம்பரியத்தில்தான், முந்தைய
மூன்று சந்ததிகள் வரையாவது மூதாதையர்கள் பற்றித் தெரிந்துவைத்துள்ளோம். ஏனென்றால், வம்சாவளி
விவரம் அவர்களுடைய மரபணுவின் அடிச்சுவடாக, நம்முடைய பெயர்களில் தொன்றுதொட்டு வருகிறது. ஆனால், மேற்கத்தியர்கள்
தங்களுடைய வம்சாவளியையும், பெயர்களை நினைவுபடுத்தவும் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில்
உள்ளனர். எவன் ஒருவன் தன் மூதாதையர்களை மறந்தானோ, அவன் நிச்சயமாகத் தன்
குலதெய்வத்தை மறந்திடுவான் என்பது நம் சொல்வழக்கு. உண்மைதான்! ஏனென்றால், குலதெய்வத்தை
அறிந்தால், அவ்வூரில் தன் பூர்வீகத்தையும் தன் பரன்-பரை விவரத்தை
அறிந்துகொள்வான்.
பிரதமர் மோடி, அண்மையில் அயோத்தியில் பூமி பூஜையில் கலந்துகொண்டதை
எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் விமரிசித்தன. இந்திய அரசியல் சட்டப்படி, நாட்டின்
பிரதமர் இதுபோன்ற மதரீதியான விழாவில் கலந்துகொள்ளக்கூடாதா என்ன? அயோத்தி
வழக்கு வெற்றிபெற்றால், தன்னுடைய பதவிக் காலத்தில் அங்கே கோயில் கட்டுவதாகத்
தேர்தல் பிரசாரத்தில் வாக்குறுதி தந்திருந்தால், அதை நிறைவேற்றுவது ஒரு நல்ல
தலைவனின் கடமை. சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன், சோம்நாத் ஆலய கும்பாபிஷேக
வைபவத்தில், அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்
கலந்துகொள்வதை, பிரதமர் நேரு ‘இது சமத்துவ செக்யூலர் கொள்கைக்கு எதிரானதாகும்’ என்று
கடுமையாகச் சாடினார். அதற்கு இவர்,
‘இதில் என்ன இருக்கிறது? ஒரு
கிறித்துவ தேவாலயத்திலோ, மசூதியிலோ அவரவர் விழா நடந்து, அதற்கு
என்னை அழைத்தால், அங்கும் இப்படித்தான் போவேன்’ என்று நேருவுக்குப்
பதிலளித்தார். இதற்குப்பின், நேரு எல்லா முதல்வர்களுக்கும் கடிதம் எழுதினார். ‘இதுபோன்ற மதரீதியான
விழாக்களுக்கும் அரசுக்கும் தொடர்பில்லை. அத்தகையதொரு செயல்பாடு PREAMBLE-க்கு
எதிரானது. அதை அனுமதிக்க முடியாது’ என்று குறிப்பிட்டு எழுதினார்.
அப்படியென்றால், ஒரு பிரதமரோ, குடியரசுத் தலைவரோ, தனிப்பட்ட அளவில் பக்தராக விழாவில் பங்கேற்பதை எப்படிக்
குறைகூற முடியும்? பதவியில் இருந்து அவர்கள் இறங்கும்வரை அவ்விழா
காத்திருக்குமா என்ன? ஆக, சுதந்திரம் கிடைத்த அந்நாள் முதல் இந்நாள் வரை, எதிர்க்கட்சிகள்
திட்டமிட்டு எதிர்த்து வந்துள்ளனர். SECULARISM
என்பதை வேண்டுமென்றே தவறாகச்
சித்தரித்தனர்.
அப்படிப் பார்த்தால்,
1985-ம் ஆண்டு ராஜராஜ சோழனின்
ஆயிரமாவது முடிசூட்டு விழாவுக்கு, இந்திரா காந்தி தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலுக்கு வந்திருக்கவே
கூடாது. ஆனால் வந்தாரே! எம்ஜிஆர் இருந்தபோது, கும்பகோணம் மகாமகம் விழாவுக்கு முந்தைய நாள் இரவே
ரகசியமாகப் போய் தரிசித்துவிட்டு வந்தாராம். பிற்பாடு, 1992-ல்
ஜெயலலிதா தன் தோழியுடன் அசத்தலாகப் போய், அங்கே தீர்த்தவாரியில் பங்குகொண்டு அமர்க்களம் செய்தார்.
பிற்பாடு முதல்வர்கள், ஆளுநர்கள், குடியரசுத் தலைவர்கள் என பலரும் கிறிஸ்துமஸ் திருப்பலி, ரமலான்
நோன்பு, சந்தனக்கூடு உர்ஸ், மகாவீர் ஜெயந்தி என அனைத்து விழாக்களிலும் தவறாமல்
கலந்துகொண்டு வருவது நமக்குத் தெரிந்ததே. பள்ளிவாசல்களுக்கும் தேவாலயங்களுக்கும்
கணிசமான அளவில் நிதி மற்றும் உணவுப் பொருள்களை தமிழக அரசு தந்துதவுகிறது. இன்னும்
ஒருபடி மேலே போய், அரசியல் எதிரிகளைத் தீர்த்துக்கட்ட ஆக்ரோஷ மிளகாய் யாகம், பரிகாரம், மாந்திரீகக்
கழிப்பு என்று சகலத்தையும், பதவியில் இருக்கும்போதே செய்துள்ளார்களே!
பதவியில் இருந்தால், தன்னுடைய மதத்தை வெறுக்க வேண்டும், முக்கியப்
பண்டிகைகளில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளக் கூடாது என்று சட்டத்தைக் காட்டிப்
பேசுவது அபத்தம். ‘இந்துவாகப்பட்டவனுக்கு, பிறப்பு முதல் இறப்பு வரை தன்னுடைய ஸ்மிருதி மற்றும் சமயக்
கோட்பாடுகள் தொடர்ந்து வரும். அதைப் பின்பற்றுவது அவன் கடமை. நாட்டின் தலைவர்
அப்படி அனுசரிக்காமல், தனியே சமத்துவக் கொள்கையைக் கடைப்பிடிக்கச் சொல்வது எளிதல்ல’ என்று, 1963-ம்
ஆண்டு, உச்ச நீதிமன்ற நீதியரசர் கஜேந்திர கட்கர் கருத்து தெரிவித்தார். அதுபோல், அரசியல்
கட்சி எந்தவொரு மதத்தின் கோட்பாடுகளிலும் தலையிடக் கூடாது என்று இருக்கும்போது, திமுக
ஆட்சிக் காலத்தில், தை முதல் நாளைத் தமிழ் வருடப் பிறப்பாகத் திருத்தம் செய்து
உத்தரவு பிறப்பித்த கலைஞரின் செயல் மட்டும் சரியா? ‘தேசியமும் தெய்வீகமும் எனது
இரு கண்கள்’ என்று பசும்பொன் தேவர் பெருமானார் கூறியதை
நினைவுறுத்துகிறேன்.
‘தெய்வீகம் போற்றும் இந்தியா போன்ற நாட்டில், எல்லா மதங்களும் சமம் என்று நேரு / இந்திரா சொன்னதால், இந்நாட்டை எல்லோரும் கிறித்துவ / முஸ்லிம் நாடாக ஏற்கமுடியுமா? அது சகிக்க முடியாத அவலட்சணமாக இருக்கும். சாதி / மத கட்சியே அரசியல் கட்சியாக இருக்கக் கூடாது என்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் 14-16, 25 சொல்வதாகச் சுட்டுவது, இன்று எள்ளளவும் நடைமுறைக்குப் பொருந்தாது. ஏன்? அடிப்படையில் எல்லாமே ஜாதி-மத வாக்கு வங்கியில் மூழ்கியுள்ளதால், பிரித்துப் பார்க்க இயலாது’.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக