நவபாஷாணன் என்கிற நாவலை பெண்ணாகடம் திரு. பிரதாப் பாண்டியன் எழுதியுள்ளார். அவர் என்னுடைய நூல்களை விரும்பி வாசித்து வருபவர், முகநூல் நட்பில் உள்ளார். ‘அண்ணா, என்னுடைய முந்தைய புத்தகத்திற்கு திரு. இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் அணிந்துரை வழங்கினார். இந்த நாவலுக்கு நீங்கள் அணிந்துரை தரவேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். ‘ஆகட்டும்’ என்றேன். தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்குக் காத்திருக்கும் மன நிலையில் அவர் இருந்தார். மனசுக்குள் மத்தாப்பு ஒளிர தன்னுடைய படைப்பு நல்லபடி வர வேண்டுமே என்ற பதற்றமும் தெரிந்தது.
மின்னஞ்சலில் அவர் அனுப்பிய கதையை வாசித்தபின் அணிந்துரை எழுதினேன். நாவலின் கடைசி பத்தியில் பூமி-செவ்வாய் குறித்த ஒரு பாடல் வந்தால் சிறப்பாக இருக்கும், இல்லாவிட்டால் முழுமை பெறாததுபோல் இருக்கிறதே என எண்ணி ஒரு பாடலையும் அதன் பொருளையும் சேர்த்தேன். பிறகு அதுபற்றி அவரிடம் சொன்னேன்.
தான் முன்தினம் கண்ட கனவைப்பற்றி அச்சமயம் என்னிடம் சொன்னார். அதில், நாவலை நான் வாசித்தபின் ‘இதுல ஒரு பாட்டு சேக்கணும் அப்பத்தான் கம்ப்ளீட் ஆனா மாதிரி இருக்கும். அதனால ஒரு பாட்டு சேர்த்திருக்கேன்’ என்று கனவில் நான் வந்து சொன்னதாக ஆச்சரியத்துடன் கூறினார். கனவு மெய்யானது!
சித்தர் வழிபாட்டிலுள்ள அவர் தன் அடுத்த நாவலைப்பற்றி எந்நேரமும் சிந்தையில் நினைத்ததால் இக்கனவு வந்திருக்கும் என்று சொன்னேன். முதல் பாகத்தின் தொடர்ச்சியாக தசபாஷாணன் என்ற நாவலும் இடம் பெற்றுள்ளது. அருணா பதிப்பகம் வெளியிடவுள்ள அவருடைய படைப்பு வெற்றி பெற வாழ்த்துகள்!
-எஸ்.சந்திரசேகர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக